நீதிகளைப் பேசும் சீனச்சிறுகதைகள்! - குறிதவறிய அம்பு - வானதி
குறி தவறிய அம்பு
சீன சிறுகதைகள்
தமிழ் மொழிபெயர்ப்பு
வானதி
சீன பழமொழிகளை ஒட்டிய ஏராளமான சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்துமே பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நன்னெறிகளைக் கொண்டவை. குழந்தைகள் வாசிக்க ஏற்றவை என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
சகோதரர்களுக்கு உள்ள அபூர்வ சக்தியால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயலும் கதை அருமையானது. இரும்பினால் வெட்டப்பட முடியாத, கடலில் மூழ்கினாலும் சாகாத, நெருப்பும் எரிக்க முடியாத அபூர்வ சக்திகளை கொண்ட சகோதர ர்களின் கதை அவர்களின் பாசத்தை காட்டுவதோடு, சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தையும் பேசுகிறது.
நீதியை கையில் எடுத்து தண்டிக்கும் பெண்ணின் கதை. இதன்படி, கணவனைக் கொன்றவரை இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொண்டு குழந்தை பெற்றாலும் முதல் கணவனின் இறப்புக்கு பழிவாங்கும் வேகம் ஆச்சரியப்படுத்தியது. நீதிநோக்கில் பார்த்தால் இது சரியா என்று தோன்றும். ஆனால் நீதிக்கு உணர்ச்சிகளை விட சாட்சிகளே முக்கியம் என்பதால் இரண்டாவது கணவன் செய்தது கொலை என நிரூபிக்கப்பட முடியாது. எனவே சட்டத்தை தன் கையில் எடுத்து இரண்டாவது கணவனைக் கொல்கிறாள் மனைவி. கொலைக்கு கொலை சரியாகிவிட்டதா, இப்போது செய்த கொலைக்கு உனக்கு என்ன தண்டனை என நீதிபதி கேட்க மனைவி எடுக்கும் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என தன்னையே தியாகம் செய்யும் அந்தக் கதையில் உள்ள நீதியை நாம் பேசுவது கடினம்.
முட்டாள் மனைவி பற்றிய கதைகளை நாம் சிரித்துக்கொண்டே வாசிக்க முடியும். அந்தளவு நிகழ்ச்சிகள் அதில் அமைந்துள்ளது. அதிலும் இன்னொரு பெண்ணின் சாமர்த்தியத்தை பற்றி பெயரின் எழுத்துகளை ஐ, ஒய் என்று கேட்கும் கதை, அட்டகாசமானது.
காகிதத்தில் நெருப்பு, காற்று என இரண்டையும் கொண்டு வரும் கதை புதிரான தன்மை கொண்டது. அதனை கண்டுபிடிக்கும் பெண், அந்த குடும்பத்தின் தலைவியாக மாறுவதும், அதன்பிறகு அவள் சந்திக்கும் சவால்களும் வாசிக்க சுவாரசியமாக இருந்தன. இப்படி கதைகளை படிக்கும்போது, இந்த கதைகளை சொல்லும் மனிதர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. சென்ஷூ, ஜின்ஷி, சாங்ஷூ, மரிக்கொழுந்து, ஹாடின் என பல்வேறு கதாபாத்திரங்கள் கதைகளை சொல்லுவதிலும் அதனை வழிநடத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
வானதியின் மொழிபெயர்ப்பு மூலமாக 140 பக்கங்களை மகிழ்ச்சியுடன் வாசிக்க முடிகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக