மனதை நிறைக்கும் ஆன்மிக அனுபவ பயணம்! - அருகர்களின் பாதை- ஜெயமோகன்
சமணர்களின் கோவில் - ஜெயமோகன் வலைத்தளம் |
அருகர்களின் பாதை
ஜெயமோகன்
கிழக்கு
ரூ.285
(ராயப்பேட்டையிலுள்ள கிழக்கு பதிப்பகமே சென்று வாங்கினாலும் கூட ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டோம் என அன்போடு சொல்லிவிட்டனர்.)
நூல் முழுக்க சமண வழிபாட்டிடங்களை தேடிச்செல்லும் எட்டுபேர் கொண்ட குழுவின் பயணத்தைப் பற்றியது. இதில் வரும் ஆரியர் வருகை, நாற்கர சாலை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் நூல் முழுக்க பயணம் தொடர்பான செறிவான கருத்துகள் நிரம்பியுள்ளது என உறுதியாக கூறலாம்.
தொன்மைக் காலம் தொடங்கி இன்றுவரை சமண வழிபாட்டிடங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. கூடுதலாக அந்த மதம் சார்ந்தவர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கோவில்களை வெண் சலவைக்கல் கொண்டு கட்டிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக கல்யாண்ஜி எனும் அமைப்பைச் சொல்லலாம். ஜெயமோகன் தன்னுடைய நண்பர்களோடு செல்லும் இடங்களில் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் சமண தர்மசாலையினர்தான். இந்து மத அமைப்பினர் அல்ல. இது பற்றிய இடம் வரும்போது, ராமகிருஷ்ண மடத்தின் அணுகுமுறை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார் ஜெ. என்ன நோக்கம் என்பதே தெரியாமல் மடத்தை நிர்வாகம் செய்பவர்கள் இதனால் நிலையை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம்.
பயணநூல் என்றாலும் இதற்கான திட்டமிடல், வரலாறு பற்றி பேசும் பல்வேறு நுட்பமான தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. ஆசிரியரோடு நாமும் அந்த இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஜெ.வின் எழுத்துகள் ஏற்படுத்துகின்றன. இந்த கட்டுரைகள் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டவை என்பது முக்கியமானது. பயணம் செய்த அன்றே எழுதப்பட்டு பல்லாயிரம் வாசகர்களால் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டவை. ஒரு மாதம் நீண்ட பயணத்தில் இந்தியர்கள் என்றால் சோறிடும் ஈர மனது கொண்டவர்கள் என ஆசிரியர் சொல்லும் இடம் அருமையானது.
சமணர்களின் உணவு, அவர்களின் கலாசாரம், அடுத்தடுத்த இனக்குழுவினர் கோவில்களை மேம்படுத்தி பாதுகாப்பது என ஏராளமான தகவல்களை படிக்கும்போது, வியப்பாக இருக்கிறது. கலாசாரம் சார்ந்த தொன்மையை பாதுகாத்து வர எந்தளவு மெனக்கெடுகிறார்கள் , முகலாய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டாலும் இடிபாடுகளிலிருந்து சிற்பங்களை மீட்டு அதனை புதுப்பித்து கட்டும் பொறுமை நாம் கற்றுக்கொள்ளவேண்டியது.
உத்வேகமான சாகச பயணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக