ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் |
குட் டாக்டர் - கொரிய மூல தொடர் |
எ மிராக்கிள்
துருக்கி டிவி தொடர்
மூலம்
குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர்
எம்எக்ஸ் பிளேயர்
தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.
அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.
இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும் முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.
யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெபா இறுதியில் புரிந்துகொள்கிறார். கூடவே அவரது வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் புரிந்துகொள்கிறோம்.
அலி, மருத்துவமனைக்கு வருவதற்கு அவரது வளர்ப்பு தந்தையான ஆதில்தான் காரணம். அவர்தான் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு தலைவராக இருக்கிறார் . மூளை அறுவை சிகிச்சை வல்லுநரான அவர், தனக்கு தெரிந்த அனைத்தையும் அலிக்கு சொல்லித் தருகிறார். அவனை மருத்துவமனை போர்டிடம் பேசி சம்மதிக்க வைத்து உள்ளே கொண்டு வருகிறார். அலியின் திறமை ஆதிலின் சிஷ்யரான ஃபெர்மனை ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் அவனது ஆட்டிச பிரச்னை அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, முடிந்தளவு அவரை அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயல்கிறார்.
சிலசமயங்களில் அவருக்கு பல்வேறு நினைவுகளால் கண்கலங்குகிறது. இதற்கும் ஒரு முன்கதை உண்டு. இப்படி வெறுப்பு, சக மருத்துவரின் உதவியாளர்களால் ஊதாசீனப்பட்டாலும் நாஸ்லி என்ற பெண் மட்டுமே அலி மீது அன்பு காட்டுகிறாள். அவனுக்கு ஆட்டிச பாதிப்பால் பேனிக் அட்டாக் ஏற்படும்போது அவளே உதவிக்கு வருகிறாள். அதையும் தாண்டி அவனை தனது வீட்டிற்கு மேலேயே வாடகைக்கு அறை இருப்பதை சொல்லி தங்க வைக்கிறாள். அலிக்கு ஆதில் தவிர நாஸ்லி மீதும் மெல்ல ஈர்ப்பு வருகிறது. இந்த நேரத்தில் நாஸ்லி, தனது மருத்துவர் ஃபெர்மன் மீது காதலில் இருக்கிறாள். ஆனால் அவரோ மருத்துவமனை தலைவரான பெலிஸ் என்ற பெண்ணின் மீது குறையாத காதலோடு இருக்கிறார். ஃபெர்மன், பெலிஸ் காதல் என்பது எப்போதும் சண்டையும் சமாதானமுமாகவே சென்றுகொண்டிருக்கிறது.
ஆட்டிச குறைபாடு கொண்ட டாக்டர் மோசின்(நடுவில்) |
இவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வில்லன் வேண்டுமே? பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் டேஞ்சு என்பவர், இருக்கிறார்.இவருக்கு ஆதிலின் பதவி மீது கண். அதை கைப்பற்றினால் மருத்துவமனையை எளிதாக கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார். ஆதில், அவரது சீடர் ஃபெர்மன், அவரது பெண் தோழி பெலிஸ் இதனை பல்வேறு விதமாக எதிர்க்கிறார்கள். டேஞ்சுவுக்கு துணையாக பெலிஷின் சித்தி இருக்கிறார். அலியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தது ஆதில் என்பதால், அலி ஏதாவது பெரிய தவறு செய்தால் எளிதாக ஆதிலை பதவியிலிருந்து வெளியேற்றி விடலாம் என் று நினைக்கிறார்கள். இதற்காக இவர்கள் செய்யும் பல்வேறு செயல்பாடுகள், அந்த மருத்துவமனையையே பாதிக்கின்றன. அத்தனை விஷயங்களிலிருந்தும் ஆட்டிச டாக்டர் அலியே அவர்களை மீட்கிறார். அபாரமான நோய் கண்டறியும் திறமை அவனை வெறுக்கும் மருத்துவர் ஃபெர்மனை கூட தம்பி என கூற வைக்கிறது. முதலில் தயங்கும் நாஸ்லியை என்னுடைய காதலன் என்று சொல்ல வைக்கிறது.
அலியை முட்டாளாக காட்ட முயலும் டேஞ்சு ஒரு கட்டத்தில் அவனை தன்னுடைய உதவியாளராக வைத்துக்கொண்டு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்கிறார்.
அலிக்கு தொடர் முழுக்க சக மருத்துவர்கள், பெண் தோழி, மருத்துவமனை தலைவர் ஆகியோரால் அவமானங்கள், புறக்கணிப்பு நடந்துகொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் சமாளித்தும் அவரால் பிறர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மனிதநேயத்துடன் நடக்க முடிகிறது. தொடரின் இறுதியில் தனது அண்ணனை கிடங்கு ஒன்றில் அடைத்து வைத்து கொன்ற பால்ய தோழனைக் கூட அது முடிஞ்சுபோன விஷயம். நான் மறந்துவிடத்தான் நினைக்கிறேன். என் மனசு அப்போது உடைஞ்சு போனது உண்மைதான். ஆனால் அதற்காக நீ குற்றவுணர்வு கொள்ள வேண்டியதில்லை. உன் மகன் மீது அன்பு காட்டு என சொல்லி விடை பெறுகிறான்.
மருத்துவர் ஃபெர்மன், நாஸ்லி, அலி வெபா |
இறுதியில் தனது கர்ப்பமாக இருக்கும் பெண்தோழியை மணம் செய்துகொள்வதோடு கதை நிறைவு பெறுகிறது. அந்த விழாவை மூன்றாவது நபராக நின்று பார்த்து பேசுவது அற்புதமான காட்சி....
அலி வெபாவாக டேனர் ஆல்மெஸ், நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவரது பெண் தோழியாக சினாம் உன்சால் நடித்துள்ளார்.
ஆட்டிச குறைபாடு பற்றி நிறைய விஷயங்களை எழுத்தாளர் பாலபாரதி நூல்கள் வழியாகவும் வலைத்தளம் வழியாகவும் எழுதி வருகிறார். கலைப்படைப்பாக எ மிராக்கிள் என்ற தொடர் இன்னும் நிறைய மக்களை சென்றடைவது அவசியம். அப்போதுதான் இப்படி குறைபாடு கொண்டவர்களை பைத்தியம் என ஒதுக்கி வைக்காமல் அவர்களையும் சமூகத்தில் ஏற்றுக்கொள்வது அதிகரிக்கும். அந்த வகையில் இதனை தமிழில் மொழிபெயர்த்த எம்எக்ஸ்பிளேயர் குழுவுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
கொரிய தொடர் துருக்கியிலும் அமெரிக்காவிலும் கூட ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. நேரம் இருப்பவர்கள் அதனையும் யூடியூபில் தேடிப் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக