மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.
கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார். நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
புலிகள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இறக்கவில்லை. அதற்கு வெளியில்தான் இறந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை என்பதுதான் பரிதாபமான உண்மை. புலிகள் ஏதும் வேட்டையாடப்படவில்லை. மின்சார வேலி காரணமாக இறந்துபோயுள்ளது என வனத்துறை கவனமாக பதில் சொல்லியுள்ளது. ஆனால் வனத்துறையினர் ரேடியோ காலர் பொருத்திய புலிகளைக் கூட காப்பாற்ற ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.
பதில்களை வேகமாக சொன்னாலும் மத்தியப் பிரதேசத்தில் சிங்கராளி மாவட்டத்தில் ரேடியோகாலர் பொருத்திய புலி கூட கொல்லப்பட்டு கிடந்ததற்கு எந்த பதிலும் வனத்துறையிடம் இல்லை. இறந்த புலி எழுந்து வந்து உண்மையைச் சொன்னால்தான் ஏதாவது தெரிந்துகொள்ள முடியும். 2019ஆம் ஆண்டு செய்த ஆய்வில் ம.பியில் 500 புலிகள் அறியப்பட்டன. அதில் 350 பெண்புலிகள் என கண்டறியப்பட்டது. இதில் நூறு பெண்புலிகள் குட்டிகளை ஈன்றால் கூட இருநூறு குட்டிகள் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. கர்நாடகத்தில் 15,800 சதுர கிலோமீட்டரில் புலிகள் உலவுகின்றன எனில் ம.பியில் 15,200 ச.கி.மீ. இடம்தான் உள்ளது. ஆவணங்களில் ம.பி. புலிகளுக்கான இடத்தை 72,000 ச.கி.மீ என அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளின் அழிவிற்கு மாநில அரசின் சுற்றுலா வருமான வெறியே முக்கிய காரணமாக உள்ளது. புலிகள் காப்பகம் அருகில் பல்வேறு வனச்சுற்றுலா நிறுவனங்கள், தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசு, சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளை புறந்தள்ளி சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க என்ன முயற்சிகளை செய்யவேண்டுமோ அதனை செய்து வருகிறது.
இந்தியா டுடே
ராகுல் நோரோன்கா
கருத்துகள்
கருத்துரையிடுக