மாஃபியாவை சட்டப்பூர்வமாக மாற்றும் அநீதியின் காவலன்! பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு

 






பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு, காஜல், நாசர்

பிஸ்னஸ்மேன் -தெலுங்கு






அடடா... அப்பப்பா பாத்திரங்கள் - Character Sketch


பிஸினஸ்மேன்

சூர்யா பாய் (மகேஷ் பாபு)

தெலுங்கு

இயக்குநர் – பூரி ஜெகன்னாத்

 

சாதாரண ஆள், ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்று பெத்த மாஃபியா டான் ஆகும் கதை. அதற்கான காரண காரியங்களை இயக்குநர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள். அதெல்லாம் தாண்டி நாயக பாத்திரம் எந்தளவு உறுதியாக உள்ளது, என்னென்ன விதமான வலிகளைப் பொறுக்கிறது என்பதே,  படத்தைப் பார்ப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்க்க வைக்கிறது. பேச வைக்கிறது.

‘’குற்றவாளி கிடையாது. ஆனால் குற்றவாளி போல யோசிப்பவன்” என மும்பை கமிஷனர் அஜய் கோபத்துடன் கூறும் அளவுக்கு சூர்யா அநீதியின் தலைவனாக வேலை பார்க்கிறான். கமிஷனர் அஜய் பரத்வாஜ், ‘’இனி மும்பையில் இனி எந்த டானும் இல்லை’’ என பிரஸ் கிளப்பில் கூட்டம் வைத்து பேசியபிறகுதான், மும்பைக்கு ரயிலில் வந்து இறங்குகிறான் சூர்யா. காட்சி ரீதியாகவே அவர் சொன்னதை உடைப்பதற்குத்தான் நாயகன் வருகிறான்.

பூரி ஜெகன்னாத்தின் ஆக்ரோஷ ஹீரோக்களில் இன்றும் ரசிக்க வைக்கும் விதமாக இருக்கும் ஒரு பாத்திரம்தான் சூர்யா பாய். மும்பைக்கு ரயிலில் வர பணம் அனுப்பி உதவும் நண்பன், தாராவியில் சிறு அறையில் வசிக்கிறான். அவனின் அறைக்குத்தான் சூர்யா வருகிறான். நண்பன் சூர்யா வந்ததும் ‘ரெஸ்ட் எடு’ சொல்லிவிட்டு அலுவலகம் செல்கிறான். அவன் சூப்பர்வைசராக வேலை செய்யும் நிறுவனத்தில் சூர்யாவுக்கும் வேலை பார்த்து தருவதாக கூறுகிறான்.  

சூர்யா அவனிடம் ‘’நீ வேலைக்கு போக வேண்டாம் .நா உனக்கு முதலாளி, நீ எனக்கு அசிஸ்டன்ட். உனக்கு மாத சம்பளம் 25 ஆயிரம் ரூபாய்’’ என்கிறான். ஆனால், நண்பன் யதார்த்தமான சூர்யாவின் பொருளாதார நிலையைப் பங்கமாக பேசி கிண்டலாக சிரிக்கிறான். சூர்யா எதுவும் பேசாமல், நிதானமாக நண்பனை ஆழமாக பார்த்தபடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். சூர்யா பாய் சொன்னது போலவே பணத்தை சம்பாதித்து நண்பனின் கையில் கொடுக்கிறான். பிறகு, கமிஷனரின் மகள் சித்ராவை சந்தித்துப் பேசுகிறான். முதல் சந்திப்பை மறக்க முடியாததாக செய்கிறான். பொதுவாக ஒருவரின் மனதில் நாம் மறக்கப்படாமலிருக்க என்ன செய்யவேண்டும்? நல்லவிதமாக, அல்லது கெட்டவிதமாக மறக்க முடியாதபடி செயலைச் செய்யவேண்டும் .

சூர்யா, இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்கிறான். சித்ராவை கண்டபடி திட்டுகிறான்.  அப்பாவியான அவளது இருபது ஆண்டுகளில் எதிர்கொள்ளாத வசைகள், கெட்ட வார்த்தைகள். சூர்யாவை உடனே எதிர்த்து பேச முடியாமல் திணறுகிறாள். இப்படி இருவருக்குமான முட்டல் *மோதல் = காதல் வளருகிறது.

சூர்யா பாயைப் பொறுத்தவரையில் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்காது. எதிராளிக்கும் தெரியாது. ஆனால் அவன் ஒன்றை நம்புகிறான். மனிதனை இயக்குவதற்கு என்ன தேவை, பணம். அதை வைத்து மனிதர்களை ஆட்டி வைக்கிறான். அதில் ஈவிரக்கமே பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு விலை இருக்கும்.

