ஒரு பொருளை புதியது போல காட்டி உண்ண, பருகத் தூண்டுவது எப்படி? - ஒளி, ஒலி காட்டும் மாயாஜாலம்

 










போனைப் பயன்படுத்துவது, அதில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று. இன்று நண்பர்களை விட ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் போன் மிகச்சிறந்த மோசடி செய்யாத நண்பனாக உடன் இருக்கிறது. போனில், கால்குலேட்டர், டார்ச் பல்வேறு ஆப்களை பயன்படுத்துவதோடு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு.

அமேஸானின் கிண்டில் ஆப் இருந்தால் அதன் மூலமே நிறைய மின்நூல்களை வாசிக்கலாம். ஓடிடிக்கு பணம் கட்டியிருந்தால் போனில் படம் பார்க்கலாம். டேட்டா இருந்தால் தேவையான வீடியோக்களை தரவிறக்கி கொள்ளலாம். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கற்றுக்கொண்டே இருக்க போன் உதவுகிறது. நண்பருக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அந்தளவு தொழில்நுட்பம் நெகிழ்வாக மாறிவிட்டது. அதேசமயம், அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் இறுக்கமாக மாறிவிட்டார்கள்.

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று உலாவுவது, பொருட்களை வாங்குவது, பிராண்ட் பொருட்களை கண் வைத்து வாங்குவது, வாங்கிக்கொண்டே இருப்பதை அடிமைத்தனம் என்று கூறலாம். ஆங்கிலத்தில் கண்ணியமாக ‘அடிக்‌ஷன்’ என்று சொல்கிறார்கள். பொதுவாக, தன்னைச் சுற்றி உள்ள எதிர்மறை உணர்வுகள் காரணமாக ஒருவர் இதுபோல பொருட்களை வாங்கிக் குவித்து பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அமெரிக்கர்கள்தான் இதிலும் முதலிடம் வகிக்கிறார்கள். பெரிய கடைக்குச் சென்று பார்ப்பதையெல்லாம் வாங்கிக் குவித்து பதற்றமாகும், சோகத்திலுள்ள மனத்தை தேற்றுகிறார்கள்.  மன அழுத்தம், பதற்றம், சலிப்பு, சுய  விமர்சன எண்ணங்கள், கோபம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாத மக்கள் கடைகளில் சென்று உலாவி பொருட்களை வாங்குகிறார்கள் என உளவியலாளர்கள் கணிக்கின்றனர். ஆனால் இதை குறைபாடு என உறுதியாக கூறவில்லை. இதை சரியா, தவறா, உளவியல் குறைபாடுகளில் சேர்க்கலாமா என விவாதம் நடைபெற்று வருகிறது.

ஒரு விஷயம் செய்கிறீர்கள். அதன் விளைவாக மூளையில் டோபமைன் சுரக்கிறது. எனவே அதே செயலை திரும்பத் திரும்ப செய்துகொண்டிருப்பீர்கள். அந்த மகிழ்ச்சி கிடைக்கவேண்டுமென்பதுதான் லட்சியமாகவே ஆகிவிடும். இப்படித்தான் அடிமைத்தனங்கள் நம்மைச் சுற்றி வலை கட்டுகின்றன.

இப்படி அடிமைத்தனத்தைப் பற்றி எழுதுகிறேனே எப்படி? நானும் இந்த வலையில் இருந்தவன்தான்.  நாளிதழ் வேலை நெருக்கடி காரணமாகவே சாப்பிட்டுவிட்டு மதியம் வரும்போது குளுகோ பிளஸ் வாங்கி வைத்து அலுவலகத்தில்  குடிப்பது, மாலையில் கூடுதல் நேரம் வேலை செய்யும்போது ஸ்டிங் எனர்ஜி குளிர்பானம் வாங்கிக் குடிப்பது என இருந்தேன். இந்த பழக்கம் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. பிறகு அந்த பழக்கத்தை மெல்ல குறைத்து நிறுத்தினேன்.

வில்ஸ் சிகரெட் விளம்பரங்களை தமிழ் வார இதழ்களில் முன்னமே பார்த்திருப்பீர்கள். ஒரு ஜீப் இருக்கும். அதன் முன்னே மேல்தட்டு வர்க்க ஆண் நிற்பார். அவ்வளவுதான் சிகரெட் டப்பா படம் போட்டு வில்ஸ் என்று எழுதியிருக்கும். ஆண் என்றால் சிகரெட் அவனுக்கு தனித்த அடையாளத்தை தருகிறது என சொல்லாமல் சொல்லிய விளம்பரம் அது. உலகம் முழுக்க புகையிலை மீது புகார்கள் குவிந்து, வரி உயர்த்தப்பட சிகரெட் மட்டுமே விற்ற ஐடிசி, வேறுவழியில்லாமல் புகையிலை விற்பனையை குறைத்துக்கொண்டது. இன்று மக்கள் பயன்பாட்டு பொருட்களை தயாரித்து விற்று வருகிறது.

பொருட்களை வாங்குவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று, கோல்கேட்டில் பல் துலக்கி, லோரியல் ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்துவிட்டு  விவெல் சோப்பை உடலுக்கு தேய்த்து கழுவி விட்டு, நிஸான் காரில் அலுவலகம் செல்வது. மேற்சொன்ன பொருட்கள் பிராண்டுகளாக இருந்தாலும் கூட இதில் ஏதொன்று இல்லையென்றாலும் இன்னொன்றை வைத்து பதிலீடு செய்துகொள்ளலாம். மேற்சொன்னது இயல்பான முறை. அடுத்து பொருட்களை வாங்குவதில் இரண்டாவது முறை, கனவு முறை.  இந்த முறையில் அனைத்துமே மிகப்பெரிய பிராண்டுகளாக இருக்கும். எதையும் பதிலீடு செய்யமுடியாது. உடலுக்கு டவ் சோப், தலைக்கு ஹெட் அண்ட் ஷோல்டர், உடைக்கு ரேமண்ட், உணவுக்கு வர்ஜின் ஆலிவ் ஆயில், பயணத்திற்கு பிஎம்டபிள்யூ என அனைத்துமே முடிவு செய்யப்பட்டதாக இருக்கும். இதில் சமரசமே செய்யமுடியாதவர்களாக சிலர் இருப்பார்கள்.

வேலைநாட்களில் நீங்கள் பர்சை எத்தனை முறை திறந்து மூடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் செலவுகளை கணக்கிட்டுக்கொள்ளலாம். இதை வைத்தே, நீங்கள் கடையில் பொருட்களை அதிகம் வாங்குபவரா இல்லையா என கூறிவிடலாம். 

உணவு, குளிர்பானங்களைப் பொறுத்தவரை அதை எப்படி மக்களின் மனதிற்குள் பதிய வைக்கிறார்கள் என்பதே விஷயம். உணவுப்பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் கோலா நிறுவனங்கள் எப்போதும் கைகோத்துக்கொண்டுதான் தங்களது விற்பனையையும் பெருக்குகிறார்கள்.

 குளிர்பானங்களின் விளம்பரங்களில் யாராவது ஒரு சினிமா பிரபலம், குளிர்பானத்தை வாயில் வைத்து குடிப்பது போல, அதன்மூலம் அவருக்கு மட்டும் மழை பெய்து, ஐஸ்கட்டி வந்து தலையில் அடித்து புத்துணர்ச்சி பெறுவது போல காட்டுவார்கள். விளம்பரங்களில் குளிர்பானம், ஐஸ்களுக்கு மத்தியில் வேர்த்து விறுவிறுத்து ஈர்க்கும். ஐஸ் கோல்டு… வேறு ஒன்றுமில்லை. இதற்கு செய்யப்படும் ஒளி, ஒலி இன்னும் தனித்துவமாக இருக்கும்.

குளிர்பான விளம்பரங்களில் நாம் கேட்கும் ஒலிகள் என்னென்ன, மூடி திறக்கப்படுவது, நுரையாக குளிர்பானம் எழும்புவது, கண்ணாடி டம்ளரில் நுரையோடு சத்தமாக விழும் சத்தம், அதை மடக் மடக்கென சினிமா அல்லது விளையாட்டு பிரபலம் குடிப்பது. இதுபோன்ற ஒலிகள் மக்களை உணர்வுத் தூண்டலுக்கு உள்ளாக்குகிறது. லெஹர் சோடாவை விட உள்ளூரில் உள்ள காளி மார்க், வி ஆர் எஸ் சோடாவே சிறப்பானதுதான். ஆனால் விளம்பரம் செய்கிற வகையில் கொக்கோகோலா, பெப்சி ஆகிய நிறுவனங்களே ரேஸில் முந்துகின்றன.

வறுத்த கோழி உணவுகளைப் பொறுத்தவரை, உணவை கையில் எடுத்து மெய்மறந்து சாப்பிடுவது, விரல்களை நக்கி சாப்பிடுவது என எடுப்பார்கள். ரொட்டிக்கு நடுவில் வைக்கும் வெள்ளரி, தக்காளி, இறைச்சி, சீஸ் ஆகியவற்றை புதிதுபோல காட்டி விளம்பரம் எடுப்பார்கள். ஒளி மட்டுமல்ல ஒலியும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதைப் பார்க்கும் பார்வையாளர்களான மக்கள் வயிற்றில் உடனே பசியை உணர்வார்கள். இதன் விளைவாக, குளிர்பானத்தை அல்லது வறுத்த கோழியை உண்பதற்கான ஆயுள் வெறி பிறக்கும்.

 

 image - freepik

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்