பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

 








விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்!

இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம். 


மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகளை தயாரித்து வருகிறார்கள். இதில் மூன்றில் ஒருபாகம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்காக உள்ளது. உலகில் 95 சதவீத பிளாஸ்டிக்குகள் பேக்கேஜிங்குக்காக பயன்படுத்தப்பட்டு, உடனே தூக்கி குப்பையாக எறியப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பு 120 பில்லியனாக உள்ளது. வீசி எறியப்படும் மூன்றில் ஒருபாக பேக்கேஜிங் பிளாஸ்டிக்குகள் காரணமாக கடலில் ஏற்படும் மாசுபாட்டிற்கான இழப்பீடு நாற்பது பில்லியன் டாலர்களாக உள்ளது. 


குளிர்பான நிறுவனமான கொக்ககோலா 2017ஆம் ஆண்டு 3 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரித்துள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு இரண்டு லட்சம் பாட்டில்கள் என்ற கணக்கு. பிளாஸ்டிக்குகள் ஐந்து மில்லிமீட்டர் விட்ட அளவில் சிறிதாக உடைந்து மைக்ரோபிளாஸ்டிக்காக மாறி நிலம், நீர், காற்று என அனைத்து இடங்களிலும் மாசுபாட்டை அதிகரித்து வருகின்றன. எனவே இந்த இடத்தில் மறுசுழற்சி என்பதே அர்த்தமில்லாததாக மாறிவிடுகிறது. 


ஒருவர் வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை குடிநீரில் இருந்து பெறுகிறார் என்று ஆய்வுத்தகவல்கள் கிடைத்துள்ளன. பீர், உப்பு, ஷெல் மீன், காய்கறிகள் ஆகியவற்றிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பாதிப்பு உள்ளதாக இத்தாலி ஆய்வு கூறுகிறது. ஆபத்து ஏற்படுத்தும் பிளாஸ்டிக் தயாரிப்பை நிறுத்த முடியாததற்கு பின்னால் அரசியல் அதிகாரமும் உள்ளது. இதனால் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கின் அளவைக் கூட குறைக்க முடியாத பரிதாப சூழ்நிலை உள்ளது. ஆண்டுதோறும் 5 சதவீத அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி வளர்ந்து வருகிறது இதே அளவில் சென்றால், 2050ஆம் ஆண்டில் 34 பில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. 


உற்பத்தி குறையாமல் அதை வெறும் மறுசுழற்சி செய்வது என்ற ஒற்றை வழியில் மாசுபாட்டை குறைக்க முடியாது என சூழலியலாளர் மார்க்கஸ் எரிக்சன் கூறுகிறார். கானா, பிரான்ஸ், மொரிஷியஸ் ஆகிய நாட்டு தலைவர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைப்பது பற்றி சூழல் மாநாடுகளில் பேசத் தொடங்கியுள்ளனர் ஆனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான திட்டமிடல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க வேதியியல் சங்கம், பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் அமைப்பு, வரம்பு, கொள்கைகள் ஆகியவற்றை பெரிதாக வரவேற்கவில்லை. குறைவான ஆட்கள் மட்டுமே வாங்கும்படி விலையை மாற்றி அமைப்பு அனைத்து துறையினரையும் பாதிக்கும் என பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். 


விலை மலிவாக கிடைக்கிற பிளாஸ்டிக்கில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அதிகம். ஆனால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்கள் இழப்பீடு தருவதில்லை. பொறுப்பும் ஏற்பதில்லை. வாஷிங்க்டன் டிசியில் பிளாஸ்டிக் பைகளுக்கு ஐந்து சதவீத தொகையை விதித்தனர். 2010ஆம் ஆண்டு இப்படி கட்டணம் விதிக்கப்பட்டபிறகு பிளாஸ்டிக் பேக்குகளை பணம் கொடுத்து வாங்குவது குறைந்துவிட்டது. ஆறுகளில் வீசும் குப்பைகளின் அளவும் முப்பது முதல் எழுபது சதவீதம் வரை குறைந்தது. மறுசுழற்சி, திரும்ப பயன்படுத்துவது, மாற்றுகளை பயன்படுத்துவது எனும் மூன்று விஷயங்களை சர்குலாரிட்டி என குறிப்பிடுகிறார்கள். பல்வேறு நாடுகளும் இந்தவகையில் திட்டமிட்டு இயங்கி வருகின்றன. 

mit tech review

pixabay












கருத்துகள்