காதலிக்கும் பெண் சொல்லும் தத்துவங்களை காதலன் கண்டடையும் பயணம்! - மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் 2021

 



மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்





மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்

தெலுங்கு

பொம்மரில்லு பாஸ்கர்

கோபி சுந்தர்

திருமணத்திற்கான தேவை, அதை செய்துகொள்பவர்களின் தகுதி பற்றி பேசியிருக்கும் படம். 

நவீன காலத்தில் திருமணம் பற்றி நமக்கிருக்கும் கருத்துகள் எல்லாம் பிறர் உருவாக்கியவை. அக்கருத்துகளை நாமே யோசித்து உருவாக்கினால்தான் கல்யாண வாழ்க்கை உருப்படியாகும் என பாஸ்கர் தனது படத்தில் பேசியிருக்கிறார். 

ஹர்ஷா, அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐடி கம்பெனியேதான். அங்கிருந்து இந்தியா வர ஏற்பாடாகிறது. எதற்கு? இருபதே நாட்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்கு செல்வதுதான் திட்டம். மொத்தம் இருபது பெண்களை சந்தித்து பேசுவது பிளான். இதில் எந்த பெண் ஓகே என்றாலும் உடனே கல்யாணத்தை செய்து கூட்டிபோக அத்தனை ஏற்பாடுகளும் ரெடியாக வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் ஹர்ஷாவின் வாழ்க்கையில் தனிக்குரல கலைஞராக விபா வருகிறாள். திருமணம் பற்றி ஹர்ஷா நினைக்கும் அத்தனை விஷயங்களையும் உடைக்கிறாள். இதனால் ஹர்ஷாவுக்கு அவளை பிடித்துப்போகிறது. 

அவள் தன்னிடம் கேட்கும் அத்தனை கேள்விகளையும் தான் பெண் பார்க்கப் போகும் இடங்களில் தொடர்புடைய பெண்ணிடமே கேட்கிறார். எல்லோருமே மிரண்டு போகிறார்கள். கேள்விகள் எல்லாமே அந்த ரகம். 

ஹர்ஷா தனது காலதை விபாவுக்கு சொன்னானா, விபாவின் கேள்விகளுக்கு ஹர்ஷா பதில் கண்டுபிடித்தானா என்பதுதான் படத்தின் மையக்கதை. 

அகில் பிரமாதமாக நடித்திருக்கிறார். இதில் விபாவாக வரும் பூஜா ஹெக்டேவுக்குத்தான் முக்கியமான பாத்திரம். ஏனெனில் கதையை நடத்திச் செல்வதே அவர்தான். தைரியமாக கேள்விகளைக் கேட்பது, தனது வாழ்க்கையில் உள்ள வலியை தனிக்குரல் நகைச்சுவையில் பேசுவது என இயல்பாக நடித்திருக்கிறார். மேலோட்டமாக நகைச்சுவை என்றாலும் கூட அதில் பொதிந்துள்ள வலியை ஹர்ஷா மட்டுமே உணர்கிறான். அதை அவன் இறுதியாக விபாவுக்கு சொல்லும் இடம் அருமை. 

ஆரஞ்ச் படத்தில் தடுமாறிய தனது பிரச்னைகளை இந்த படத்தில் பொம்மரில்லு பாஸ்கர் சரிசெய்து வெற்றிபெற்றுவிட்டார். 

உறவு, உறவு சார்ந்த பிரச்னைகளை எப்படி அணுகுவது என்பதுதான் பாஸ்கரின் ஸ்டைல். இந்த படத்தில் அதனை மிகவும் வெற்றிகரமாக சொல்லியிருக்கிறார். படத்திற்கான விஷயம் என்றாலும் இதனை தனிநபர்கள் அணுகும்போது இதே பதில் கிடைக்கும் என்று கூறமுடியாது. 

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்