அரசு அதிகாரி வழங்கும் இலவச அரசுத் தேர்வு பயிற்சி - கேள்வி பதிலுக்கு பணப்பரிசு, மாணவர்களுக்கும் உணவும் உண்டு

 






சௌதி அரேபியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர், நாராயண குமார். வேலையில் திடீரென சிக்கல் ஏற்பட்டு, மூன்று மாத சம்பளம் இல்லாத நிலையில் தனது ஊருக்கு திரும்பி வந்தார. அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியாத நிலையில், தவித்தார். அப்போது அவருக்கு மாரிமுத்து என்பவர் அரசு வேலைக்கான பயிற்சி வழங்குவது தெரிய வந்தது. விருதுநகர் சென்று பயிற்சி வகுப்பில்  கலந்துகொண்டவர், அரசு தேர்வு எழுதி தாசில்தாராக பணியில் இயங்கி வருகிறார். இவரின் உறவினர்கள் இருவர் கூட அரசு வேலையில்தான்  உள்ளனர். இவர்களும் மாரிமுத்துவிடம் பயின்றவர்கள்தான்.

இங்கு செய்தி மாரிமுத்துவைப் பற்றித்தான்.  பத்தாயிரம் இளைஞர்களை அரசுத் தேர்வில் வெல்ல வைத்திருக்கிறார். இவர் ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாசில்தாராக செயல்பட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளில் வெல்ல இலவச பயிற்சி வகுப்புகளை எடுக்கிறார். மாரிமுத்து, அரசுப் பணிகளுக்கான  பயிற்சி வகுப்புகளை பதினெட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து. அரசு அதிகாரியாவதுதான் அவரது கனவு. அதை நிஜமாக்கி 1994ஆம் ஆண்டு திருமங்கலத்தில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணிக்குச் சேர்ந்தார். அப்போது, அரசுப்பணிக்கு முயல்பவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவிப்பதைப் பார்த்தார். எனவே, அவர்களுக்கு உதவ முனைந்தார். இதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அமைந்துள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் அரசு வேலைகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தொடங்கினார். இதற்கான தயாரிப்பு என்பது, தினசரி வேலை முடிந்தவுடன் தொடங்கிவிடும். நள்ளிரவு வரை வார இறுதி வகுப்புகளுக்கான தயாரிப்பை செய்கிறார். பிறகு தூங்கச்சென்றுவிடுகிறார்.  அடுத்தநாள் காலை தனது அரசு பணியில் எப்போதும் போல ஈடுபடுகிறார்.

மாரிமுத்து, பயிற்சி வகுப்புகளில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் ரூ.100 கொடுக்கிறார். பிற மாவட்டங்களிலிருந்தும்  மாணவர்கள் வருவதால், அவர்களின் உணவுக்காக வள்ளலார் திட்டம் என்பதை தொடங்கி 4 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். உணவு செய்த தனி சமையல்காரர் உண்டு.  ஆண்டுதோறும் தீபாவளியன்று, வறுமை நிலையில் உள்ள 100 மாணவர்களுக்கு உடைகளை வாங்கிக் கொடுத்து வருகிறார்.  மாரிமுத்து போன்று உள்ளொளி கொண்ட ஆன்மாக்களும் மாணவர்களில் உருவாகி வளர வேண்டும்.

ஹரிணி எம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

pixabay.com 

கருத்துகள்