பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!
பற்களை
துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம்
அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா?
இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி,
கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை
பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன.
கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள்.
இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே
இல்லை.
1.பிரச்னையை
அடையாளம் கண்டு கூறவேண்டும்
2.அதை மிகப்பெரியதாக்கி
பதற்றம் ஏற்படுத்தவேண்டும்
3. தீர்வைக்
கூறவேண்டும்
பற்பசை
விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு,
பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று
சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள், பெண்கள்,
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகையிலானது என நிறைய பிரிவுகள் உண்டு.
பயம் என்று சொன்னால் பிரதமர் அடுத்த பணமதிப்பு நீக்க
நடவடிக்கையை எப்போது அறிவிப்பார் என்பது தொடங்கி, ஐம்பது ரூபாயாக உயர்ந்துகொண்டு வரும்
கேஸ் விலை, ஞாயிறு வாங்கும் மாட்டுக் கறியில் ஈ கோலி பாக்டீரியா இருக்குமா? ரிலையன்ஸ்
ஸ்மார்டில் புதன்கிழமை தள்ளுபடி விலை உண்டா, பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிட்டால் புற்றுநோய்
வருமா? பிஎஃப் பணம் நமக்கு கிடைக்காவிட்டாலும் பேரப்பிள்ளைக்கேனும் கிடைக்குமா என நிறைய
பயங்கள், தெனாலி சோமனை விட அதிகம் உண்டுதான். இந்தியர்கள் இத்தனை பயங்களை உள்நாட்டில்
சந்திப்பதால்தான் வெளிநாட்டில் சிறந்த மேனேஜர்களாக வெற்றி பெறுகிறார்கள்.
ஷாக் அட்வர்டைஸ்மென்ட்
என்ற வகை ஒன்றுண்டு. இந்த வகை விளம்பரங்களைப் பார்த்தாலே ஐந்து நிமிடங்களுக்கு உங்களால்
வேறு எதையும் யோசிக்கமுடியாது.அந்தளவு கொடூரமான உண்மையை பளிச்சென விளம்பர பேனரில் சொல்லியிருப்பார்கள்.
எங்கள் பிராண்டு காபியின் மணம், தேளின் விஷம் போல மூக்கில் ஏறும் என தேள் மூக்கில்
நுழையும் படத்துடன் விளம்பரப்படுத்தினால் எப்படியிருக்கும்? யாருமே அதை மறக்கமுடியாது
அல்லவா?
இதுபோல
அதிர்ச்சியான விளம்பரங்களை பீட்டா, சிகரெட் தடுப்பு அமைப்புகள் செய்கின்றன. அதேசமயம்
வீட்டில் பாதுகாப்பு கேமரா வசதி செய்து தரும் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள்
மேற்சொன்னபடி பயத்தை ஆயுதமாக்கி பெண்களை மையப்படுத்தி விளம்பரப்படத்தை எடுக்கின்றனர்.
இதனால் இதைப் பார்க்கும் மக்கள் பீதியாகி உடனே தங்கள் வீட்டுக்கு பாதுகாப்பு கருவிகளை
வாங்கிவிடுவார்கள். இல்லையென்றால் அதிர்ச்சியாகி நெஞ்சுவலி வந்து படுத்துவிடுவார்கள்.
பயமும்,
குற்றவுணர்ச்சியும் கொள்வதில் யார் முந்துகிறாரர்கள்? ஆணா, பெண்ணா? பெண்கள்தான். அல்லவா?
எனவே, ஆரோக்கியம், பாதுகாப்பு, குழந்தைக்கான பொருட்கள், முதுகுவலித் தைலங்களை, மருத்துவப்
பொருட்களை பெண்களை இலக்காக வைத்தே பயமுறுத்தி
விற்கிறார்கள்.
மேற்கு நாடுகளில் பெண்கள் துணிச்சலாக இயங்குகிறார்கள்.
பொருளாதார சுதந்திரம் உண்டு. ஆனால், ஆசியாவில் குடும்பம் என்பது பெண்களை சுற்றியே அமைந்துள்ளது.
வேலைக்கு போனாலும் வீட்டுக்கு வந்து அவர்கள்தான் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யவேண்டும்.
பெண்கள்தான், அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைக்கிறார்கள்.
குழந்தையை சரியாக கவனித்துக்கொண்டோமா, உணவு, மாத்திரை கொடுத்துவிட்டோமா என அங்கலாய்ப்பாக
இருந்து குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள்.குழந்தை பெற்றால் கூட அதை வளர்ப்பது பெண்களின்
பொறுப்பு என ஆண்கள் நம்புகிறார்கள். சமூகமும் அதை ஏற்கிறது.
இன்று, ஸோமாடோ வரையிலான உணவு சேவை நிறுவனங்கள் கூட
உலகமயமாக்கலால் ஏற்படும் வேலைநேரம் அதிகமாதலை பயன்படுத்தியே வளர்கிறது. வெளியே சென்று
சாப்பிட நேரமில்லையா? ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும். சாப்பாடு வீட்டுக்கே வந்துவிடும்
என விளம்பரம் செய்கிறார்கள்.
ஆண், பெண்
என பெற்றோர் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்ட நிலையில் ஐடிசி, டாடா, எம்டிஆர்
ஆகிய நிறுவனங்கள் ரெடிமேடாக மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து சாப்பிடும் உணவுகளை
தயாரித்து விற்கத் தொடங்கிவிட்டன. இதனால், தாய்மார்கள் அதிக குற்ற உணர்வு கொள்ளாமல்
டபுள் டோர் பிரிட்ஜை திறந்து, ரெடிமேட் பொங்கலை, சப்பாத்தியை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடவேண்டியதுதான்.
ஆனாலும் நம் கையால் செய்து தரவில்லையே என்ற குற்றவுணர்வை சுற்றமும், சமூகமும் ஏற்படுத்துகிறதே?
இதையும் விளம்பர நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன.
முதலில்
பீட்ஸாவை வீட்டிலேயே செய்வதற்கான பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்டன. அதை
வாங்கி பெண் அல்லது ஆண் யார் வேண்டுமானாலும் பீட்ஸாவை வீட்டில் தயாரித்துக்கொள்ளலாம்.
இப்படி விற்பனை செய்தது கூட பிள்ளைகளுக்கு நாம் கையால் ஏதும் சமைத்துக் கொடுக்கவில்லை
என்ற குற்றவுணர்வு பெண்களுக்கு ஏற்பட்டதால்தான். அதைப் பயன்படுத்தி நிறுவனங்கள் விற்பனையில்
உச்சத்தை எட்டிப்பிடித்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக