தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

 










மார்ஷியல் ரெய்ன்ஸ்

மங்கா காமிக்ஸ்

550 (ஆன் கோயிங்)

ரீட்எம்.ஆர்க்


யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார்.

தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர்.

பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு  உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில் தனது ஆன்மாவை புகுத்த முயல்கிறார்.

அப்போது, யே மிங்கின் உடலில் அணிவிக்கப்படும் மந்திர ஆடை ஒன்றில் உள்ள பெய்மிங் என்ற ஆவி, அவனது உடலில் புக முயலும் பிச்சைகாரரின் ஆன்மாவை அழித்துவிடுகிறது. இதனால், யே மிங் உயிர் பிழைத்து எழுகிறான்.  மந்திர உடை ஆவி பெய்மிங், யே மிங்கை மாஸ்டராக ஏற்று அவன் கற்றுக்கொள்வதற்கான பல்வேறு தற்காப்புக்கலை நூல்களைத் தருகிறது. அதைக் கற்று தேரும் யே மிங், யே குடும்பத்தினர் நடத்தும் தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்று தன்னை தற்காப்புக்கலை கற்க முடியாதபடி ஊனமாக்கியவனை படுகாயப்படுத்துகிறான். பிறகு லொள்ளு பேசும் யே குடும்ப இளம் வாரிசுகளை அடித்து நொறுக்குகிறான்.

அன்றிரவே யே குடும்பத்தினர் படுகொலையாளர்களை ஏற்பாடு செய்து யே மிங்கை கொல்ல முயல்கிறார்கள். தனது பெற்றோர் எப்படி இறந்தனர், அதற்கு காரணமானவர்கள் பற்றி அறிந்துகொள்கிறான். அந்த நபர்களை மனதில் குறித்து வைத்துக்கொள்கிறான். யே குடும்பத்தின் செயலை முன்னமே பெய்மிங் மூலம் அறியும் யே மிங், பெற்றோரை கொலை செய்வதில் பங்கு பெற்ற நான்கு முக்கியமான யே குடும்ப உறுப்பினர்களைக் கொல்கிறான்.

பிறகு அங்கிருந்து வேறு நகருக்கு செல்கிறான். அங்கும் அவனைக் கொல்வதற்கு  முயற்சி நடைபெறுகிறது. தாக்க வந்த அத்தனை பேர்களையும் உடல் கூட கிடைக்காதபடி நொடியில் அழிக்கிறான் யே மிங். பிறகு ரெட்சன் செக்ட்டில் சேர்ந்து பயிற்சி செய்கிறான்.

யே மிங்கிற்கு பெற்றோர் கிடையாது. அவனுக்கு வாழ்க்கை முழுக்க நண்பர்களின் உதவி மட்டும்தான் கிடைக்கிறது. யே குடும்பத்தில் சதி செய்த ஆட்களை யே மிங் நேரடியாக மோதி அழிக்கிறான். மீதியுள்ளவர்கள் அவர்களுக்குள்ளாக சண்டை போட்டு அழிந்துவிடுகின்றனர். பிறகுதான் சூ லான், ஆசிரியர் செங், நண்பன் ஹெங், வெள்ளை உடை தோழி, நரித்தோழி ஆகியோர் கிடைக்கிறார்கள். இவர்கள் அவனது வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக தொடர்கிறார்கள்.

காமிக்ஸில் யே மிங்கிற்கு இருப்பது ஒரே நோக்கம். தன்னை ஊனமாக்கிய யே குடும்பத்தின் சக்திவாய்ந்த ஆட்களைக் கொல்வது. அதை அவன் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்கிறான். பிறகு அவன் சூ லான் என்ற பெண்ணை ஷின்லாங் அகாடமியில் சந்தித்து பழகுகிறான். அவளின் திறமை அவனை வசீகரிக்கிறது. தான் அவளை காதலிப்பதாக சொல்லிவிடுகிறான். ஆனால் அவள்’’ நீ சக்தி பெற்றவனாக, தற்காப்பு கலையில் செயின்ட் நிலையை எட்டினால் மட்டுமே என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியும்’’ என நிபந்தனை விதிக்கிறாள். ஏன் என்று யே மிங் கேட்பதில்லை. அதை அவளே பின்னர் கூறுகிறாள். அது அவளது பிறப்பு, குடும்பம் சார்ந்த சிக்கல்கள். பின்பகுதி கதையை சூ லானின் உடம்புதான் நடத்திச் செல்கிறது.  

