இறவாசக்தி பெற்ற முனிவர்களிடம் பெற்ற அதீத சக்தியால் கொலைவேட்கை கொள்ளும் நாயகன் - பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

 











தி  பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

(மங்கா காமிக்ஸ்)

தொடர்கிறது…

மங்கா ஃபாக்ஸ்  வலைத்தளம்


முயி ஒரு அனாதை. அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஊரிலுள்ளோர் அவனை அடித்து உதைப்பது, தூங்கும் இடத்தை தீ வைத்து எரிப்பது என அவமானப்படுத்துகிறார்கள். கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். ஆதரவற்றவன் என்பதால் அவமானத்திற்கு பஞ்சமில்லை.

 காட்டில் வேட்டையாடச் செல்பவர்களுக்கு தூண்டில் மீன் போல இரையை பொறியில் சிக்க வைக்கும் வேலையை செய்து வருகிறான். அதில் கிடைக்கும் காசுதான் அவன் சோற்றுக்கு உதவுகிறது. அப்படி ஒரு நாள் புலியை பிடிக்கப் போகும்போது ஏற்படும் விபத்தில் புலியின் தாக்குதலில் வேட்டைக்காரர்கள் அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இறுதியில் முயியின் தாக்குதலில் புலி இறந்துவிடுகிறது. ஆனால், தாக்குதலின் போது, புலியால் படுகாயமடையும் முயி சாவின் விளிம்பில் இருக்கிறான். அவனைப் பார்த்து இரக்கப்படும் இறவாசக்தி பெற்ற முனிவர்கள் தங்களின் முன்னூறு ஆண்டு தற்காப்பு கலையை சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று இறக்கிறார்கள்.

உடல் பலவீனமாக இருக்கும் நிலையில் அதீத சக்தி கிடைத்தாலும் அதை பயன்படுத்தினால் அவன் ஆயுள் பத்து ஆண்டுகள்தான் என முனிவர்கள் எச்சரிக்கின்றனர். முயிக்கு இயல்பாகவே போர்க்குணம் உண்டு. யாராவது ‘’எனக்கு எதிராக கத்தியை தூக்கினால் அவர்களை கொல்வது உறுதி’’ என சூளுரைக்கும் அளவு கோபம் கொண்டவன். அவனது இயற்கையான கொல்லும் மனப்பான்மையை தங்களது சக்தி கீழே அழுத்தும் என முனிவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு ஆயுள் குறைவு.

உயிர்பிழைத்தவனை அவனது அப்பா வந்து சந்திக்கிறார். அவர்தான் டெத் கிங் என அழைக்கப்படும் மாவீரன். ஆனால், தற்போது உடல் நலிவுற்று இறக்கும் நிலையில் இருக்கிறார். தான் யார் என்பதை அப்பா, முயிக்கு கூறிவிட்டு என்ன காரணத்தால் அவனை சந்திக்க முடியவில்லை என்பதையும் சுருக்கமாக கூறுகிறார். பிறகு, அவனது தாத்தாவை சென்று சந்திக்கும்படி சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணைத் தாக்கி கடத்த இரு குழுக்கள் முயல்கின்றன. பெண்ணைக் காக்கும் முயற்சியில் முயியின் அப்பா டெத் கிங் கொல்லப்படுகிறார். முயி யோசிப்பதேயில்லை. அப்பா, உணவுக்காக அடகு வைத்த வாளை எடுத்துக்கொண்டு சென்று அப்பாவைக் கொன்ற இரு இனக்குழு தலைவர்களை அங்கேயே கொல்கிறான். முனிவர்களின் தற்காப்புக் கலை சக்தியைப் பயன்படுத்துகிறான்.

