பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்கு உதவும் கர்ணா வித்யா பவுண்டேஷன்!
சென்னையின்
கிண்டியில் கர்ணா வித்யா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின்
லட்சியமே பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்
தருவதுதான்.
1999ஆம் ஆண்டு,
சென்னை ரோட்டரி கிளப் தொடங்கிய நிறுவனம்தான்
கர்ணா வித்யா பவுண்டேஷன். 2013ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனமாக மாற்றப்பட்டு கல்வி,
வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் நிறுவனமாக மாறியது.
பார்வைத்திறன்
குறைந்தவர்களுக்கு ஆலோசனை, பயிற்சி, போக்குவரத்து, தொழில்நுட்ப உதவிகளை கர்ணா வித்யா
பவுண்டேஷன் வழங்குகிறது. இந்த நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இதன் காரணமாக, பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வேலைவாய்ப்பைப்
பெற்றுத்தர முடிகிறது.
2023ஆம் ஆண்டு
கர்ணா வித்யா பவுண்டேஷன் பயிற்சியளித்த மாணவர்களில் 25 பேர், இருபது கார்ப்பரேட் நிறுவனங்களில்
வேலை பெற்றுள்ளனர். அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு
முகாம்களிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வருகின்றனர்.
சாதாரண ஆட்களுக்கு
வேலைவாய்ப்பு என்பது நேர்காணல் நடத்தினாலே வேலைவாய்ப்பு பணி ஏறத்தாழ முடிந்துவிடும்.
குறிப்பிட்ட இடத்தில் சென்று வேலைக்கு சேர்ந்து பணிகளை செய்யவேண்டியதுதான். ஆனால்,
பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு அப்படியல்ல. கர்ணா வித்யா, தனது மையத்தில் 3,500 பேர்களுக்கு
வேலைத்திறன் சார்ந்த பயிற்சி அளித்து வேலை வாங்கிக் கொடுத்துள்ளது
இவர்கள் இயங்கும்
முறை தனித்துவமானது. பெருநிறுவனங்களின் அதிகாரிகளைச்
சந்தித்து அங்கு பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு விவரங்களைப் பெறுகிறார்கள்.
பிறகு, அதற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். தேர்வு பெறுபவர்களுக்கு தேவையான
வசதிகளை பெருநிறுவனத்தில் செய்து தர கோருகிறார்கள். சிறப்பு வசதிகள் கொண்ட கணினி, நடக்கும்
நடைபாதை ஆகியவை இதில் சேரும். புதிதாக பணிக்குச்சேரும் பணியாளர்களை மூன்று மாதங்கள்
கண்காணிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் பணியாளர்கள் பற்றிய விவரங்களை பெருநிறுவனமும்,
கர்ணா வித்யாவும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்கின்றன.
அறிவியல்
சார்ந்த பாடங்களை பார்வைத்திறன் குறைந்த மாணவர்கள் படிக்க முடியாது என்ற கண்ணோட்டம்
பரவலாக உள்ளது. ஆனால், மூன்றிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தும்
அறிவியல் பாடங்களை கர்ணா வித்யா, தனது மையத்தில் கற்றுத் தருகிறது. இதனால், வெறும்
கலைப்படிப்புகளை மட்டுமே பார்வைத்திறன் குறைந்த மாணவர்கள் கற்க முடியும். பிறருக்கு
கற்பிக்க முடியும் என்ற தொல்நம்பிக்கை உடையத் தொடங்கியுள்ளது.
குருவான்மிக
நாதன்
தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக