மாணவர்களுக்கு சொந்தக்காசில் சீருடை வாங்கித்தரும் அப்பா ஆசிரியர்! - மாணவர்களின் ஞானத்தந்தை
















பள்ளிக்கு செல்ல பயப்படும் மாணவர்களே இங்கு அதிகம். அடிப்பார்கள், படிக்க சொல்லுவார்கள் என நிறைய காரணங்களை மாணவர்கள் சொல்லுவார்கள். ஆசிரியரை அப்பா என்று பாசமாக அழைக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தன் அரசுப்பள்ளியில் உள்ள கணித ஆசிரியர்தான் அப்படி அழைக்கப்படுகிறார். சி அப்பாவு என்ற இயற்பெயரைக் கொண்டவர், மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும்போது பள்ளியில் விருந்து சாப்பாடு போடுவதோடு, ஒன்பது முதல் 12 வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி சீருடையை இலவசமாக தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார். கூடவே அரசு விழாக்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இனிப்புகளையும் தனது பணத்தில் வழங்குகிறார். 

இந்த ஆண்டு 300 மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்காக மட்டுமே ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளார். எதற்கு இப்படி செய்கிறார்? இவரது வாழ்க்கைதான் காரணம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர், அப்பாவு. தனியாக இருந்து தனிமையை தேற்றிக்கொண்டு படித்து ஆசிரியராகியிருக்கிறார். பிறகுதான் பள்ளி மாணவர்கள் பலர் சரியான உடைகளின்றி பள்ளிக்கு வருவது தெரியவந்திருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இலவச சீருடைகளை வழங்குகிறது. ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, தான் கஷ்டப்பட்டது போல மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என அவர்களுக்கு சொந்தக் காசை செலவழித்து சீருடைகளை வாங்கிக் கொடுத்து வருகிறார். 

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது அப்பாவுக்கு எளிதாக இருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். முதலில் சீருடைகளை வாங்க வழியில்லாதவர்களுக்கு மட்டுமே உடைகளை தைத்து கொடுக்க நினைத்தார். ஆனால் அனைவரையும் சமமாக நினைக்க வைக்கவேண்டுமே? எனவே அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர் அப்பாவுவே தைத்து கொடுத்துவிடுகிறார். சில மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்து வருகிறார். இதனால் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி தடைபடுவதில்லை. 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பி திருச்செல்வம் 


கருத்துகள்