மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

 








பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார்.

உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.  இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையாக கல்யாணத்தில் மாமனார் சீராக வாங்கிக் கொடுத்த அலமாரியில் வைத்திருப்பது இயல்பான பழக்கம். ஆனால் இப்போது, கோத்ரேஜ் சேஃப்டி லாக்கர் உள்ளது. அதில் வைத்து பணத்தை முக்கியமான ஆவணங்களை பாதுகாக்கிறார்கள். ஏன் சூழல் இப்படி மாறியது? பணம் திருட்டுப் போய்விடுமோ என்ற அதீத பயம்தான்.

தனி லாக்கர் என்பது இல்லாமல், தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பான லாக்கர் வசதிகளை வழங்குகிறார்கள். அதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான எந்த பொருட்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அந்த சேவைக்கு குறிப்பிட்ட தொகையைக் கட்டவேண்டும்.

2009ஆம் ஆண்டு தொடங்கியே சார்ஸ் வைரஸ், மூளைக்காய்ச்சல், பாக்டீரியா  கிருமிகள் பற்றிய பயம், செய்தி வழியாக மக்களின் மனதில் விதைக்கப்படத் தொடங்கிவிட்டது. இதனால் மக்களுக்கு பிறரை விட தன்னைத் தானே காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது.

கொரோனா பெருந்தொற்று நிலையை இன்னும் மோசமாக்கியது. எங்கு சென்றாலும் கையை சுத்திகரிக்கும் ஹேண்ட் சானிடைசரை கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு அலுவலகங்களிலும் தடுப்பூசி போட்டால்தான் உள்ளே வரவேண்டும் என அநாகரீக மிரட்டல்கள் தொடங்கின.நோய்த்தொற்று பரவும் நிலையில் கூட முடிவெடுக்க தெரியாத கோழையான முதன்மை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி தொந்தரவு செய்தனர்.  இன்னும் நிறைய நிறுவனங்கள் வாய்ப்பை பயன்படுத்தி வீட்டில் இருந்து வேலை செய்தால் போதும் என அலுவலக செலவைக் குறைத்துக்கொண்டன.

இந்த காலத்தை ஐடிசி, யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்டுத்தி சோப்பு, சானிடைசர், சலவைத்தூள், காய்கறிகளைக் கழுவும் லிக்விட் என உற்பத்தி செய்து விற்றனர். பயத்தின் உச்சமாக எனது நண்பர் என்ன சொன்னார் என்றால், ‘’கையிலுள்ள ரொக்கப் பணத்தை சோப்பு கரைத்த நீரில் போட்டு அலசி காய வைத்து பயன்படுத்து’’ என்றார்.இத்தனைக்கும் சென்னையை விட்ட பூர்விக ஊருக்குச் சென்றாலும் கூட பயத்தைக் கடக்க முடியவில்லை.  கடக ராசிக்காரர்களின் பைத்தியக்காரத்தனத்தை நம்மால் நிரூபிக்க முடியுமா?

ஆன்டி பாக்டீரியல் சோப்பு விற்பவர்களுக்கு,  சாதாரண நேரத்தில் வருமானம் அதிகமாக இருக்காது. வியர்வை  நாற்றம், கிருமிகள் என்று சொல்லி வியாபாரம் செய்தவர்கள்தான் அவர்கள்.  சேவ்லான், டெட்டால், லைஃபாய் ஆகிய சோப்பு பிராண்டுகள் நோய்த்தொற்று அதிகரித்த நேரத்தில் நிறைய பொருட்களை வேகமாக சந்தைப்படுத்தி லாபம் சம்பாதித்தனர். ஐடிசி, சேவ்லான் தவிர்த்து  புதிய பிராண்டுகளையே உருவாக்கி விளம்பரம் செய்தது. இவர்கள் நேரடியாக பொருளை விளம்பரம் செய்யாமல், மக்களின் பொதுநலன் கருதி என்று ஒரு வாசகத்தை சேர்த்துக்கொண்டு விற்பனையை அதிகரித்தனர். வீட்டை சுத்தப்படுத்தும் லைஸால், ப்யூரெல், கிளினெக்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.

சார்ஸ் பரவுகிறது. பிற நிறுவனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் கல்லா கட்டும்போது உணவு உற்பத்தி நிறுவனங்கள் கையைக் கட்டி வேடிக்கை பார்க்க முடியுமா? கெலாக்ஸ் நிறுவனம் கோகோ சுவையில் புதிய உணவுப்பொருளை ‘நோய் எதிர்ப்பு சக்தி’ என்ற பெயரை பெரிதாக்கி விற்றது.

ஆன்டி ஆக்சிடன்டுகளைக் கொண்ட ஊட்டச்சத்து உணவு என கெலாக்ஸ் கூறியது. ஆனால், அந்த நிறுவனம் தயாரிப்பது முழுக்க பதப்படுத்திய உலர் உணவு. பாலைச் சேர்த்தால்தான் உணவு என்ற நிலைக்கே வரும். அதை சாப்பிடலாம் என்ற நம்பிக்கைக்கே நாம் வரமுடியும்.  உண்மையில் கெலாக்ஸ் உணவை மனிதர்கள் சாப்பிடுகிறார்கள் என்பதே ஆச்சரியமானது.

 அந்தளவு உணவுப்பொருட்களை எந்திரத்தில் அடித்து நொறுக்கி சின்னாபின்னாக்கி பாக்கெட்டில் கொடுக்கிறார்கள். அதை பாலில் சேர்த்து சாப்பிடுவது மட்டுமே ஆறுதலாக விஷயம். இல்லையென்றால் தொண்டையில் சிக்கிக்கொள்ளும்.  அப்படியே தொண்டை அடைத்துக்கொண்டு கிழங்கு தின்ற நாய் போல தொண்டை அடைத்து சாக வேண்டியதுதான். கெலாக்ஸ் அறிமுகப்படுத்திய உணவுப் பொருளில் 40 சதவீதம் சர்க்கரை உள்ளது. அது எப்படி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்? இதெல்லாம் அறிவியல்.

உண்மை சிலருக்குத்தானே தெரியும் என்ற தைரியத்தில் கெலாக்ஸ், ‘’எங்கள் நோக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை உற்பத்தி செய்வதே’’ என்று அறிக்கையை கொடுத்து, தனது பொருட்களை எப்போதும் போல விற்றுவந்தது.

உலகமெங்கும் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தும் சங்கிலித்தொடர் நிறுவனங்களான் வால்மார்ட், கோஹ்ல், டார்கெட் ஆகிய நிறுவனங்கள் வானிலையை ஆராய்ந்து சொல்லும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம், புயல், நெருப்பு, பனிப்புயல், மழை ஆகியவற்றை முன்னரே அறிய முடியும். அதற்கேற்ப மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கி வைக்கிறார்கள்.

மக்களும் புயலால், மழையால், காட்டுத்தீயால் பீதியடைந்து பொருட்களை வாங்கி வைத்து சேமிக்க க்யூவில் நிற்கிறார்கள். இப்படித்தான் பொருட்களை வேகமாக விற்று பெருநிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன. குடிநீர், ஃபிளாஷ் லைட், பேட்டரிஸ், டின் உணவுகள், கேன் குளிர்பானங்கள், இறைச்சி ஆகிய பொருட்களை அதிகளவு விற்கின்றனர்.

 குறைந்த நேரத்தில் பத்துக்கும் அதிகமான பொருட்களின் மீது கவனம் குவித்து அதை விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். மக்களின் பயத்தை பேரிடர் காலத்திலும் பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர். ஒருவர் பயப்படும் சூழலில் எதையும் யோசிக்க மாட்டார். கையிலுள்ள காசை செலவழித்து தன்னைக் காத்துக்கொள்ள நினைப்பார். அதைத்தான் பெருநிறுவனங்கள் பயன்படுத்தி வெற்றி பெறுகின்றன.

 image - pinterest

கருத்துகள்