கடமையில தவறாத தங்கமான பையன், காதலியின் தலைமறைவான அப்பாவுக்கு உதவுவாரா? - பாபு பங்காரம்
பாபு பங்காரம்
இயக்கம் மாருதி
வருவாய்த்துறை அதிகாரி சாஸ்திரி தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது சக அதிகாரியை கொன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதைபற்றி விசாரிக்க கிருஷ்ணா எனும் மனிதநேயமும் கருணையும் கொண்ட உதவி கமிஷனர் வருகிறார். ஆதரவற்ற சாஸ்திரி குடும்பத்திற்கு தனது அடையாளம் கூறாமல் உதவுகிறார். அந்த குடும்பத்தில் மூத்த பெண் ஷைலஜா மீதுகாதல் கூட கொள்கிறார். இந்த குடும்பத்து பெண்களை மல்லேஸ்வரன் என்ற ரவுடி, சாஸ்திரி எங்கே என கேட்டு மிரட்டுகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா யார் குற்றவாளி என கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
கர்ப்பிணிப்பெண், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன ஜமீன்தாரின் பேரன், கிருஷ்ணா. ரவுடிகளை அடித்து உதைத்தாலும் அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்து பிறகு லாக்கப்பில் தள்ளும் கருணை மனமுடையவன். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது. இந்த குணங்களை அவன் கடமைக்காக சற்று தள்ளிவைத்து ரவுடி மல்லேஸ்வரன் ஆட்களை அடித்து உதைக்க வேண்டியதிருக்கிறது. முதலில் அதற்கு சற்று தயங்குகிறார்.
இனி கருணை கிடையாது என முடிவெடுத்து கோபப்படும் காட்சியில் வெண்ணிலா கிஷோர், வெங்கடேஷ் நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் சற்று பாலிஷாக எடுத்துள்ளனர். பெரிதாக ரத்தம், கொலை என்றெல்லாம் காட்டவில்லை. நகைச்சுவை, காதல் ஆகியவற்றுக்கான முக்கியத்துவமே அதிகம். பெரிதாக நெகடிவ்வாக ஏதும் நடந்துவிடும் என பதற்றமுறும் காட்சி ஏதுமில்லை. சாலையில் பள்ளி மாணவியை அதாவது ஷைலஜாவின் குட்டி தங்கையை கடத்த முயலும் ரவுடிகளை அடித்து உதைக்கும் காட்சி கூட பதற்றம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதுவும் காட்சி அழகுக்காக மெனக்கெட்டு சண்டையை எடுத்து பதற்றம் தணிக்கிறார்கள். சாஸ்திரிக்கு நான்கு பெண்கள் இருப்பது ரவுடிகள் அவர்களை கடத்தி மிரட்டுவதற்கோ என்று தோன்றுகிறது.
ஷைலஜா, வணிகம் சார்ந்து தன்னை அணுகும் ஆணான கிருஷ்ணாவை அவ்வளவு எளிதாக நம்புவது, ஏற்கமுடியவில்லை. வீட்டில் ஆண் அப்பா மட்டும்தான். மற்றவர்கள் எல்லாம் சகோதரி, அம்மா, பாட்டி. இப்படி இருக்கும் இடத்தில் பெண்கள் வெளி ஆண்களிடத்தில் எந்தளவு கவனமாக இருப்பார்கள். எதார்த்தம் குறையும் இடம் இது.
வெங்கடேஷ், காவல்துறை அதிகாரி. அவர் எதற்கு ஷைலஜாவிடம் அவரது அப்பா பற்றி கேட்கவேண்டும்? விசாரணை கோப்பில் அனைத்து விவகாரங்களும் இருக்குமே? ஓரிடத்தில் அந்த குடும்பமே சாஸ்திரியின் இடத்தில் கிருஷ்ணாவை பார்க்கிறது. அவன்தான் ஷைலஜாவின் மெஸ் கடனி்ல இருந்து மீள சொந்தப்பணத்தைக் கொடுக்கிறான். ரவுடிகளிடமிருந்து காதலியின் தங்கைகளை காக்கிறான். முக்கியமாக ஒரு தங்கைக்கு மருத்துவபடிப்பு படிக்க இடம் பெற்றுத்தருகிறான். ஆனால் சாஸ்திரி மருத்துவமனைக்கு வரும்போது அவரை சுட்டுப்பிடிக்க நினைக்கிறான். ஆனால் ஷைலஜாவின் பாட்டி கிருஷ்ணாவைப் பற்றி பேசும் பேச்சு அவனை பரிதவிப்பில் தள்ளுகிறது. கடமையா, காதலா என்ற இடம் அது. இந்த இடத்தில் வெங்கடேஷ் நன்றாக நடித்திருக்கிறார்.
பொசனி கிருஷ்ணாவின் பாத்திரம் நகைச்சுவைக்கானது. அவரின் வீடியோ சற்று ஏடாகூடமானது. அதை வைத்தே குற்றவாளியை பிடிக்கும் உத்தி கண்ணைக் கட்டுகிறது.
நயன்தாரா அணிந்துள்ள ஆடைகள் அனைத்துமே அழகாக உள்ளன.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக