அம்மாவைப் பற்றிய உண்மையை அறிய தற்காப்புக் கலை கற்கும் மகனின் கதை! டோலுவா கான்டினென்ட் -

 


டோலுவா கான்டினென்ட் - சீன டிவி தொடர்

டோலுவா கான்டினெனட் - சீன டிவி தொடர்






டோலுவா கான்டினென்ட்

சீன டிவி தொடர்

 ஷியாபோ ஷான் - டாங் சென்

கிராமத்தில் காட்டிற்குள் இரும்பு பொருட்களை செய்யும் கொல்லர் தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார்.  அவரது மகனுக்கு சில முக்கியமான தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். ஆனால், அவனது அம்மா பற்றி ஏதும் சொல்வதில்லை. மகனுக்கு அம்மா பற்றி தெரிந்துகொள்ள ஆசை என்றாலும் கூட அப்பாவின் கடுங்கோபம் அறிந்து அமைதியாக இருக்கிறான். அப்பாவுக்கு கொல்லர் வேலை செய்வதற்கான விறகுகளை வெட்டி வந்து கொடுப்பது, சமையல் செய்வது மகன் டாங் சென்னின் வேலை. மற்றபடி கிடைத்த ஓய்வு நேரத்தில் சில தற்காப்பு கலைகளை பயிற்சி செய்கிறான்..

இந்த நேரத்தில் ஸ்பிரிட் ஹால் எனும் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்தவர், டாங் சென்னை ஆபத்து ஒன்றிலிருந்து காத்து அவனை ஒரு தற்காப்புக் கலை ஆன்ம ஆற்றல் சோதனைக்கு வரச்சொல்கிறார். ஆனால் டாங் சென்னின் அப்பாவோ,  நீ சோதனைக்கு எல்லாம் போக வேண்டாம். தனியாக அகாடமியில் படித்து நீ என்ன செய்யப்போகிறாய் என மறுக்கிறார். ஆனால் டாங்சென் சோதனைக்குப் போகிறான். அவனது ஆன்ம ஆற்றல் வடிவம், ஒருவித நீலப்புல். ஆனால்,அ தன் பலம் நேரடியாக போர்க்களத்தில் பயன்படக்கூடியது அல்ல. ஆனால் அவனது ஆற்றல் முழுமையாக இருக்கிறது என ஸ்பிரிட் ஹால் அதிகாரி கூறுகிறார். எனவே, தனது அடையாளச் முத்திரையைக் கொடுத்து தற்காப்புக் கலை அகாடமியில் சேரச்சொல்கிறார்.

இப்போதும் டாங் சென்னின் அப்பாவிற்கு மகனை வெளியே பயிற்சிக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் மகன் விரும்புகிறான் என்பதால் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார். ஒன்று, ஸ்பிரிட் ஹால் தற்காப்பு கலை அகாடமியில் சேரக்கூடாது. மற்றொன்று, இன்னொரு ஆன்ம ஆற்றலான சுத்தியலை பிறருக்குக் காட்டக் கூடாது என்கிறார். ஏன் இப்படி சொல்கிறார் என்பதற்கான விடைகளை டாங் சென் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கும்போது, தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும்.

இந்த சீன தொடர் சற்று இழுவையானது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக இல்லை. அதுவும் இறுதிப்பகுதியில் வரும் போட்டியை  ஏராளமான மக்கள் பார்ப்பார்கள் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால் அதை யாருமே பார்ப்பதில்லை.

 ஸ்ப்ரிட் ஹால் ராணியுடன் நடைபெறும் சண்டை, டாங் சென்னின் சண்டையிடும் திறனை மிகவும் குறைத்துக்காட்டுகிறது. தொடரின் முடிவும் உணர்ச்சிகரமாக முடிக்க நினைத்து சவசவ என எடுத்து வைத்திருக்கிறார்கள். இறுதிவரை டாங் சென் அவனது அம்மாவைக் காண்பதில்லை. அவள் ஒரு ஆன்ம ஆற்றல் கொண்ட விலங்கு என்ற உண்மையை அறிந்துகொள்கிறான். அவ்வளவே.

டாங் சென்னைப் பொறுத்தவரை நேர்மையானவன். அவனுக்கு தற்காப்புக்கலை அகாடமியில் அறிமுகமாகி இறுதிவரை அவனுடன் இருக்கும் காதலி, யூ ரென். இந்த இளம்பெண் பற்றிய உண்மை தெரிய வரும்போது பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் தன்னைப் பற்றிய உண்மையை அவள் பல்வேறு குறிப்புகள் கொடுத்து நிறைய முறை பேசிவிடுவதால், இறுதியாக ஏதாவது துரதிர்ஷ்டமாக நடக்கும் என கணித்துவிட முடிகிறது.

டிவி தொடரில் நகைச்சுவை என்பது எரிச்சலூட்டுவது போலவே அமைத்திருக்கிறார்கள். அதைக் கூறினாலும் எந்த புண்ணியமுமில்லை. புலிக்கர சக்தி கொண்டவர், பூனை நகம் கொண்ட பெண், தீ சக்தியைக் கொண்டவர், முயல் பெண் யூ ரென், மற்ற இரண்டு ஆக்சிலரி சக்தி கொண்ட ஆண், பெண். இவர்கள் கொண்ட குழுதான் ஷெர்க் அகாடமி. டாங் செங், ஸ்பிரிட் ஹால் பரிந்துரைத்த அகாடமியில் படிக்கச் சென்று சீனியர் மாணவர்களால் கேலி கிண்டல் செய்யப்படுகிறார். இதனால் நேரும் மோதலில் மூத்த மாணவர் கொல்லப்படுகிறார். அந்தப் பழி டாங் சென் மீது விழ, அவர் தப்பி ஓடுகிறார். கூடவே யூ ரென் என்ற இளம்பெண்ணும் வருகிறார். இவர்கள் சேர்ந்துதான் மான்ஸ்டர் அகாடமியில் சேர்கிறார்கள். இந்த அகாடமியில் சேர்வதற்கான தொடக்க காட்சி நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடரில் ஒருகட்டத்திற்கு மேல் கதை இலக்கு இல்லாமல் நகர்வதால் ஆயாசம் தோன்றிவிடுகிறது. டாங் சென்னின் அப்பா, வீட்டைவிட்டு வேறு எங்கோ போய்விடுகிறார். அவரது நோக்கம் என்ன என்பதை டாங் சென் ஆராய்ந்துகொண்டே தற்காப்புக் கலையை பயிற்சி செய்கிறான். அவனுக்கு தனது ஆன்ம ஆற்றலைப் பயன்படுத்தி எதிரிகளை வெல்வதை விட மூளையைப் பயன்படுத்தி தனது நண்பர்கள் குழுவுடன் இயங்கி வெற்றிபெறுவதை விரும்புகிறான். காட்சிகள் வழியாக பார்வையாளர் உணர்வதும் அதைத்தான்.  இதனால், குழுவிலுள்ள அனைத்து நபர்களுக்கும் நெருக்கமானவனாக மாறுகிறான். இதற்கு அடிப்படையான காரணம். பிறரின் மன இயல்பை, கண்ணோட்டத்தை எளிதாக புரிந்துகொள்பவனாக இருப்பதுதான். ஆனால் குழுத்தலைவர் தனது வலிமையே பிறரைக் காக்க போதும் என நம்புகிற அதீத தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.

சதிவேலைகள், சண்டைக்காட்சிகள், துரோகங்கள் என சில சமாச்சாரங்களை சேர்த்திருந்தால் தொடரில் பாத்திரங்களுக்கு இடையில் சுவாரசியங்கள் உருவாகியிருக்கும்.

டாங் சென்னின் வழிகாட்டியாக கோட்பாட்டு குருவாக வருபவர் நன்றாக நடித்திருக்கிறார். தன்னை விரும்பும் பெண்ணுடன் ஆற்றின் கரையில் அமர்ந்து,  தான் எப்படி ஆன்ம ஆற்றல் குறைந்தவனாக இருந்து, அதன் காரணமாக பிறரால் குறை கூறப்பட்டு நாடோடியானேன் என்பதை மெல்லிய குரலில் கூறும்போது பார்வையாளர்கள் கண்கள் கலங்கிவிடுகிறது. ஸ்பிரிட் ஹால் தலைவரை பெயர் சொல்லி அழைத்து, தலைவருடன் பேசும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஷெர்க் அகாடமியைச் சேர்ந்தவர், எப்போதும் காசு சம்பாதிப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக காட்டினாலும் இறுதியாக போட்டிக்கு மாணவர்களை அனுப்பும்போது அவர் பேசுவது நெகிழ வைக்கும் காட்சியாக வந்திருக்கிறது.

அரசு ஆதரவில்லை. பிற அகாடமிகளைப் போல மாணவர்களுக்கு சலுகைகளை, ஆன்ம ஆற்றல் தரும் பொருட்களை தர வழியே இல்லை. ஆனால் மாணவர்கள் சுதந்திரமாக யோசித்து தங்கள் வழியை கண்டுபிடிக்கவேண்டும் என்ற சிந்தனையை ஷெர்க அகாடமி தலைவர் உருவாக்குகிறார். இது ஒப்பீட்டளவில் பிற அகாடமிகளை விட அற்புதமானது. இதனால்தான் ஷெர்க் அகாடமியில் செவன் டெவில்ஸ் உருவாகிறார்கள். ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வெல்கிறார்கள்.

தொடரில் நடித்துள்ள நாயகனின் நடிப்புத்திறனைப் பார்க்கவே நான் பார்த்தேன். மற்றபடி தொடர் மிக சுமாரானதுதான்.

கோமாளிமேடை டீம்


-----------------------------

நன்றி - ராகுட்டன் விக்கி ஆப்.

Native Title: 斗罗大陆
Also Known As: Soul Land , Douluo Dalu , Dou Luo Da Lu , 斗羅大陸 , Douluo Continent Season 1
Screenwriter: Wang Juan
Director: Yang Zhen Yu

கருத்துகள்