சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?
உலகம்
அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி
வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும்,
நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய
கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும்
உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ
என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை
பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.
2012ஆம்
ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள்.
இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து
அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர்
சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.
உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை,
உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய்வது என யோசித்தாலே பலருக்கும்
ரத்த அழுத்தம் உச்சத்திற்கு சென்றுவிடும். பயம், பீதி, பிழைத்திருக்க வேண்டும் என வேட்கை
மனதில் தீயாக உருவாகிறது இல்லையா?
1997-2012 காலகட்டத்தில் பிறந்த முதல் தலைமுறை இசட் ஆட்களுக்கு
இந்த வகையிலான பீதி அதிகம். ஜூமர்கள் முதல்
மில்லினிய ஆட்கள் வரை உலகம் அழிந்துவிட்டால்
என்ன செய்வது என்ற ரீதியில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில்
பொழுதுபோக்கு என்பதே இப்படிப்பட்ட கருப்பொருட்களைக் கொண்ட படம், நாவல், கட்டுரைகளாகவே
இருக்கிறது. வாழ்க்கை செயல்பாடுகளையும் இந்த வகையில் மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
கார்பன்
அளவு உயர்வது, வெப்ப அலை, மழைப்பொழிவு குறைதல் ஆகிய செய்திகளைப் படித்து இளைஞர்கள்,
எதற்கு திருமணம், அதை செய்து குழந்தை பெற்று உலகில் கார்பனை அதிகரிக்க வேண்டுமா? தேவையில்லை
என்ற அளவில் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எ
கொய்ட் பிளேஸ், டோன்ட் லுக் அப் ஆகிய திரைப்படங்கள், ஸ்னோபியர்சர், ரெசிடன்ட் ஈவில்
ஆகிய டிவி நிகழ்ச்சிகள், தி நியூ வைல்டர்னஸ், தி வால் ஆகிய நூல்கள், பெருந்தொற்றுக்கு இடையில் வெளியான ஐ நோ தி எண்ட்
என்ற போபே பிரிட்ஜரின் பாடல் ஆகியவற்றை இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். இப்படிப்பட்ட
படங்களை பார்த்து, நாவல்களை படித்து டிவி தொடர்களை கண்டு வருகிறார்கள்.
ஹெச்பிஓவில்,
தி லாஸ்ட் ஆஃப் அஸ் என்ற டிவி தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இதன் தொடக்க எபிசோடுகளை உலகம்
முழுக்க 837 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த தொடரின் கதை, எதிர்காலத்தில்
நடைபெறுகிறது. ஒரு வித பூஞ்சையால் பாதிக்கப்பட்டு மனிதர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.
இதிலிருந்து தப்பி ஓடும் அப்பா, மகள் பற்றிய கதை. அப்படியென்ன இதில் ஈர்ப்பு இருக்கிறது
என்றால், மனிதர்கள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு இறப்பதை, அதிலிருந்து தப்பிக்க மனிதர்கள் முயல்வதை சிறப்பாக
காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.
இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நம்மால் பிழைக்க
முடியுமா என்ற கேள்வி பார்வையாளர்களின் மனதில் உருவாகி வருகிறது. அதேசமயம் அந்தளவு
மோசமான அழிவிலும் மனிதநேயம் சார்ந்த கண்ணோட்டத்தையும் டிவி தொடர் முன்வைத்துள்ளது.
இதேபோல
நெட்ஃபிளிக்ஸில், ஸ்வீட் டூத் என்ற தொடர் வெளியானது. பலராலும் பார்க்கப்பட்டது. உலகம் அழிவுக்கு உள்ளான காலத்தில் பாதி மனிதன், பாதி
விலங்கு என குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றிய கதை.
தொடரின் கதை, உலகம் அழிந்தாலும் கூட புதிய உலகம் மலர்ச்சியுடன் பிறக்கும், அதில் நாம்
வாழலாம் என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடையே உருவாக்குகிறது.
உலகம்
அழிகிறது. கடல் நீர் பெரு நகரங்களை அழிக்கிறது. வெள்ளத்தில் மூழ்கி மக்கள் இறக்கிறார்கள்.
இதுபோல சம்பவங்களைக் கொண்ட நாவல்களை படிக்கும் இளைஞர்கள் பீதியில் ஆழ்கிறார்கள். இதனால்
உலகை மட்டுமல்ல, தன்னையும் காப்பாற்றிக்கொள்ள பல்வேற சூழல் அமைப்புகளில் இணைகிறார்கள்.