யே மிங் ஒரு கட்டத்திற்கு மேல் சூ லானைக் காக்க, அவளை மணம் செய்ய சூசாகு  அரசின் இளவரசரையே எதிர்க்கிறான். அந்த முயற்சியில் தனது சக்தியை பெருமளவு இழந்தாலும் இளவரசருக்கு நினைத்துப் பார்க்க முடியாத இழப்பு ஏற்படுகிறது.  யே மிங் வாழ்க்கை முழுவதும் காதலிப்பது, மணம் செய்துகொள்ளவேண்டும் என நினைப்பது சூ லானை மட்டும்தான். ஆனால் அவனை எந்த நிபந்தனையும் இல்லாமல் மணக்க ஷி சூ என்ற அசாதாரண பலம் கொண்ட பெண், யின் யான் செக்ட்டைச் சேர்ந்த வெள்ளை உடைப் பெண், நரிப்பெண், ரோஸ் பின்ச் இளவரசி ஆகியோர் தயாராக இருக்கிறார்கள். பெய்மிங் ஆவி, அவனுக்கு இந்த பெண்களின் சிறப்புகளை சொன்னால் கூட யே மிங் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.  யே மிங் அவர்களை இடது கையால் கையாள்வான். பெரிதாக கண்டுகொள்ள மாட்டான்.

காமிக்ஸ் நெடுக ஏராளமான தற்காப்புக்கலை ரகசியங்கள், சக்திநிலையை அதிகரிப்பது, பல்வேறு தற்காப்பு ரகசியங்கள், வாள் கலைகள், உள் மன ஆற்றல் பற்றி ஏராளமான கருத்துகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இதெல்லாம் படித்தாலே தலை சுற்றிப் போகும். இதெல்லாம் தாண்டி சிறிய உலகம், தனி உலகம், வெளி உலகம் என கதை மாறி மாறி நடைபெறும் இடம் வரும்போது உண்மையில் சற்றே கிறுகிறுப்பு தட்டுகிறது. நாம் எந்த உலகில் இப்போது இருக்கிறோம் என தெரிந்துகொண்ட பிறகே நிம்மதி ஏற்படுகிறது.

தற்காப்புக்கலையைக் கற்க நிறைய பணம் செலவாகும் என்பதால் நண்பனும் சிறந்த வியாபாரியுமான ஹெங்குடன் கூட்டணி போட்டு தற்காப்பு கலை சண்டைகளை  நடத்தி அதில் பணம் சம்பாதிக்கிறான் யே மிங். இப்படித்தான் பெரும் பணத்தை சம்பாதித்து அதில் வாழ்க்கையை நடத்துகிறான். கூடவே தான் சேமித்த  பொருட்களை நண்பர்களுக்கு கொடுத்து அவர்களையும் தன்னோடு இருக்கும்படி செய்கிறான். நணபர்கள், ஆசிரியர்கள் பலரும் அவனால் கொடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களைப் பெற்று அதனால் நலன் பெற்றவர்கள்தான். ஒரு கட்டத்தில் தான் வாழும் இடத்தில் வங்கி நடத்தி பணக்காரனாவதெல்லாம் அட்டகாசம். அதற்காகவே அவனுக்கு நிறைய பிரச்னைகள் வருகின்றன.

யே மிங், அநீதி இழைக்கப்பட்டு, அதை தட்டிக்கேட்டு வந்த காரணத்தால் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டு தவறான ஆட்களை அடித்து உதைக்கிறான். மார்ஷலாக இருக்கும்போது, கிராமத்தை வேட்டையாடிக் கொன்ற ஒரு இனக்குழுவையே கூட அடித்து உதைத்து சிறையில் போடுகிறான். ஒரு உதவியை ஒருவருக்கு செய்தால், ‘’நீங்கள் பதிலுக்கு ஒரு உதவியை செய்யவேண்டும். இலவசமாக எந்த உதவியையும் யாரும் செய்ய மாட்டார்கள்’’ என தெளிவாக சொல்லிவிடுகிறான். அபார நீதியுணர்வு கொண்டவனாக இருப்பதால்தான், அவனுக்கு நண்பர்களும் தவறைக் கண்டால் தட்டிக் கேட்பவர்களாக அமைகிறார்கள்.

யே மிங், வூ ஜியூ என இருபாத்திரங்கள் பின்னர் வருகின்றன. யே மிங், வூ ஜியூ என்ற பாத்திரத்தில் லாங் என்ற குடும்பத்திற்காக உழைக்கிறான். அப்படி உழைத்து உதவி செய்தால், அவனுக்கு நிறைய பயன்கள் கிடைக்கும் என ஹவோசியன் செக்ட் கூறுகிறது. இங்குதான் காலம் என்பது நிறைய மாறுபடுகிறது. சில பெண் பாத்திரங்கள், ஆண்களாக அழைக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.  மற்றபடி சுவாரசியமாக மங்கா காமிக்ஸை படிக்கவேண்டுமா, தயங்காமல் இந்த காமிக்ஸை தேர்ந்தெடுக்கலாம். வாய்ப்பிருப்பின் வாசியுங்கள்.

கோமாளிமேடை டீம்

-------------------------------------------------

https://manhuaus.com/manga/martial-arts-reigns/

https://martial-arts-reigns.fandom.com/wiki/Ming_Ye

Author(s)
 
Genre(s)
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்