பணம், குடும்பம், அம்மா, மகள் என எதைக் கொடுத்தாவது தான் விரும்பியதை பெற வேண்டும் என்கிற வெறி அவனுக்கு உள்ளது. ஒரு கட்டத்தில் கமிஷனரே, ‘’ உனக்குள்ள இருக்கிற வெறி, எங்க டிபார்ட்மென்டுல ஒருத்தருக்கு இருந்தா போதும். நினைச்சதை  சாதிக்க முடியும். ஆனா அப்படி யாரும் இல்லை’’ என வருத்தப்படுகிறார். அதேசமயம், பாரபட்சம் பார்க்காமல் யாரையும் வெட்டியெறியும் அவன் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மிரள்கிறார். அது தவறு பாதையை  மாற்றிக்கொள் என எச்சரிக்கிறார். ஆனால் சூர்யா பாய் ,’’ நான் உங்களுக்கு எதிரானவன் கிடையாது. எம்மேல கோபப்படாதீங்க, எதிரியாக நினைக்காதீங்க சார்’’ என்று சொல்லுகிறான்.

கமிஷனர் அஜய், எதை அழித்தேன் என்று சொன்னாரோ அதை மீண்டும் உருவாக்குவதுதான் சூர்யா பாயின் லட்சியம். இதற்காக, அவன் மேயர் தேர்தலில் போட்டியிட நினைக்கும் அரசியல்வாதியான லாலு (சாயாஜி ஷிண்டே)விடம் செல்கிறான். அவருக்கு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவரை  கொல்ல வேண்டியிருக்கிறது. அதை தான் செய்வதாக சூர்யா பாய் சொல்கிறான்.  லாலுவுக்கு சிறை செல்வதில் விருப்பமில்லை. எனவே, சூர்யா பாய் சொல்வதை ஏற்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு டோங்கிரிக்கு வந்து ஈகோ ரவுடிகளை அடித்து உதைத்து வழிக்கு கொண்டு வந்து கையில் பணத்தைக் கொடுக்கிறான். பணம் அவன் மீது ரவுடிகளுக்குள்ள அத்தனை சந்தேகங்களையும் போக்குகிறது. வேலையில்லாமல் திரிந்த ரவுடிகளுக்கு சூர்யா பாய் மேல் நம்பிக்கை வருகிறது. சிறையில் உள்ள தாராவி ரவுடி ஷகீலை வைத்து எதிரியை (முன்ஷியை) முடித்து அவனை பிணையில் எடுத்தபிறகுதான் சூர்யாவின் அடுத்தடுத்த திட்டங்கள் நமக்கு தெரிகிறது. லாலுவுக்கு, சூர்யா பாய் மீது நம்பிக்கை வருகிறது. கார், வீடு, பணம் என நிறைய வசதிகள் கிடைக்கின்றன.

தனது மாஃபியா ஆட்களுக்கு ஆதரவாக தாராவி மக்களை கேடயமாக நிறுத்துகிறான். இதற்காக அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் பத்திரங்களை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுக்கிறான். பிறகு, மாநகரின் முக்கியமான வணிகர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் போன்கால்களை செய்கிறான்.

ஒரு தொழிலதிபர், கமிஷனர் அலுவலகம் சென்று, அஜயிடம் மிரட்டல் பற்றி புகார் அளிக்கிறார். அவர் சூர்யா பாய் யாரென கூட்டி வர காவலர்களை அனுப்புகிறார். சூர்யா, வந்தவர்கள் காவலர்கள் யாரென தெரிந்தே அடித்து உதைக்கிறான். பிறகு ஒருவழியாக கமிஷனரை சந்திக்க வருகிறான். தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டவில்லை என பொய் சொல்லி அங்கிருந்து அமைதியாக வெளியே வருகிறான்.

குற்றச்செயல்களை திறமையாக ஒருங்கிணைக்க சூர்யா பாய், சூர்யா எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் என்று தனது பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறான். ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற சாம்ராஜ்யம். இதற்கு அரசியல்வாதியான லாலுவின் ஆதரவும் உள்ளது. அவர்களுக்குத் தேவையான விஷயங்களை சூர்யா பாய் செய்கிறான்.

உண்மையில் சூர்யா யாரையாவது நேசிக்கிறானா என்றால் அதிகாரத்தை மட்டும்தான். பணத்தை அல்ல. ஒருமணிநேரத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிகிற திறமையுடையவன், ஏன் கஷ்டப்படப்போகிறான்? பெரும் சக்தி கொண்டவர்களின் நட்பு, அவர்கள் மூலம் கிடைக்கும் வசதி ஆகியவற்றை சூர்யா பெறுகிறான். அதேசமயம் அவன் தான் செய்துகொண்டிருக்கிறோம், அதற்காக என்ன விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதையும் உணர்ந்திருக்கிறான். அதை அவன் கமிஷனரிடம் வெளிப்படையாகவே கூறுகிறான்.  

கமிஷனரிடமிருந்து தன்னைப் பாதுகாக்கவே காதலைத் தேடி ஓடுபவன் ஒருகட்டத்தில் தனது தத்துவங்களை சித்ராவுக்கு சொல்லி அவளையும் தெளிவாக தனக்கு ஏற்றபடி மாற்றுகிறான். உலகில் நல்லவனாக இருப்பது வேறு, சாமர்த்தியமாக இருப்பது வேறு. விஜய் சூர்யா என்கிற சூர்யா பாய், இரண்டாவது ரகம்.

தன்னைப் பற்றி பாதி உண்மையை சித்ராவிடம் சொல்லுபவன், முழு உண்மையைக் கூறுவதில்லை. அவளாக தெரிந்துகொள்ளும்போதும், அவனுக்கு பெரிய அதிர்ச்சியெல்லாம் இல்லை. கமிஷனரிடமிருந்து பாதுகாக்க கேடயம் போலத்தான் அவள் இருக்கிறாள். ஆனால் அவளின் காதல், அவனை இயல்பில் யாரென்று நினைவுபடுத்துகிறது. அவனுக்கென கடந்த காலத்தில் ஒரு கதை இருக்கிறது. அதைப் படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 ‘’பசின்னு சொன்னா இங்கே யாரும் சோறு போடமாட்டாங்க சார். பத்து ரூபாய்க்கு ஒரு சிம் கார்டு வாங்கி போன் பண்ண ஒரு கோடி ரூபா  உடனே கையில கிடைக்கும்’’

‘’போர்  செய்ய தைரியமில்லாதவன்தான் அமைதி, சமாதானம்னு பேசிக்கிட்டு இருப்பான்’’

‘’நான் மும்பைக்கு வந்தது இதை ஆளறதுக்கு. பணத்து மேலேயெல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல’’

‘’உங்களுக்குன்னு, உங்க மகளுக்குன்னு கனவு காணுங்க சார். என் கனவு உங்களுக்கு பிடிக்காது. உங்க கனவு எனக்குப் பிடிக்காது. அதனாலதான் ஒருத்தன் உலகத்துக்குன்னு கனவு கண்டா பலிக்கிறதில்ல ’’

மாஃபியா கேங் தலைவன் என்றாலும் சூர்யா பாய் பேசும் வசனங்களில் ஓஷோவின் நூல்களிலுள்ள பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.அதெல்லாமே, இயக்குநர் பூரியின் டச். இதனால்தான் கமிஷனர் அஜய் கூட அவனை சாதாரண ரவுடி என ஒதுக்கிவிட முடியாமல் கைது செய்ய முடியமல் தடுமாறுகிறார்.

வசனங்களைப் புரிந்துகொண்டாலே சூர்யாவின் பாத்திரத்தை புரிந்துகொள்ள முடியும். தனது சொந்த அனுபவங்களால் காவல்துறை, சட்டம், மனிதநேயம் என எதையும் நம்பாத ஆளாக சூர்யா பாய் இருக்கிறான். அதேசமயம் தன் காரியத்தை எப்படி சாதித்துக்கொள்வது எப்படி என்பதை மிகத் தீர்க்கமாக திட்டம் போட்டு வைத்திருப்பான்.

 ஒரு பெரும் கூட்டத்தையே நிர்வாகம் செய்யும் திறமை அவனுக்கு உண்டு. யாருக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதுதான் அவனது திறமை. சரியான விலையை, பிஸ்கெட்டை கொடுத்தால் வேலை நடக்கும். மேயர் தேர்தலில் போட்டியிட முயலும் லாலுவுக்கு இருக்கும் போட்டியாளரை உளவியல் ரீதியாக மிரட்டி வைக்கும் டெக்னிக் இந்த வகையில் சேரும். துப்பாக்கியால் ஒருவரை சுட்டால் உடனே உயிர் போய்விடும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் என்னால் உன்னைக் கொல்ல முடியும் என ஒருவரை மிரட்டி புரிய வைப்பது எப்படி இருக்கும்? அடிப்பதை விட அடிப்பான் என தெரிந்து பயத்துடன் இருந்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதானே?

படம் நெடுக நடிகர் மகேஷ்பாபு மிகவும் தீவிரமான முகபாவத்துடன் ஆக்ரோஷத்துடனே இருப்பார். தனது நிலையை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் காதலியைக் கூட பேச்சால் மனமுடைத்து அனுப்புவதற்கு தயங்குவதில்லை. அவன் வேண்டுவது நேரடியான அணுகுமுறையில் நேர்மையான பேச்சைத்தான். அதில் யாராவது மாய்மாலம் காட்டினால், கண்ணாடி போல அங்கேயே உடைத்து போட்டுவிடுகிறான். காதலிக்கு வாங்கித் தரும் ஆஸ்டின் மார்ட்டின் கார் காட்சி இப்படிப்பட்டது.

பிஸினஸ்மேனாக மாறி தான் இழந்த அத்தனையையும் மீண்டும் பெறுவதோடு, தனக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதுதான் சூர்யா பாயின் திட்டம். ஆனால், அதை கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி மெல்ல செய்கிறான். எதிரி ஒருவரை பதற்றப்படுத்தி உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி அழிக்கிறான். எந்த இடத்திலும் தாழ்ந்துபோகாத தளராத தன்னம்பிக்கை கொண்ட புத்திசாலித்தனமான பாத்திரம்.

இயக்குநர் பூரி ஜெகன்னாத்


உண்மையில் மீண்டும் இப்படியொரு பாத்திரத்தை பூரியே மீண்டும் உருவாக்க நினைத்தாலும் உருவாக்க முடியாது. காலம் அப்படிப்பட்டதுதான். 


கருத்துகள்