நீலப்பட நடிகையின் சுயசரிதை- நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

 




நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார்





நீலப்படம்

நாவல்

லஷ்மி சரவணக்குமார்

அமேசான்.காம்


 

இந்த நாவலில் நீலப்பட நடிகையான ஆனந்தி தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறாள். அவள் தனது வாழ்க்கையில் சந்திக்கிற மனிதர்கள் அவளை எப்படி மாற்றுகிறார்கள், சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை, எழுத்தாளர் ல ச கு விவரித்து எழுதியிருக்கிறார்.

ல ச குவின் பிற நாவல்களைப் போலவே இதிலும் வலி நிறைந்த பால்ய வாழ்க்கை நீக்கமற உள்ளது. ஆனந்தி, விலைமாதுவின் மகள். அவளது தாய் காரணமாக, ஆனந்தி எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை படிக்கும்போது நமக்கு ஏற்படும் வேதனை உணர்வு அளவில்லாத ஒன்று.

 நீலப்பட நடிகை என்றாலும் கூட பொதுவான சமூகத்தில் நடிகையின் உடல் எப்படி ஆண், பெண் மனங்களை ஈர்க்கிறது. அதேசமயம் சங்கடப்படுத்தும்படியாகவும் மாறுகிறது. மனதில் உருவாகும் காமத்தின் வரம்புதான் என்ன, ஒரு பெண்ணை ஆண் ஏன் உடலாக மட்டும் பார்க்கிறான், அப்படி பார்ப்பவன் மனதில் உருவாகியுள்ள எண்ணம் என்ன என நிறைய கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ல ச கு.  இதன் காரணமாகவே, நீலப்படம் நாவல் முக்கியமான படைப்பாகிறது. இந்திய ராணுவம் கிழக்கு மாநிலங்களில் செய்யும் அத்துமீறல், அநீதி செயல்களையும் சுருக்கமாக நூலாசிரியர் சொல்லியிருக்கிறார்.

திரைப்படம் சார்ந்த நாவல். அதேசமயம் அதில் பெண்களை வல்லுறவு செய்வது, சிறுமிகளை பாலியல் உறவுக்காக சுரண்டுவது ஆகியவற்றை இந்தளவு தைரியமாக  எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆனந்திக்கு, முன்னாள் ராணுவ வீரரான பாபு மீது ஈர்ப்பு உள்ளது. ஆனால் அவன் ஆனந்தியின் உடலை முக்கியமானதாக கருதுவதில்லை. இதுதான் ஆனந்திக்கு ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. பின்னாளில்தான் அவள் அதற்கான உண்மையைக் கண்டுபிடித்து அதிர்ந்து போகிறாள்.

இதுதொடர்பாக நாவலில் வரும் வதைக் காட்சிகளில் இசைக்கலைஞர் யானியின் பாடல்கள் வருகின்றன.கூடவே, இடையிடையே  ஆபாச படத்துணுக்குகள் வருகின்றன. ஒட்டுமொத்தமாக வினோதமான உளவியல் சித்திரவதை முறையாக உள்ளது.  அதன் நோக்கத்தை ஆராய்ந்தால், சிறுமிகளை பாலியல் சீண்டல், வல்லுறவு செய்த குற்றத்திற்காக ஒருவரை கடந்த கால வலி நிறைந்த நினைவுகளில் அப்படியே தோய்ந்திருக்கச் செய்வது போல உள்ளது. இசை உளவியல்ரீதியான மனதை இலகுவாக்குகிறது. துடிப்பாக்குகிறது. ஒருவகையில் மன வளர்ச்சியில் செல்வாக்கும், ஆதிக்கமும் செலுத்துகிறது.

நாவலின் பல்வேறு இடங்களில் வரும் ஆனந்தியின் கூர்மையான பரிகாசங்கள் சினிமாகாரர்களுக்கு மிகவும் கடினமானவையாகவே உள்ளது. காரணம் அதில் உள்ள சமரசமே இல்லாத உண்மை.  நீர்நிலை அருகே ஆனந்தி உட்கார்ந்திருப்பதாக சொல்லி எடுக்கும் படப்பிடிப்பில, இயக்குநரின் ஆனந்தி கேள்வி கேட்கும் இடத்தை இப்படி கூறலாம். அடுத்து, தெலுங்கு படப்பிடிப்பில் ஆனந்தியின் காட்சியில் நடக்கும் களேபரம்.

ஒருவர் பேசும் வார்த்தைகளுக்கு இடையில் உள்ள அர்த்தங்களை புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வு ஆனந்திக்கு இருக்கிறது. அதேசமயம், தனது தாய் எப்படி சில காமுகர்களால் யோனி சிதைக்கப்பட்டு அவசரசிகிச்சை அளிக்கும்படி ஆனது என்பதை கூறும் இடம், பெரும் வலியை உணர்கிறோம்.  ஆணின் பேச்சிலேயே, அதில் என்ன நோக்கம் உள்ளது என உணர முடிகிறது. அவளின் கூர்மையான நுண்ணுணர்வு வாசிக்கும்போதே ஆச்சரியமளிக்கிறது. ஆனந்தியின் சொந்த படத்திற்கு பணம் திரட்டும் பதற்றத்தில் பாபு இருக்கும்போது, ஆனந்தி இயல்பாக சொல்கிறாள். ‘’கடலூர்காரன்கிட்ட இன்னொரு முறை படுக்குறேன். வேற பணம் இருக்கிற ஆட்கள் இருக்காங்களா சொல்லு போயி படுக்கிறேன். எனக்கு வேறு என்ன தெரியும்?’’

சொந்தமாக பணம் போட்டு இயக்குநராக படம் எடுக்கிற பெண்தான். நீலப்பட நடிகை. இதெல்லாம் தாண்டி தனது வாழ்க்கையை மிகப்பெரிய சுமையாக எடுத்துக்கொள்ளாமல்  ஆனந்தியால் இருக்க முடிகிறது. அதேசமயம் யாருக்கும் சுமையாக, பிறரும் தனக்கு சுமையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளும் திறமையும் கறார்த்தனமும் ஆச்சரியமளிக்கிறது.

ஆனந்தியிடம், பிறரின் குற்ற மனங்களை வெட்டிப்போடும் அளவு நியாயத்தனம், வெளிப்படையான பேச்சு பலரையும் திகைக்க வைக்கிறது. தெலுங்கு படப்பிடிப்பில் பத்திரிகையாளரிடம் கோபமாக பேசிவிட்டு, பிறகு கெட்டப்பெயர் ஏற்படும் என பத்திரிகையாளர் கிளப்பில் வந்து மன்னிப்பு கேட்டு பேசும் இடம். இந்த இடத்தில் ஆனந்தி பேசும் சொற்கள் மிக வலிமையானவை. தனது வாழ்க்கை எப்படி பொது உடமையானது, எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என்பதை குரல் உயர்த்தாமல் பேசுவது வியப்பூட்டுகிறது. அதைக் கேட்கும் பத்திரிகையாளர்களே ஒரு நிமிடம் தர்மசங்கடத்தில் ஆழ்கிறார்கள்.

  நீலப்பட நாவலின் நாயகி ஆனந்தி. அவள் பிர்சனைகளை சந்திப்பது, மீள்வது, சங்கடங்களை சந்திப்பது என அனைத்தையும் சிறப்பாக சித்திரித்து எழுத்தாளர் ல ச கு எழுதியுள்ளார். பாலியல் வல்லுறவு சார்ந்த கருத்துகளுக்காகவே,  நீலப்படம் நாவல் வாசிக்கப்படவேண்டியது அவசியம்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்