தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!
2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.
அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.
இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்தார். அங்கு அவை எளிதாக விற்றுவிடவே, மறுசுழற்சி பொருட்களுக்கான சந்தை இருப்பது தெரிய வந்தது அவரை உற்சாகப்படுத்தியது.
இதற்குப்பிறகுதான் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் மேளா 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் உள் அலங்கார அமைப்புகளை கழிவுப்பொருட்களை வைத்து செய்து முதலிடம் பெற்றார். திருச்சியில் பல்வேறு கஃபே, உணவகங்களுக்கு உள் அலங்கார அமைப்புகளை செய்து கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டிற்கான தமிழ்நாடு மாணவ கண்டுபிடிப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.
கர்நாடகத்தின் கூர்க்கில் தனது கடை ஒன்றைத் திறந்து மறுசுழற்சி பொருட்களை விற்று வருகிறார். அமேசான், ஃபிளிப்கார்ட், மும்பையைச் சேர்ந்த பன்கோ, ஜங்கோ ஆகிய நிறுவனங்களின் வலைத்தளங்களிலும் தனது உடைகளை விற்று வருகிறார்.
நாடு முழுக்க உள்ள பல்வேறு துணி நிறுவனங்களிலிருந்து கழிவுப்பொருட்களை பெற்றுவருகிறார். இப்படி கழிவுகளை பெறுவதற்கு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை ஸ்ரீநிதிக்கு வழங்கிவருகின்றன. இவர் தனி கடையை வைத்தாலும் கூட தனக்கென தனி மெஷின்களை வைத்துக்கொள்ளவில்லை. ப்ரீலான்ஸ் தையல்காரர்களை வைத்து வேலையை செய்து வருகிறார்.
பெங்களூருவிலுள்ள டிராஸ்கோன் என்ற நிறுவனத்திலிருந்து மெஷின் ஒன்றை விரைவில் வாங்க உள்ளார். இந்த மெஷின், ஈரமான, காய்ந்த கழிவுகளை தனியாக பிரித்துவிடும். இதில் காய்ந்த கழிவுகளை ஷீட்களாக்கி, அதனை பிளைவுட்டுக்கு பதிலாக பயன்படுத்தலாம்,. திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மறுசுழற்சி பணிகளை செய்யவுள்ளார் ஸ்ரீநிதி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சௌமியா மணி
கருத்துகள்
கருத்துரையிடுக