பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

 





கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி

பத்திரிகையாளர் கரண் தாப்பர் 




இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா?

இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,  ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர்.

பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் கேள்விகளைப் பாருங்கள். பிரதமரின் திட்டங்களை, செயல்பாடுகளை விமர்சித்து கேள்வி கேட்பதாக இருக்காது. எதிர்க்கட்சியினர் இப்படி கூறுகிறார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள்? என்றுதான் கேள்வி இருக்கும். அதாவது, டிவி சேனல், பிரதமர் பதில் சொல்ல ஒரு களத்தை அமைத்து தருகின்றன. அவ்வளவுதான். இதில் எந்த கடினமான விஷயமும் இல்லை.

நேர்காணல் கேள்விகளில் தொடர்ச்சி இல்லை என்கிறீர்களா?

ஒவ்வொரு கேள்வியும் வெவ்வேறு விஷயங்கள் பற்றி கேட்கப்படுகிறது. பிரதமர் கூறும் பதில் தவறாக,முழுமையில்லாததாக கூட இருக்கும். ஆனால் அதைப்பற்றி எந்த தொடர்ச்சியான கேள்விகளும் கேட்கப்படுவதில்லை.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். அண்மையில் இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். ஆஜ்தக் டிவி சேனலின் ஆலோசனை ஆசிரியர் சுதீர் சௌத்ரி, இந்தியில் கேள்விகளைக் கேட்டார்.  அமித்ஷா, ராகுல்காந்தி வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசுகிறார். அதற்கு அவர் விளக்கம் தரவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னார்.

 

நான் சுதீர் சௌத்ரியின் இடத்தில் இருந்திருந்தால் சில கேள்விகளைக் கேட்டிருப்பேன். வெளிநாடுகளுக்கு சென்று இந்திய நாட்டைப் பற்றி விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, அப்படி செய்பவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறீர்கள் எனில், 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி சீனாவின் ஷாங்காய், தென்கொரியாவின் சியோல் ஆகிய நாடுகளுக்குச் சென்று  இந்தியாவைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்பாரா?

உள்துறை அமைச்சரிடம் நான் கேட்கிறேன். திரு. மோடி, இந்தியாவின் பிரதமர். எதிர்க்கட்சியின்  தலைவர் அல்ல. நாட்டை விமர்சனம் செய்பவர் பிரதமர் என்பதால் அவர் தவறு செய்தாலும் அது பெரிய விஷயமல்ல. ஆனால் ராகுல்காந்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். எனவே அவர் தான் பேசியதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும், மன்னிப்பும் கேட்கவேண்டும். இது இரட்டை நிலைப்பாடாக தெரியவில்லையா? இந்த முட்டாள்தனம் வெளிப்படையாக தெரிகிறதே? ஆனால் இதுபோன்ற கேள்விகள் அமித் ஷாவிடம் கேட்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு, அதற்குப் பின்னரும் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்விகள் சவால் விடுவதாக, உண்மையை வெளிப்படுத்துவதாக இல்லை. அரசியல்வாதிகளுக்கு பிரபலம் ஏற்படுத்தி கொடுப்பதாக, விளம்பரப்படுத்துவதாகவே மாறிவிட்டது.  

 நீங்கள் கேட்டதிலேயே முட்டாள்தனமான கேள்வி என்று எதைக் கூறுவீர்கள்?

பராக் ஒபாமாவிடம் கேட்ட கேள்விதான்.சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்பதால் அதை அவர் ரசிக்கவில்லை. அமெரிக்கா, இரண்டு டொனால்ட்ஸிற்கு பிரபலமானது. ஒன்று டொனால்ட் டக், மற்றொன்று டொனால்ட் ட்ரம்ப். இரண்டில் எது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது? என்று கேட்டேன். நான் கேட்ட கேள்வியில் உள்ள ஜோக்கை ஒபாமா புரிந்துகொள்ளவில்லை. நீளமாக அதற்கு பதில் சொன்னார்.

அடுத்து என்ன? புதிய நிகழ்ச்சி ஏதாவது செய்வதை யோசித்து வைத்திருக்கிறீர்களா?

நிறைய நிகழ்ச்சிகளை செய்வதற்கு சிந்தனைகள் உள்ளது. ஆனால் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பது கடினம்.

2017ஆம் ஆண்டு இந்தியா டுடே  குழுமத்தில் பணியாற்றியதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. குழும தலைவரான அருண் பூரி என்னை அழைத்து,’’ இங்கு பாருங்கள். நீங்கள் இங்கு இருந்தால் பாஜக  கட்சி இங்கு வராது. குழுமம் முழுமையாக புறக்கணிக்கப்படும்’’ என்று சொன்னார். ‘’ எனக்குப் புரிகிறது. டிவி சேனல்தான் உங்களுக்கு  முன்னுரிமையானது. அதில் வேலை செய்யும் தொகுப்பாளர் முக்கியமானவர் அல்ல’’ என்று பதில் சொன்னேன்.

2014-2019 ஆண்டுகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்காமல் வேறு ஒரு கட்சி வென்றிருந்தால் உங்கள் தொழில்வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா?

வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து, நான் மோடியை நேர்காணல் செய்திருந்தால் தொழில்வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா என்று கேட்கிறீர்கள்? நிச்சயமாக. எனது தொழில்வாழ்க்கை சிக்கலைச் சந்தித்தை நான் மறுக்கப்போவதில்லை. நான் நடத்திய டிவி நிகழ்ச்சி மிக பிரபலமானது அல்ல. அதன் மூலம் நான் நிறைய பயன்பெற்றேன் என்று சிலர் கூறுவது தவறானது.

 அந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த நன்மை, கரண் வெளிப்படையாக நேர்மையாக பேசுகிறார் என்ற கருத்துதான். அதுவும் பெரும்பான்மையினரால் கூறப்படவில்லை. பாஜக கட்சியால் நான் புறக்கணிக்கப்பட்டேன். அவர்களை என்னால் நேர்காணல் செய்யமுடியவில்லை. அதுவே, பின்னாளில் தொழில் வாழ்க்கையில் தடையாக மாறிவிட்டது.

பெருந்தொற்று காலகட்டத்தில் நிறைய ஊடகங்களுக்கு ஜூம் வழியாக பேட்டிகளை அளித்தீர்கள்? நேருக்கு நேராக கேள்விகளைக் கேட்பதற்கும் ஜூம் நேர்காணலுக்கு என்ன வித்தியாசங்கள் இருந்தன?

தொழில்நுட்ப வேறுபாடுகள் உண்டு. ஜூம் இணைப்பு எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யாமல் போகலாம். ஒருவருக்கு இணைப்பு சரியாக இருந்து மற்றொருவருக்கு சரியாக இல்லையென்றால் நேர்காணல் எடுக்க முடியாது.

அடுத்து, ஒருவர் பேசும்போது இன்னொருவர் இடைமறித்து பேச முடியாது. ஒருவர் பேசியபிறகு இன்னொருவர் பேச வேண்டும். நேருக்கு நேராக பேசும்போது, ஒருவரின் உடல்மொழியை நாம் பார்க்கலாம். ஜூமில் அப்படி பார்த்து எதையும் கண்டறியமுடியாது.  ஜூமை இலவசமாக சாதாரண இணைப்பில் பயன்படுத்தினால் 35 நிமிடங்கள் மட்டுமே இலவசம். அதற்கு பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். பிறகு நேர்காணலைத் தொடர மற்றொரு இணைப்பை உருவாக்க வேண்டும். இதெல்லாம் நேர்காணல் எடுக்கும்போது நேரும் சிக்கல்கள்.

பணம் கொடுத்து ஜூம் கணக்கு ஒன்றைத் தொடங்கலாமே?

ஜூம் கணக்கு ஒன்றை காசு கொடுத்து வாங்க நினைத்தேன் என்பது உண்மை. நீங்கள் பார்த்த நேர்காணல் ‘தி வயர்’ இதழுக்கு இலவசமாக அளித்ததுதான்.  திரு. மோடி, என் மீது கொண்ட காதலால் எங்களுக்கு விளம்பரதாரர் நிதியுதவி  ஏதும் கிடைக்கவில்லை. பதினாறு மாதங்களுக்கு எங்களுக்கு  ஒரு நிறுவனம் நிதியுதவி அளித்து வந்தது. ஆனால் விரைவில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர் எங்களுக்கு அளித்த வந்த நிதி உதவிகளை நிறுத்திவிட்டார். அவர் நேரடியாகவே ‘’எங்களுக்கு உதவி செய்வதால், அரசு அவரை எதிரியாக கருதி நடத்துவதாக’ கூறினார்.

ஜி சம்பத்

இந்து ஆங்கிலம்  

---------------------------------------

தமிழாக்கத்தின் காணொலி வடிவம் - இந்து யூட்யூப் சேனல் 

https://www.youtube.com/watch?v=4Yh50Mlg2s4

கரண்தாப்பர் மோடியை நேர்காணல் செய்த காணொலி....

https://www.youtube.com/watch?v=uqIuYi_SiSg

கருத்துகள்