தனது அப்பா சீரியல் கொலைகாரர் அல்ல என்று நிரூபிக்க போராடும் மகன்! தி கில்லர் இன்சைட் - ஜேடிராமா

 







தி கில்லர் இன்சைட் - ஜே டிராமா




தி கில்லர் இன்சைட்

ஜே டிராமா

9 எபிசோடுகள்

ராகுட்டன் விக்கி ஆப்

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்கொலைகாரர் எல்எல். டஜன் கொலைகளை செய்கிறார். காவல்துறை அவரை கைது செய்யும் முன்னரே, தற்கொலை செய்துகொள்கிறார். அத்தோடு அரசு அதிகாரிகள் அந்த பிரச்னையை முடித்துவிடச் சொல்கிறார்கள். வழக்கும் தீர்க்கப்படுகிறது.

தற்போதைய காலத்தில் நகரில்  எல்எல் கொலைபாணியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொள்ளப்படுகிறார். இந்த கொலை விசாரணை தொடர்பாக,  தொடர் கொலைகாரரின் மகன் இஜி (ரியோசுகே யமடா) விசாரிக்கப்படுகிறார். இதனால், பல்கலைக்கழகத்தில் மாணவரான அவரின் அடையாளம் தெரிந்த  மாணவர்கள் அவரை கேலி அவதூறு செய்கின்றனர்.

 இஜியைப் பொறுத்தவரையில், அவரது அப்பா, குற்றவாளி அல்ல என நம்புகிறார். நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை. அல்லது  தொடர்கொலைகாரர் எல்எல்லை  பிடிக்கவேண்டும். உண்மையில் இந்த முயற்சியில்தான் இஜி தனக்கு ஆளுமை பிறழ்வு குறைபாடு இருக்கிறது என்பதை தோழி மூலம் அறிகிறார்.  அதன் விளைவாக, தெரிய வரும் பி1 குன் என்ற பாத்திரம், முற்றிலும் வேறு ஆளுமையைக் கொண்டிருக்கிறது. இஜி பயந்த சுபாவம், அப்பாவி என்றால் பி1 குன் அப்படியே நேரெதிர். தனக்கு தேவையானதை அதட்டி மிரட்டி வாங்கிக்கொள்ளும் ஆளுமை. ஒரு ஆளுமை பயந்தவன், இன்னொருவர் தைரியசாலி.

எல்எல்லால் கொல்லப்பட்ட விலைமாதுவின் தோழி நமி (ரினா காவெய்), இஜியைத் தேடி வருகிறாள். அவள் முதலில் இஜியை சந்தேகப்பட்டாலும், அவனின் வெகுளித்தனம் பிடித்துப்போகிறது. அவன் கொலைகாரன் அல்ல என நம்பிக்கை வருகிறது. அத்தோடு, மலர் பூத்து நிற்பது போல சிரிப்பதும் அவளுக்கு மனதில் காதலைப் பூக்க வைக்கிறது.

 காவல்துறை இஜிதான் கொலைகாரன் என்ற ரீதியில் கட்டம் கட்டத் தொடங்குகிறது. எனவே, விலைமாதுவின் தோழி நமி, இஜிக்கு  உதவுகிறாள். இஜிக்கு என்ன பிரச்னை என்றால், அவனுடைய அறையில் பணம், ரத்தக்கறை படிந்த  பேஸ்பால் மட்டை, கர்ச்சீப்பில் மடித்த வெள்ளை குளோவர் தோடு கொண்ட ஒற்றைக் காது ஆகியவை இருக்கிறது. அவனுக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நேரத்தில அவனுக்கு ஆதரவாக இருப்பது பெண் தோழி கியோகா சான் (முகி கடோவாகி) மட்டுமே.

 ஆளுமை பிறழ்வு குறைபாடு காரணமாக, மாதம்தோறும் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என இஜிக்கு பிளாக் அவுட் ஆகிறது. அதாவது, அந்த நாட்களில் என்ன நடந்தது என்றே தெரியாமல் போகிறது. அதாவது, இன்னொரு ஆளுமையான பி1குன் தோன்றி செயல்படும் நாட்கள் அவை.

இப்படி ஒரு பலவீனத்தை வைத்துக்கொண்டு இஜி, தனது இறந்துபோன அப்பா அப்பாவி, தொடர்கொலைகார ர் அல்ல என்பதை எப்படி நிரூபிக்கிறான் என்பதே கதை.

பொதுவாக தொடர்கொலைகாரர் என்றால, அவரது மகன், குடும்ப உறுப்பினர்களை ஒட்டுமொத்த சமூகமே குறி வைத்து தாக்கும். கண்காணிக்கும். அவதூறு பரப்பும். இதிலிருந்து அவர்கள் மீண்டு எழுவது கடினம்.  ஊடகங்கள் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்துவார்கள். இத்தகைய காட்சிகள் ஃபிளவர் ஆஃப் ஈவில், பினாக்கியோ ஆகிய கொரிய டிவி தொடர்களில் பார்த்திருப்பீர்கள். அதேதான் இங்கும் நடக்கிறது.

இஜியை உராசிமா கிய்ச்சி என்ற சிறைக்கைதி மறுவாழ்வு அதிகாரி எடுத்து வளர்க்கிறார். அவருக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உண்டு. ஆனால, இஜியின் அம்மா, சமூகத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுவிட தனியாக நிற்கும் இஜியை கைவிடாமல் தத்து எடுத்து வளர்க்கிறார்.

உராசிமா இஜி என்ற குடும்ப பெயர் இப்படித்தான் வருகிறது. இந்த அடையாளம்தான் இஜியை சற்றேனும் காப்பாற்றுகிறது. ஆனால் காவல்துறை அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. தொடர்கொலைகாரர் எல்எல், அவரது குடும்ப வாரிசு என இஜி பற்றிய தகவல்களை வெளியிடுகிறது. இதனால் அவரது வாழ்க்கை, பிறரிடம் இருந்து  ஒளிந்து வாழ்வதாக மாறுகிறது. குற்றமே செய்யாமல் தந்தையின் பாவச்சுமையை ஏற்கிறான் இஜி.  எப்படி அரசு அதிகாரிகள், ஊடக நிறுவனங்கள் உண்மையை சரியாக பார்க்காமல் முன்முடிவுகளோடு அணுகி நிறைய அப்பாவி மக்களின் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் என்பதை காட்சி ரீதியாக இயக்குநர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இஜி, பி1குன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளவர், பிரமாதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இவர் இந்தக் காட்சியில்  இஜியா, பி1குன்னா என யாருக்குமே தெரியாது. கண்டுபிடிக்கவும் முடியாது. தனது காதலி தன்னால் பாதிக்கப்படக்கூடாது என பிரேக்அப் செய்துகொள்ளலாம் என்று கூறும் காட்சி, உண்மையில் கியோகோ சான் தன்னை காதலிக்கவில்லை என்பதை உணர்ந்து பரிதாபமாக பேசும் காட்சி, இறுதியாக குற்றவாளி யார் என கண்டுபிடித்தபிறகு கண்ணில் வன்மம் மின்ன பார்க்கும் காட்சி என நிறைய காட்சிகளை அவரின் நடிப்பிற்குஉதாரணமாக காட்டலாம்.

கியோகா சானைப் பொறுத்தவரை அவரது தொடக்க கால வாழ்க்கை பெற்றோரால் கடுமையாக துன்புறுத்தப்படல், அதனால் நேரும் பாதிப்பு, அதில் இருந்து மீளல் என்று இல்லாமல் சற்று புதுமையாக இருந்தது. தொடரில் அவர்தான்  முக்கியமான திருப்புமுனை பாத்திரம்.  அவர் செய்யும் செயல்தான் இஜியை நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டுக்குள் தள்ளுகிறது. அதேசமயம், போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரது குழுவிலுள்ள பெண் அதிகாரி, உராசிமா இஜியின் தங்கை என பல்வேறு பாத்திரங்களும் அவர்கள் செய்த செயல்களுக்கான நியாயங்களைக் கூறுகிறார்கள். இதனால் நாயகன், நாயகி என்ற பாத்திரங்களோடு நிற்காமல் நமக்கு ஒரு பரந்த இயல்பு கிடைக்கிறது. இந்த கதையில் உண்மை என்பதை தேடுவதற்கு உதவுகிறது. யார் குற்றவாளி என தேடும்போது, குற்றத்தை செய்ததில் இஜிஐ கட்டம் கட்டுவதில் அவனுக்கு நெருக்கமானவர்களே துணையாக இருக்கிறார்கள். அவனை சிறைக்கு அனுப்ப நினைக்கிறார்கள். தவறான பாதையில் தள்ள முயல்கிறார்கள்.

இந்த ஜப்பான் டிவி தொடரின் சிறப்பம்சம், அதன் திரைக்கதைதான். நிறைய காட்சிகளை முன், பின் என மாற்றிக் காட்டுவதால் ஒருசமயம்  ஏதாவது ஒரு பாத்திரத்தை சந்தேகப்பட்டிருப்போம். அதாவது ஸ்கால் குழுவின் தலைவன் கொலை செய்திருப்பான் என நினைக்கும்போது, இல்லையில்லை, பல்கலைக்கழக பேராசிரியர் ஷிரோபாஷிக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என காட்டுகிறார்கள். இந்த ஊசலாட்டம் முடியும் இடம் கியோகோ சானின் பழைய வீடு.  உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், கியோகோ சான் முட்டாள் கிடையாது என்பதை இறுதிப்பகுதியில் குற்றவாளியே கூறுகிறார். அது உண்மையில் சிறப்பான காட்சி.

சிறப்பான க்ரைம் த்ரில்லர் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் இந்த ஜப்பானிய டிவி தொடரைப் பார்க்கலாம். ஒரு எபிசோட் ஒரு மணிநேரம். தொடரின் ஒளிப்பதிவும், இசையும் கச்சிதமானவை. வன்முறைக் காட்சிகள் நிறைந்தவை என்பதால் மனதை தயார் செய்துகொண்டு பாருங்கள்.  

 கோமாளிமேடை டீம்

--------------------------------

Drama: The Killer Inside (English title) / My Dearest Self with Malice Aforethought (literal title)Romaji: Shinai naru Boku e Satsui wo Komete
Japanese: 親愛なる僕へ殺意をこめて
Director: Hiroaki Matsuyama
Writer: Hajime Inoryuu (webcomic), Shota Ito (webcomic), Michitaka Okada
Network: Fuji TV
Episodes: 9
Release Date: October 5 - November 30, 2022
Runtime: Wednesday 22:00-22:54
TV Ratings: 3.8%
Language: Japanese
Country: Japan
https://asianwiki.com/The_Killer_Inside

நன்றி

ராகுட்டன் விக்கி ஆப்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்