ஆதி திராவிடர்களை எப்படிபார்ப்பனியம் அடிமைப்படுத்தியது? - ஜாதியத்தின் தோற்றம் - கொளத்தூர் மணி

 





கொளத்தூர் மணி



ஜாதியத்தின் தோற்றம்

கொளத்தூர் மணி

திராவிடப் பள்ளி

கோடம்பாக்கம்


ஜாதி என்பது எப்படி வந்தது, அதனை நாம் சாதி என மாற்றி எழுதுவது சரியா, பார்ப்பனர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்குமான வேறுபாடு, வர்க்க, ஜாதி வேறுபாடுகள் எப்படி உருவாயின, மனு தர்மம் ஜாதி உருவாக்கத்திற்கு என்ன ஊக்கத்தை கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிக்கலாம். 

கொளத்தூர் மணி எளிமையாக ஜாதியத்தின் தோற்றம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளார். 

மனு தர்மம் முழுக்க ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அன்று நிலவிய தன்மையில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பார்ப்பன பெண்கள் பற்றிய ஒழுக்கத்தை மனுதர்ம விதிகள் குறிப்பிடுகின்றன. பார்ப்பன ஆண், சூத்திரப் பெண் இணைந்து பெறும் பிள்ளைகள், பார்ப்பன பெண் சூத்திர ஆண் இணைந்து பெறும் பிள்ளைகள் என இரண்டுக்கும் ஏராளமான வேறுபாட்டை மனு வகுத்து வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான மனு, அன்றைய நிலையில் இருந்த ஜாதி விவகாரங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தி குறிப்பிட்ட கட்டுமானத்தில் கொண்டு வந்திருக்கிறார். 

ஆரியர்கள் பல்வேறு ஜாதி பிரிவினர்களாக பிரிந்து பல்வேறு நாடுகளை போரிட்டு வந்து இந்தியாவில் ஊடுருவியதை விளக்கமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஜாதியில் மேலாதிக்கமாக பார்ப்பனர்களை வைத்துக்கொண்டு பிறரை பிரித்து அவமானகரமாக நடத்தியதுதான் அனைத்து மக்கள் திரளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. காலப்போக்கில் அனைத்து மக்களும் பார்ப்பனர்களைப் பார்த்து போலச்செய்தல் என்பதில் மாட்டிக்கொண்டனர். இதனால்தான் பார்ப்பனர்களின் சடங்குகள் திராவிடர்களின் வாழ்க்கையில் வந்துவிட்டன. பொருளாதார ரீதியாக பார்ப்பனர்களை தாங்கும்படியான இடைநிலைச்சாதிகள் மாறின. தனக்குகீழே ஒருவர் வேண்டும் என அனைத்து சாதிகளும் நினைக்க காரணம், பார்ப்பனர்கள் ஏற்படுத்திய தீண்டாமை மனநிலைதான். 

அகமணமுறை, அதை மீறுபவர்களுக்கான தண்டனை என்பதை இப்போது அதனை மையமாக கொண்ட ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மக்களை பயமுறுத்த விதி, கர்மா என தந்திரமான முறைகளைப் பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களிலும் ஊடுருவி திராவிட மக்களை அடிமைப்படுத்தினர் என ஆசிரியர் பேசுகிறார். நூலைப் படித்தாலே எப்படி நாம் பார்ப்பனர்களின் வலைக்குள் அவலமாக விழுந்தோம் என்பதை அறிய முடியும். 

சுப.வீரபாண்டியனின் முயற்சியில் திராவிடம் சார்ந்த நூல்களை பாடமாகவே ஒருவர் கற்க முடியும். இந்த வகையில் திராவிடம் சார்ந்த விஷயங்களை முழுமையாக கற்று தேர்வு எழுதுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறார்கள். எனவே, இதுபற்றிய விவரங்களை இணையத்தில் தேடுங்கள். இந்த நூல் கூட பாடத்திட்டத்தில் ஒன்றுதான். 


நன்றி

கார்ட்டூன் கதிர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்