அதீத சக்தியை பயன்படுத்தினால் உயிரிழப்புக்கு முன்னர் நினைவுகள் அழிந்துபோகும். எனவே, தான் யார் என்பதை முயி மறந்துபோகிறான். ஆனால் அவனை எதிரிகள் சும்மா இருக்க விடுவதில்லை. டெத்கிங் காப்பாற்றிய இளம்பெண் முயியைப் பார்த்துக்கொள்கிறாள். அந்த இளம்பெண்ணை கைது செய்ய வீரர்கள் வருகிறார்கள். அவர்களை இளம்பெண்ணின் இனக்குழுவினர் வெட்டிக்கொல்கிறார்கள். இளம்பெண் சூ ஹியாங், ரெட் கோப்லின்(கூலி கொலைகாரன், திருடன்) , முயி என மூவரும் ஒன்றாக பாதுகாப்பிடம்  தேடி செல்கிறார்கள்.

முயிக்கு பெரிதாக அதுவேண்டும் இதுவேண்டும் என்பதெல்லாம் தோன்றுவதில்லை. தன் உயிரை பாதுகாத்த சூ ஹியாங்கை பாதுகாக்க வேண்டும். அப்பா கூறியபடி, அவரது உறவான தாத்தாவைப் போய் பார்க்கவேண்டும். அதுதான் நோக்கம்.

அப்படி போய் பார்த்து, டெத் கிங் இறந்துபோன செய்தியை முயி கூறுகிறான். அவனது தாத்தா மனமுடைந்து போகிறார். அதேசமயம், முயி பேரன் என்றாலும் அவன் உடலில் உள்ள தீயசக்தியின் கொலை வேட்கை அவரை அச்சுறுத்துகிறது. ‘’இனி உன் பெயரை டோங்பாங் முயி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பாரம்பரிய சொத்தான விண்ட் வாள் சக்தியை உனக்கு கொடுக்கமாட்டேன் ‘’என்று கூறிவிடுகிறார். இத்தனைக்கும் டோங்பாங் வம்சத்திற்கு பெயர் உள்ள வாரிசு முயி மட்டும்தான்.  

முயிக்கு அவனது தாத்தா, நூறாண்டு பழமையான குடும்ப வீடு, அதில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோரைப் பாதுகாக்க காசு தேவைப்படுகிறது. எனவே, அவர்களது நண்பர்கள் உள்ள முரிம் கூட்டுறவு என்ற அமைப்பில் கோட்டைக் கதவுகளை பாதுகாக்கும் காவலனாக வேலைக்கு சேர்கிறான். அங்கும் அவனுக்கு வேலையில் தோன்றுவது, சும்மா சிலை போல நிற்பதால் என்ன பிரயோஜனம் என்ன என்பதுதான்.

முயியைப் பொறுத்தவரை அவனை கைவிட்ட அம்மாவின் மீது மனதில் ஒருசேர பாசமும், துவேஷமும் இருக்கிறது. அவள் எங்கே என தேடிக்கொண்டிருக்கிறான். முன்கோபமும் பாசமும் அதிகம் என்பதால், யாராவது அவனை சீண்டினால் யோசிப்பதேயில்லை. வாளை உருவி வீசி விடுகிறான். அவனுக்கு எழுதப்படிக்க தெரியாது என்பதால் அதை சொல்லித்தர பெண் ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்கிறார்கள். அறிவுஜீவியான அவரது குடும்பத்தை எதிரிகள் முழுக்க அழித்துவிடுவதால், ஒற்றை ஆளாக  ஆசிரியர் மட்டுமே மிஞ்சுகிறார். அவரை முரிம் கூட்டமைப்பு காப்பாற்றுகிறது.

அந்த ஆசிரியர் ஒரு அறிவுஜீவி. அவரை தங்கள் பக்கம் இழுக்க இரு பெரும் சக்திகள் முயல்கின்றன. அது முடியாதபோது ஆசிரியரை கொல்ல முயல்கின்றன. அப்படியான ஒரு சண்டையில் முயி, தானே முன்னின்று பத்து படுகொலை வீரர்கள் கொண்ட குழுவை வெட்டி வீழ்த்துகிறான். அதைப் பார்த்து அவனது ஆசிரியரே வெலவெலத்துப் போகிறார்.

