முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

 








தி ஹன்டர் (or dark hunter)

மங்கா காமிக்ஸ்

சீனா

ரீட்எம்.ஆர்க்

292-----

ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை.

கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம்.

சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு  வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக்.

கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர் கடன்,அவன் பெற்றோர் இறந்துபோனதால் அவனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை மணம் செய்து கொடுக்க மறுக்கும் டாங் குடும்பம் என சில பிரச்னைகள் உள்ளன. முக்கியமான பிரச்னை. கடன்தான். நின்றுபோன கல்யாணம் பற்றியெல்லாம் சென் பெய்பிங் கவலையே படுவதில்லை. டாங் குடும்பத்தின் இளைய பெண் வந்து சென்னின் கடனை அடைப்பதாக கூறுகிறாள். அப்போதும் சென், உன் வேலையைப் பார் என ஒற்றை வரியில சொல்லி அவளை வெளியே துரத்துகிறான். கடன் கார ர்களிடம் கடன் தொகையை கூறி, மூன்று நாட்கள் தவணை கேட்கிறான்.

கடனைத் தீர்க்க நண்பன் லேஸி பக்குடன் சேர்ந்து வேட்டையாடச் செல்கிறான். காட்டுக்குச் சென்று வேட்டை விலங்கு பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. கடந்த ஜென்ம வாசனை உடலில் இருப்பதால், தனது பெற்றோரின் கடவுள் சக்தி கொண்ட குறுங்கத்தி ஒன்றை வைத்தே பெரிய சக்தி வாய்ந்த பாம்பை கொல்கிறான். அதை நகரில் உள்ள பல்வேறு குடும்பங்கள் ஏற்கென்வே வேட்டையாட முயன்று ஏராளமான  வீரர்களை பலிகொடுத்த சூழலில், சென் தனது வேட்டை  திறமையை காட்டுக்குள் ஸ்டேஜிங் செய்கிறான். விடுவார்களா, மேல்சாதி கோமான்கள்? அவனது சாதியை, குலத்தைச் சொல்லி திட்டி அவன் கொன்ற பாம்பை திருடிச் செல்ல முயல்கிறார்கள். அவனையும் கொல்ல முயல்கிறார்கள்.

சென் பெய்மிங் எதற்கும் வாய்ப்பே கொடுப்பதில்லை. குறுங்கத்தியை வைத்து பலரையும் தாக்குகிறான். சிலரது கையை வெட்டுகிறான். ஒரு சிலரை முழுதாக கொன்று போடுகிறான். இறந்துபோன இளம் வாரிசுகள், சிறைபிடிக்கப்பட்டவ்வர்கள் தகவல் சொல்வதால் நகரிலுள்ள மூத்த தலைகள் வந்து சென் பெய்மிங்கை தாக்க முயல்கின்றனர். ஆனால் அவர்களாலும் ம்ஹூம் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

சென் பெய்மிங்கின் தீவிரத் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஹாங் குடும்பம்தான். குடும்ப உறுப்பினர்கள் பலரையும் மகிழ்ச்சியாக தாக்கி கொல்கிறான். அவனது கொலை வேட்கையைப் பார்த்து நண்பன் லேஸி பக்கே திகைத்துப் போகிறான். கதையின் முக்கியமான இடத்தில் இந்த குடும்பத்தினர் கொல்லப்படுவது கொடூரமாக இருக்கும். ஒருவகையில் சென்னின் பெற்றோரைக் கொன்றவர்கள் அவர்கள் என சென் பெய்மிங் பின்னர்தான் அறிகிறான். அறிந்த இடத்திலேயே ஹாங் குடும்பத்தினரைக் கொன்று போடுகிறான்.

கதை தொன்மைக் காலத்தில் நடக்கவில்லை. ஏறத்தாழ சமகாலத்தில் நடப்பதுபோலத்தான் அமைத்துள்ளனர். கடைகளில் எல்இடி போர்ட், விமானங்கள், போர் விமானங்கள், தொழில்நுட்ப ஆயுதங்கள், கார்கள், ஜீப்கள், வெடிகுண்டுகள் என நவீனமும், தொன்மைக்கால தற்காப்புக்கலை கதையையும் ஃப்யூஷன் போல கலந்து கொடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக உள்ள மங்கா காமிக்ஸ் இது. படிக்கும்போது உங்களுக்கே தெரியவரும்.

சென் பெய்மிங்கிற்கு முக்கியமானவர்கள், அவனது அப்பாவித் தங்கையும். அபார பலமுள்ள ஆனால் அதை தெரிந்துகொள்ளாத நண்பன் லேஸி பக்கும்தான்.

கதையின் பின்னாளில் சென்னுக்கு பக்கபலமாக நிச்சயம் செய்த பெண் வருகிறாள். அவள், சென்னை நிச்சயம் செய்த நாளில் இருந்தே காதலிக்கிறாள். தன்னை சென் குடும்பத்து உறுப்பினராகவே நினைக்கிறாள். கதையில் வரும் பெண்களை சொல்லவேண்டுமென்றால் தனியாகவே எழுதலாம். பிளாக் பகோடோ எனும் கறுப்பு சந்தை நிறுவனத்தின் உரிமையாளர் பிளாக் விடோ, டாங் குடும்பத்தின் அக்கா, தங்கை இருவர், வாங் குடும்பத்து இளவரசி, ஜாங் குடும்பத்தின் பேராசை கொண்ட இளவரசி, ஸ்டார் அலையன்ஸ் மெய் குடும்ப இளம்பெண், குயின்சி சிங்கத் தலைவரின் மிருகம் – மனிதக் கலவையான இளவரசி என எக்கச்சக்க பெண்கள் வருகிறார்கள்.

சென்னுக்கு தனக்கு துரோகம் செய்த ஐந்து பேரரசர்களைப் பழிவாங்குவதே லட்சியம். அதேசமயம், போனமுறை நடந்த பல்வேறு தவறுகளை நினைவுபடுத்திப் பார்த்து திருத்திக்கொண்டுதான் அனைத்து விஷயங்களையும் செய்கிறான். குறிப்பாக, தங்கையை இறக்காமல் காப்பாற்றுவது. தங்கையை தாக்கும் ஹாங் குடும்பத்தை ட்ராகன் ஹால் மாஸ்டரை வைத்தே கொல்வது என பழிவாங்குதலை இரக்கமே இல்லாமல் செய்கிறான்.

கடவுள் சக்தி கொண்ட ஆயுதம் என்றாலும் குறுங்கத்தியை வைத்துக்கொண்டு மூத்த குடும்ப ஆட்களுடன் மோதுவது நம்பவே முடியவில்லை. கதை சற்று தூரம் நடந்தபிறகுதான், சென்னுக்கு ஈட்டி போன்ற ஆயுதம் ஃபெங் குடும்பத்து பொக்கிஷ அறையில் கிடைக்கிறது. அப்போதுதான் நமக்கு சற்று ஆசுவாசமாகிறது. தனக்கு ஆதரவான நண்பர்கள், நிச்சயித்தபெண், அவளது தங்கை என யாராவது எதிரிகளால் சங்கடப்படுவது தாக்கப்படுவது தெரிந்தால்  எத்தனை எதிரிகள் ஒன்றாக சேர்ந்தாலும் சரி. அவர்களோடு இறுதிவரை துணிச்சலாக மோதுகிறான். எங்கேயும் நண்பர்களை விட்டுக்கொடுப்பதில்லை.

ஐந்து பேரரசர்கள், முக்கியமான மூன்று நகரங்களை தங்கள் சொல்லுக்கு தலையாட்டும் ஆட்களை வைத்து நிர்வாகம் செய்து நிறைய காசை கொள்ளையடிக்கிறார்கள். சொத்துக்களை திருடுகிறார்கள். சென் இதை முன்ஜென்மத்திலேயே அறிந்திருப்பதால், அவர்களை எதிர்ப்பதற்கான அனைத்து விஷயங்களையும் மெல்ல செய்துகொண்டே வருகிறான்.

 பிளாக் விடோவின் சகோதரனை ஸ்டார் அலையன்ஸ் பிடித்து வைத்திருப்பதை சொல்லி அவளுக்கு சகோதரனை காக்க உதவுவேன் என வாக்களிக்கிறான். இதன்மூலம் பிளாக் விடோ, அவனுக்கு பக்கத்துணையாக இருக்கிறாள். அடுத்து, கூ குடும்பத்தின் கூ டாஷாவோவுக்கு கறுப்பு மார்க்கெட்டில் உதவி செய்த காரணத்திற்காக பணம் கொடுப்பதோடு, அவனது தாத்தாவையும் விஷத் தாக்குதலில் இருந்து மீட்கிறான்.  இதனால் ஒட்டுமொத்த கூ குடும்பமே சென்னின் பேச்சைக் கேட்டு நடக்குமாறு நிலைமை மாறுகிறது.

தற்காப்பு கலை சார்ந்த கதைகளில் சண்டை நடப்பது அதற்கான தனி இடத்தில்… என நினைத்திருப்போம். ஆனால், தி ஹன்டர் கதையில் சென் பெய்மிங் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கேயே எதிரிகள் தேடி வருகிறார்கள். வம்பிழுக்கிறார்கள். உடனே சண்டை தொடங்குகிறது. சென்னுடன் சண்டைபோடும் பலரும் எப்படியாவது அடுத்தவர்களிடம் உள்ளதை அடித்துப் பிடுங்கிக்கொண்டால் போதும் என மனநிலையில் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். சென் பெய்மிங்கின் பக்கம் இருப்பவர்கள் தவிர பிறர் அனைவருமே சூழலுக்கு ஏற்ப தன்னை மட்டுமே நினைத்து பேசுகிறார்கள். சண்டை போடுகிறார்கள்.

கதையில் வரும் அனைத்து பாத்திரங்களுக்கும் உடைகள் கச்சிதமாக உள்ளன. நிறைய வெரைட்டிகளை பார்க்க முடிகிறது. அவ்வளவு அழகான நுணுக்கமான ஆடைகள்.  நாயகன் சென் பெய்மிங்கிற்கு ஒரே உடைதான். அதுவும் சண்டை போட போட கிழிந்து நார் நாராகிவிடுகிறது. ஓவியர் உடனே புதிய பச்சை டீஷர்டை வரைந்துவிடுகிறார். பலரும் தொன்மையான ஆடைகளை அணிந்திருக்க சென் பெய்மிங் மட்டுமே டீஷர்ட், பேண்ட் கையில் அம்புகள், தோளில் வினோதமான வேட்டை ஆவி என வலம் வருகிறான்.  ஆனால் சண்டை என வந்துவிட்டால் எதிரிகளை டார் டார் என கிழித்து தூக்கி எறிகிறான். இந்த கதையில் வரும் பாத்திரங்களின் உடைகள் பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருக்கிறது.

மங்கா காமிக்ஸ் முழுக்கவே, சென் பெய்மிங்கை சாதி ரீதியாக பிறர் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவன் பலமுறை அதற்கு பதில் கூறுவதில்லை. ஒரே ஒருமுறை மட்டும் ‘நான் எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் திறமையால் முன்னேறியவன்’ என பதில் சொல்கிறார். மீதி இடங்களில் ஏதும் பேசுவதில்லை. அடித்து எதிரிகளை கை, கால்களை முறிக்கிறார். அல்லது கொல்கிறார். சென் பதில் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.  

தொன்மையான பழிவாங்கும் கதை, நவீன காலத்தில் நடக்கிறது. அதுவும் கூட நடக்கும் இடம் சற்று வேறுபட்டதாக உள்ளது. வினோதமான நிலப்பரப்பு. ஒரே சமயத்தில் வறண்டதாக, இன்னொரு பகுதி வளம் கொண்டதாக இருக்கிறது.

பொக்கிஷங்களைத் தேடும் போது வரும் ஜோம்பி சண்டை பிரமாதமாக வரையப்பட்டுள்ளது. அதில் வரும், பேய் போன்ற கரடி, புழு வடிவில் உள்ள கார்டியன் மதர் ஆகியோர்தான் இருப்பதில் அட்டகாசமான வில்லன்கள். சென் பெய்மிங்கிற்கு டஃப் கொடுப்பவர்கள் அவர்கள்தான். இதற்கடுத்து கதையின் பின்பகுதியில் வரும் பேரரசர் தியான்யூ. சைக்கோபாத் அரசர். இவர் கையால் சென் பெய்பிங் இறந்துபோனாலும் புத்தர் சூத்திரங்கள் மூலம் மீண்டு வந்து தியான்யூவை கொல்கிறான்.

விலங்குகளின் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ஸ்டார் அலையன்சை எப்படி எதிர்க்கப்போகிறான் என்பதை இனிவரும் அத்தியாயங்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

கோமாளிமேடை டீம்

--------------------------------------

https://www.webnovel.com/comic/dark-hunter_20679218005665701


Author(s)
比格熊 Big Bear - 聂备 Nie Bei

Artist(s)
比格熊 Big Bear - 聂备 Nie Bei

Genre(s)
Action, Adventure, Comedy, Drama, Fantasy, Historical, Horror, Martial Arts, Mystery, Psychological, Romance,


கருத்துகள்