பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

 










திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர். 


இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள். 

திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை இதுவரை 14, 921 வீடுகளில் ஆய்வு செய்துள்ளது. இதில் நிறைய பேர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அல்லது ஐடிஐ, பிற பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

ஆசிரியர்கள் வேலைக்கு செல்லும் ஆர்வமுடைய மாணவர்களைப் பார்த்தாலும் கூட அடிப்படையாக கல்வி அதற்கு அவசியம் என்று சொல்லி அவர்களை மீண்டும் படிக்க வைக்க அழைத்து வருகிறார்கள். ஒரு ஆசிரியர் குழுவில் நான்கு பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்களை பள்ளிக்கு அழைத்து வருவது கடினமாக இருந்துள்ளது. வீட்டு வேலைகளைப் பார்க்க அல்லது நோயுற்ற பெற்றோரை பார்க்க பெண் குழந்தைகளை வீட்டிலேயே பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருக்க நினைக்கின்றனர். பெற்றோரிடம் கல்வியின் அவசியம் பற்றி பேசி புரிய வைத்தவுடன் அங்கேயே மாணவர்களுக்கு அட்மிஷன் போட்டுவிடுகின்றனர். 

சில பெற்றோர்களுக்கு செலவில்லாமல் பிள்ளைகள் படிக்கவேண்டும் என நினைக்கின்றனர். இன்னும் சிலர் உதவித்தொகையை முக்கியமாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் பள்ளியில் கிடைக்கும் சைக்கிள், லேப்டாப் ஆகிய இலவச உதவிகளை நம்பியே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தே ஆகவேண்டும் என கல்வி அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

ஜெயகுமார் மடலா





கருத்துகள்