ஆசிரியரின் பாதுகாவலர் பெயர் பெற்ற வீரர். அவரே படுகொலையாளர்கள் தாக்குதலில் முக்கி முனகி பிழைக்கிறார். ஆனால் சிறுவனான முயி எப்படி, படுகொலையாளர்கள் குழுவை வென்றான் என ஆச்சரியமாக இருக்கிறது.  முயி, கோட்டை பாதுகாவலனாக சேர்ந்து சில மாதங்களிலேயே அங்கு பிரபலமாகிவிடுகிறான். நல்லவிதமாக அல்ல. மோசமான விதமாக.

 யாராவது சீண்டினால் கேலி கிண்டல் செய்தால் அங்கேயே அடித்து துவைப்பது என உக்கிரமூர்த்தியாகிறான். இதனால் அவனை கட்டுப்படுத்துவதே சக பணியாளர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது.

முயி இறப்பதற்கு ஒரு ஆண்டுதான் மிச்சமிருக்கிறது. அவன் வாழ நினைக்கிறான். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், தனது அம்மா உயிருடன் இருந்தால் ஒருமுறை பார்த்துவிட்டு இறந்தால் கடைசி நேரத்தில் ஏக்கத்துடன் இருக்கமாட்டோம் என நினைக்கிறான். இதனால் அவனது தோழி சூ ஹியாங்குடன் அம்மாவைக் காண செல்கிறான். அந்த பயணம்தான் மீதிக்கதை.

இரு பெரும் இனக்குழுவின் முன்னோடி தலைவர்களை முயி கொன்றுவிட்ட தகவல் பரவலாகவில்லை. அவர்களைக் கொன்ற கொலைகாரனை இரு இனக்குழுக்களும் தேடிக்கொண்டிருக்கின்றன. முயி தனது அம்மாவைத் தேடிக்கொண்டிருக்கிறான். முயியின் தாத்தா, ‘’பிறரை கொல்லவேண்டும் என நினைப்பவன், என் பேரனாக இருந்தாலும் பரம்பரை தற்காப்புக் கலையைத் தரமாட்டேன்’’ என்கிறார். முயி, பாரம்பரிய காற்று, இடி வாளை பெற நினைக்கிறான். ஆனால் அவனது உடலில் உள்ள தீய சக்தியை குடும்ப வாள் எதிர்க்கிறது. இதனால் வாளை அவனால் கையகப்படுத்த முடிவதில்லை.  

மங்கா காமிக்ஸில் முயி கோபத்துடன் சண்டைபோடும் சம்பவங்கள் அவனது மனநிலையைப் போலவே உக்கிரத்தன்மையுடன் வரையப்பட்டுள்ளன. அதிலும், வைத்தியரின் மகன், மருமகளை வெட்டிக்கொன்ற இனக்குழு தலைவரை அடித்து நொறுக்கும் காட்சியெல்லாம் சான்ஸே இல்லை. செம மாஸ். அதிரடி. ஏராளமான வீரர்களை அடித்து தள்ளிவிட்டு, ஒரு பெரிய வீட்டையே முயி அடித்து நொறுக்கி தரையில் தள்ளுகிறான்.

ரெட் கோப்ளினோடு சண்டை போடுவது, படுகொலை குழுவோடு உக்கிரமாக சண்டை போட்டு கொல்வது என நிறைய சண்டைகள் உள்ளன. அத்தனையிலும் ஓவியர்கள் உற்சாகமாக வேலை பார்த்துள்ளனர். பிறரை கொல்லும் வேட்கை கொண்டவன்தான் முயி. அதை ஓவியத்தில் கொண்டு வர வேண்டுமே? கதை தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருப்பதால், முயியோடு வாசகர்களும் சேர்ந்து பயணிக்க முடிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் வாசியங்கள்.

முயின் கொலை ஆவேசம் மெல்ல உங்களையும் கவரும். அதாவது, வாசிப்பதில் தொடரும் என்கிறேன்.

கோமாளிமேடை டீம்.

---------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்