வேறுபாடுகளை இணைக்கும் இணையம்!

 








உகாண்டாவின் வடக்குப்பகுதி. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலம் கொடுமையானது. அடிக்கடி புரட்சியாளர்கள் அங்கு வந்து சிறுவர்களை கடத்திக்கொண்டு சென்று படைகளில் சேர்ப்பார்கள். டேனியல் கோமாகெச் அப்படி வீரர்கள் வரும்போது தப்பிப் பிழைத்து புதர்களில் மறைந்திருந்தவர்தான். இன்று 34 வயதாகும் அவர், தனது கல்வி தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விஷயங்களாலும் தடைபடாதபடி பார்த்துக்கொள்ள மெனக்கெட வேண்டியிருந்தது. இப்போது அவர், தனது கிராம மக்களுக்கு பாஸ்கோ எனும் வகையில் இணையத்தை வழங்கி வருகிறார். இணையம் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் இவர். 

 பாஸ்கோ எனும் இணைய முறை இப்போது ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் போன் நெட்வொர்க் முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. 

டேனியல் இணையத்தின் வழியில் படிப்புகளை படித்து ஆன்லைனில் வேலையைப் பெற்றுள்ளார். சமையல் ரெசிப்பிகளைக் கூட கற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கை மாற்றம் பெற்றுள்ளது. இணையம் என்பது எனது ஆசிரியர் என்றே சொல்லி வருகிறார். 

மக்களின் இனக்குழுவாக ஒன்றாக சேர்ந்து இணையத்தை  நடத்துவதில் நிறைய நன்மைகள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் சேவையைக் கொடுப்பதிலும் ஏகபோக பிரச்னை எழும் வாய்ப்பு உள்ளது. அரசு நிறைய இடங்களில் இணையத்தை துண்டித்து பல்வேறு தணிக்கை முறைகளை செய்துவருகிறது. அரசிடன் இணைய கண்காணிப்பு இருந்தால் என்னாகும் என்பதற்கு சீனாதான் உதாரணம். அங்கு பாலியல் அத்துமீறல் செய்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பற்றிக்கூட புகார் கொடுக்க முடியவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் எண்பது சதவீதம் இணையத்தில் இணைந்துள்ளனர். ஆனால் ஆப்பிரிக்காவில் சூழல் அப்படியில்லை. உகாண்டாவில் 26 சதவீத மக்கள்தான் இணையத்தை அணுக முடிகிறது. சகாரன் ஆப்பிரிக்காவில் இது மிகவும் குறைந்த அளவு என டேட்டா ரிப்போர்டல் வலைத்தளம் தகவல் தெரிவிக்கிறது. 

பாஸ்கோ இணைய முறை, சோலார் முறையில் கணினிகள், சாதனங்களை இயக்கி இணையத்தை வழங்குகிறது. இப்போது நன்கொடையாளர்கள் மூலம் இயங்கினாலும் எதிர்காலத்தில்  வருமானத்தை ஈட்டும் முறையாக மாறும் நம்பிக்கை டேனியலுக்கு இருக்கிறது. இப்போது ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் 37 இனக்குழு சார்ந்த இணைய குழுக்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா முதல் சோமாலியா வரை இதனை பார்க்க முடியும். மையப்படுத்தல் இல்லாத இணையமுறையை  ஆதரிப்பது அவசியம் என்ற இணைய சங்க வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

இனக்குழு சார்ந்து இணைய நிறுவனங்களை நடத்துவதில் நிறைய சவால்கள் உள்ளன, முக்கியமாக இதற்கான உரிமம், பராமரிப்பு நிர்வாகச் செலவு ஆகியவை கடினமானவையாக இருக்கின்றன. இதனையெல்லாம் சமாளித்துத்தான் இணைய நிறுவனங்களை சிலர் நடத்தி வருகிறார்கள்.  இனக்குழு சார்ந்த இணையத்தைப் பொறுத்தவரை அவர்கள் பயனர்களின் தகவல்களை விளம்பரங்களுக்காக வெளியில் விற்பதில்லை. இதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள் தெரியுமா? நம்பிக்கையை இழக்க விரும்பவில்லை என்கிறார்கள். 


பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் 




கருத்துகள்