மரக்கன்றுகளை நடுகிறார்கள் அல்லது மாசுபடுதலுக்கு எதிராக பேரணிகளை நடத்துகிறார்கள்.
முடியாதபட்சத்தில் மக்களிடையே கையெழுத்து பெற்று அதை நாட்டின் பிரதமருக்கு அனுப்பி
வைக்கிறார்கள்.
இந்த
வகையில் ஃபிரைடே ஃபார் ஃப்யூச்சர் எனும் இயக்கத்தில்
ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இந்த
இயக்கத்தை சூழல் போராளி கிரேட்டா துன்பெர்க் தொடங்கி நடத்தி வருகிறார்.இந்தியாவில்
இந்த இயக்கத்திற்கு 46 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆதரவளித்து பின்தொடர்கிறார்கள்.
பயத்திற்கு
காரணம் இல்லாமல் இல்லை. இந்தியத் தலைநகரான டெல்லியில் மாசுபாடு அதிகரித்து புகை, பனி
காரணமாக வாகனங்கள் சாலையில் செல்லமுடியாமல் தடுமாறுவதோடு, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல
முடியாமல் தடுமாறுகிறார்கள். தலைநகரில் இந்த
நிலையில் மாசுபாடு உள்ளது என்றால் பிற நகரங்களில் நிலைமை எப்படியிருக்கும்? என இளைஞர்கள்
யோசித்து வருகிறார்கள்.
இதனால்,
இளைஞர்களுக்கு சூழல் பதற்றம் உருவாகிறது. சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு செல்வது,
பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது, அதிக கார்பன் வெளியீடு என்று கூறும் உணவுகளைத்
தவிர்ப்பது, இரண்டாம் தர பொருட்களை வாங்கி கார்பன் வெளியீட்டைக் குறைக்க முயல்வது என
பல்வேறு சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் உள்ள பெங்காலி ஆன்டிநாடலிஸ்ட்
என்ற அமைப்பினர், மனிதர்கள் பிறப்பதுதான் பிரச்னை. அவர்கள்தான் நிறைய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள் பிறக்காமல் இருந்தால் என்ன என யோசிக்கிறார்கள. மாசுபாடு நிறைந்த உலகில் குழந்தைகளைப்
பெற்றுக்கொண்டால் அவர்களால் உலகில் சமாளித்து வாழ முடியுமா? என்று யோசிக்கிறார்கள். அதாவது இதன் மூலம் கார்பன்
அதிகரிப்பை குறைக்க முடியும் என நம்புகிறார்கள். இதை பேசும் நேரத்தில்தான் இந்தியா,
மக்கள்தொகையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
போட்டியில்
தோற்றவர்களுக்கு விரக்தி, வென்றவர்களுக்கு சோகம் என வினோதமான நிலைமை ஏற்பட்டால் எப்படி
இருக்கும்?
இயற்கை சார்ந்த பேரிடர்கள் தொடர்ச்சியாக நடைபெறும்போது
இளைஞர்கள் மெல்ல விரக்தியிலும் சோகத்திலும் ஆழ்கிறார்கள். இப்போது உளவியலாளர்களிடம்
வரும் பலரும் உறவுகள் முறிவு, காலநிலை மாற்றம்
ஆகியவை காரணமாக தூக்கம் வருவதில்லை என்று சொல்லி மன அழுத்த காரணங்களை அடுக்கிவருகிறார்கள்.
சூழல்
கல்வியில் இன்னொரு மோசமான பக்கமும் இருக்கிறது. பிளாஸ்டிக் மட்காது. அதை பயன்படுத்துவதில்
கவனம் வேண்டும் என்பதை சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது நல்லது. ஆனால், அதை திரும்பத்
திரும்ப கண்டிப்பாக வலியுறுத்துவதால் பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றிய குற்றவுணர்ச்சியும்,
ஒருசேர பயமும் மனதில் உருவாகிறது. இதனால், எங்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டாலும்
அதை உடனே அகற்றி, வீட்டுக்கு எடுத்து வரும் மனஅழுத்த சிக்கலும் சிறுவர்களுக்கு உருவாகி
வருகிறது. குழந்தைகளுக்கு சூழல் பிரச்னைகளை எடுத்து சொல்லும்போது, அவர்கள் பீதியும்,
பதற்றமும் ஏற்படுத்தாமலும் சொல்ல வேண்டியது அவசியம்.
இந்து
நாளிதழில் நேகா மெஹ்ரோத்ரா எழுதிய கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக