சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

 








எழுத்தாளர் உதயணன்



சமுத்திர கோஷம்

உதயணன்

வைதேகி பதிப்பகம்

விலை ரூ.110


பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை.

இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.  அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார்.

நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன.

நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உதயணன் காட்டவில்லை. நந்திபுரத்தை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் விட்டதால், அதை பாண்டியர்கள் கைப்பற்றுகிறார்கள்.

பிறகுதான், பல்லவன் நந்தி, தனது தளபதி உதயச்சந்திரனோடு சென்று பாண்டியர்களைத் தோற்கடிக்கிறான். நிலத்தை, மக்களை மீட்கிறான். மக்கள், அவனது ஆட்சியை குறைகூறும்போதும் அதிலுள்ள உண்மையை உணர்வதால் அவர்களை தண்டிப்பதில்லை. அவர்களிடம் தான் காஞ்சியை தோற்ற உண்மையை சொல்கிறான். நாவலில் இந்த காட்சி வரும் இடம் முக்கியமானது. இது நந்திவர்மனின் நிதானத்தை, புத்திசாலித்தனத்தை, பொறுமையைக் கூறுவதாக உள்ளது.

நந்திவர்மன் பனிரெண்டு வயதில் அரியணை ஏற, அவனுக்கு அமைச்சர் பிரம்மஶ்ரீராஜர், கடிகைத் தலைவர், காரியஸ்தர் ஆகிய மும்மூர்த்திகள் உதவுகிறார்கள். அவர்கள்தான, பல்லவன் இல்லாத சமயம் நாட்டை பாதுகாப்பவர்களாகவம் இருக்கிறார்கள்.

 இந்த வகையில் சாளுக்கியனை போர் செய்யாமல் உள்ளே அனுமதிப்பதற்கான காரணம் அருமையானது. தொடக்கத்தில் ஏதோ போர் தந்திரம் என்று நினைப்பவர்கள் கூட அதன் பின்னே இருப்பது இப்படியான ஒரு காரணம்தானா என வியப்பார்கள்.

இந்த தொலைநோக்கு சிந்தனைதான், பல்லவ மன்னனை வேறுபடுத்திக் காட்டுகிறது. சாளுக்கிய, பல்லவ போரில் பின்னணியில் இருப்பது மதம் சார்ந்த அரசியல். அதை சம்பவமாக விவரித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் உதயணன், நந்தி வர்மன், சைவம், வைணவம் என இரண்டு பிரிவுகளுக்குமான வேறுபாட்டை திருமங்கையாழ்வாரிடம் விளக்கி கூறுவது அருமை.

தன்னை முழுக்க குருவிடம் சரண்டையச் செய்து அதன் வழியாக அவரின் ஆசிர்வாதத்தை பெறுவது பற்றி திருமங்கையாழ்வார், சீடர்களிடம் கூறுவது முக்கியமானது. அந்த காலத்தில் இருந்த குரு, சீடர் உறவை விளக்கி பேசுவதாக உள்ளது.

கதையில் பெண்கள் மிக குறைவு. அப்படியிருக்கும் பெண்களில் முதல் பெண் மோகினி. இவள், தொடக்கத்தில் வசீகரமாக அறிமுகமானாலும் இறுதியில் கீர்த்திவர்மனால் சிதைக்கப்பட்டு, குறுவாளால் காயப்படுத்தப்படுகிறாள். அடுத்து ராஷ்டிரகூட இளவரசி ரேவாதேவி. இவருக்கான அறிமுக காட்சி, நன்றாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவரை முதிர்ச்சியான புத்திசாலித்தனம் கொண்ட பெண்ணாக காட்டவில்லை என்பது சற்று மனக்குறை. ரேவா, ஹரிசரணபரன் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேவா தனது காதலை ஹரி சரணபரணிடம் வெளிப்படையாக கூறுமிடம்.

 

பல்லவ , சாளுக்கிய போருக்கு அடிப்படையாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாக சமண மதமே முன்னால் வருகிறது. பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படும் ஐந்து சமணத்துறவிகளில் தீயடிகள் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனம் முழுக்க நய வஞ்சகமும், பேச்சில் இனிப்பான தேன்போல பேசும் நபரே இந்த துறவி. இவரை நந்தி வர்மன் ஏமாற்றி, தந்திரமாக வீழ்த்துவது யாரும் எதிர்பார்க்காத  ஒன்று.

பல்லவ மன்னர்கள் நிலத்தில் மட்டுமல்ல கடலிலும் ஆட்சி செலுத்தி வந்த விஷயத்தை கடல் படை, பாரசீக மன்னனின் நட்பு ஆகியவற்றை வைத்து நுட்பமாக கூறியிருக்கிறார் எழுத்தாளர்.

பல்லவ மன்னனின் பக்தி, ஆளுமை, சாதுரியம், சூழ்ச்சி, திறமை ஆகியவற்றை பற்றி நாவல் பல்வேறு இடங்களில் நன்றாக பதிவு செய்துள்ளது. சமுத்திர கோஷம் என்பது பல்லவர்களின் கௌரவ சின்னம். அதை சாளுக்கியர்களிடமிருந்து எப்படி நந்திவர்மன் மீட்டு தங்கள் வம்ச பெருமையைக் காக்கிறான், அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.  விக்கிரமாதித்தரை எதிர்த்துப் பேசும் பிரம்மஶ்ரீராஜர், தளபதி ஆகியோரின் சம்பவங்கள் சிறப்பானவை.

திருமாலுக்கு அடியேன்தான் பல்லவ மல்லன் நந்திவர்மன் என்பதை எழுத்தாளர் அழகான எழுத்துக்களால் உறுதிப்படுத்தியிருக்கிறார். தான் ஒரு நம்பிக்கையை பின்பற்றினாலும், பிற பிரிவினரை, மதத்தை எதிரியாக கருதாத குணத்தை, மக்களுக்காக தலைவன் வாழவேண்டும் என்பதை கூறியிருப்பது முக்கியமானது.

 கோமாளிமேடை டீம்

 ---------------------------------

https://www.goodreads.com/book/show/18958128-samuthira-kosham

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17458&id1=9&issue=20201122

கருத்துகள்