கைநடுக்கத்தை குறைக்க காலத்தை புதிதாக மீண்டும் தொடங்கினால்... வேலி ஆஃப் லாண்டெர்ன்
வேலி ஆஃப்
லாண்டெர்ன்
அனிமேஷன்
ஒரு கிராமம்.
அந்த கிராமத்தின் சிறப்பு, உயரமாக அமைக்கப்பட்ட இடிபாடுகளைக் கொண்ட கோட்டை. கோட்டை
அமைந்துள்ள கிராமத்தில் ஆலிஸ்டைன் என்ற வயதான பெண்மணி, அவரது மகள், மருமகன், பேரன்
ஆகியோருடன் வசிக்கிறாள். வயதான பாட்டிக்கு பார்க்கின்சன் நோய் வந்துவிடுகிறது. அது
பாரம்பரியமாக வரும் குடும்ப நோய். தான் ஆரோக்கியமாக பிறருக்கு பயனுள்ளவளாக இருக்கவேண்டுமென
நினைக்கிறாள். எனவே, ஊரில் உள்ள பழங்கதையில் சொல்லும் விஷயத்தை செய்கிறாள். ஆண்டை மாற்றி
வைப்பது. இதன்மூலம் மக்களுக்கு ஒரே ஆண்டு திரும்பத் திரும்ப வருகிறது. ஆலிஸ்டைன் பாட்டி,
ஆண்டுதோறும் வரும் விளக்கு திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த பணத்திற்கு
காகித விளக்குகளை செய்து கொடுக்கிறாள். அதை மனதிருப்திக்காக செய்கிறாள். கிடைக்கும்
பணம் என்பது செய்யும் உழைப்பிற்கு போதுமானதல்ல. அவளது குடும்பம் பாரம்பரியமாக செய்யும்
வேலை அது. ஆனால் பார்க்கின்சனால் ஏற்படும் கைநடுக்கம், விளக்கை ஏற்றுவதற்கு கூட விடுவதில்லை.
தடுமாறுகிறாள்.
ஆலிஸ்டைன்
எதற்கு இதை திரும்ப திரும்பச் செய்கிறாள் என்றால், அவளுக்கு கைநடுக்க நோய் திரும்பத்
திரும்ப வந்துவிடுகிறது. அவள் நீலநிறப் பூக்களை பறித்து வந்து நீலநிற ஒளியை வரும்படி
வேதியல் சூத்திரம் ஒன்றை உருவாக்குகிறாள். ஆனால், அது வெற்றியடைவதில்லை. அதற்குள்ளாகவே
காலம் கடந்து கைநடுக்கம் வந்துவிடுகிறது. இந்த நேரத்தில் பாட்டியின் மகளுக்கு குழந்தை
உருவாகிறது. அதை அவள் பிரசவிக்கும் நேரம், ஆண்டு இறுதியில்தான். ஆனால், பாட்டியின்
சுயநலத்தால் குழந்தை உருவாகி, உருவாகி அழிகிறது. குழந்தை பிறப்பதற்குள் ஆண்டு மீண்டும்
தொடங்கிவிடுகிறது. சுருக்கமாக டைம் லூப். ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
காலத்தை புதிதாக தொடங்கும் தொழில்நுட்பதை முன்னோர்கள் உருவாக்கியது. கிராமத்தை அழிவில்
இருந்து காக்க. ஆனால் அதை பாட்டி தனது சுயநலனுக்கு பயன்படுத்துகிறாள்.
அந்த கிராமத்தில்
கீழன் என்ற உழைப்பாளி ஒருவன் உள்ளான். அவனுக்கு சூதாட்ட மோகம் உள்ளது. இதனால் பன்றி
பந்தயத்திற்கு சென்று பந்தயம் வைத்து பணத்தை இழந்துவிடுகிறான். இவன் இப்படி பொறுப்பில்லாமல்
இருப்பதால் மனைவி கீழனை கழற்றிவிட்டு இன்னொருவருடன்
வாழ சென்றுவிடுகிறாள்.
அவன் தனது
வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருக்கிறான். அப்படி ஒரு நாளில் பாட்டியை
பின்தொடர்ந்து சென்று அவள் காலத்தை மீண்டும் கடந்தகாலத்திற்கு மாற்றுவதை அறிகிறான்.
அப்படி மாற்றினால் அவன் மனைவி அவனுடன் இருப்பாள் என நினைக்கிறான். உண்மையில் இந்த இருவருக்கும்
தெரிந்த கால மாற்ற உண்மை ஊர் மக்களுக்கு தெரிந்ததா, இறுதியில் பாட்டி என்ன செய்தாள்
என்பதே இறுதிப் பகுதி..
இந்த அனிமேஷன்
படத்தில் உருவங்கள் சற்று வேறுவிதமாக உள்ளன. குளவி கடித்தால் நமக்கு உடலில் தசை எப்படி
வீங்கிக்கொள்ளுமோ அப்படித்தான் இங்கு பாத்திரங்கள் உள்ளன. வாய் திறப்பது பேசுவது எல்லாமே
ஏதேனும் ஒரு பக்கமாக பாத்திரங்கள் செய்கிறார்கள். வாய் இருப்பதே அவர்கள் பேசினால்தான்
தெரிகிறது. மற்ற நேரங்களில் மொழுக் மொழுக்கென இருக்கிறது. ஒருவரின் உணர்ச்சிகளைப் பார்த்து
உணர்வது கடினமாக உள்ளது.
படத்தில்
டைம் லூப் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது களைப்பு தருகிறது. இத்தன முறை ஆண்டை மாற்றியும்
கூட தனது நோயை தீர்க்க முடியவில்லை என பாட்டி உணரவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள
முடியவில்லை. பேரன் வந்துதான் சொல்லி அவர் தெரிந்துகொள்கிறார் என்பது உணர்வதே நமக்கு
அயர்ச்சி ஆகிறது. இந்தளவு தத்தியாக இருப்பவர்
எப்படி ஒளி விளக்கு கண்டுபிடிப்பார்? ஆராய்ச்சியாளராக இருப்பார்? ஆனால் இப்படியெல்லாம்
கேள்வி கேட்க கூடாது. இருக்கிறார்.
இயற்கைக்கு
விரோதமாக செயல்படுவது நமக்கு எந்த விதத்திலும் நன்மை சேர்க்காது என்பதை படம் சொல்லுகிறது.
நேரமிருந்தால் பார்க்கலாம். ஆனால் பார்த்தே தீரவேண்டும் என்று கூறமுடியும் படம் எல்லாம்
கிடையாது. யூட்யூபில் கிடைக்கிறது. வாய்ப்பிருப்போர் பாருங்கள்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக