வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

 






மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா?

பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம்.

1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அமைப்பு உருவாக்கினர். இந்த அமைப்பை முன்னாள் உளவியல் சிகிச்சை அளிக்கும் மேரி என்பவர் வழிநடத்தினார். இவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் அடிபட்டு நினைவிழந்தவர்களை, நினைவுகளை இழந்தவர்களை, கோமாவில் உள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தனர். பிடித்த நிறம், மணம், குளிர்பானங்களின் பெயர், நாடு, நகரம் ஆகிய கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றனர். எதற்கு இந்த ஆய்வு? ஒருவருக்கு பிடித்தமான மணத்தை தயாரித்து முகர வைத்தால் அவருடைய நினைவுகள் திரும்பும் என்பது அழகுசாதனப் பெண் குழுவின் கோட்பாடு. 

கீழ்திசை நாடுகளில் நோயாளிக்கு சில மருந்துகளை சாப்பிடக் கொடுத்துவிட்டு சில மருந்துகளை சாம்பிராணி போல போட்டு அதை முகர வைத்து நோய்களை குணமாக்குவது உண்டு. அதே டெக்னிக்தான். ஆனால் இங்கு ஒருவரின் நினைவுகளை மணம் மூலம் ஈர்க்கிறார்கள். அதன் மூலம் அவரது உடலை நோயிலிருந்து காக்க முயல்கிறார்கள்.

இளமைக் காலத்தை என்னென்ன விஷயங்கள் நினைவுபடுத்துகின்றன? இரண்டு ரூபாய் லஷ்மி பால் ஐஸ், ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், சுத்தர மிட்டாய், காதி செருப்பு, விஆர்எஸ் கருப்பு சோடா, எஸ்பிபி சில்க்ஸில் எடுத்த சட்டை, தாரா மல்லிகைப் பவுடர், குட்டிக்குரா பவுடர், பான்ஸ், சிக் ஷாம்புவின் அதிரடி மணம் என நினைத்துப் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறதுதானே? மணி ஹோட்டல் புரோட்டா, குருமா, எண்ணெய் பிழியும் எலுமிச்சை சோறு, கேபிஎஸ் தியேட்டரின் முட்டை போண்டா, பொன்னுச்சாமி வாத்தியாரிடம் வீசும் கோல்ட்பிளேக் சிசர் நெடி என வாழ்க்கை முழுவதும் ஒருவரின் வருகையை ஏதாவது மணம் அறிவிக்கிறது. இன்றைக்கும் மரிக்கொழுந்து மணம் அடித்தால் எனக்கு நடுநிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தை வேண்டாவெறுப்பாக எடுத்த பி.டி.. சார் நினைவுக்கு வருகிறார். உண்மையில் ஒவ்வொரு மனிதர்களும் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மணத்தைக் கொண்டு வருகிறார்கள். மணத்தின் வழியாக மனிதர்களும் வாசல் கதவை திறந்து நம்மைக் காண வருகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வாசனை ஆய்வை முழுமையாக ஏற்கவும் முடியாது. தூக்கி எறியவும் முடியாது. வாசனை நினைவுகளை உருவாக்குகிறது என்பது சரியென்றாலும் உடல்நலனில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதை நம்புவது கடினம்தான்.

 ஒருவருக்கு இந்த சுவை பிடிக்கும், இந்த மணம் பிடிக்காது என்ற தேர்வு, தாயின் கருப்பையில் இருக்கும்போதே முடிவாகிவிடுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  கடைக்குப் போனால் சிலர் பட்ஜெட் போட்டு செருப்பு, பேக், பொருட்களை வாங்குவார்கள்.

 இன்னும் சிலர், அலுவலகத்தில் நண்பர்கள் இப்படி பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதனால், தானும் இப்படித்தான் ஏரோ, ஆலன் சோலி ஆடைகளை அணியவேண்டும், வுட்லேண்ட்ஸ் செருப்புகளை போட வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.  தொடக்கத்தில் இப்படி பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் குணம் ஏழுவயதில் தொடங்குகிறது என்று கூறினார்கள். ஆனால் இப்போது இதுபோல பொருட்களை கம்பெனி கம்பெனியாக தேடி வாங்குவது நான்கு வயதிலிருந்து தொடங்கிவிடுகிறது என்று கூறுகிறார்கள்.

image - pinterest

கருத்துகள்