முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!
தர்மா
விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர்
பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.
தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின்று ஆக்ரோஷமாக மக்களைப் பார்த்து பேசும் வசனங்களும் இல்லாமலா?
தனது தங்கையை கையைப்பிடித்து சீண்டினான் என்பதற்காக ஒரு ரௌடியை அவனது தெருவில் புகுந்து கையை வெட்டி அடித்து கொல்கிறார் தர்மா. மக்கள் ரிலாக்ஸாக ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையில் சாட்சி கூட சொல்ல வருவதில்லை. தர்மாவின் அப்பா, வழக்குரைஞர். நேர்மையானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. காசு கொடுத்தால் கொடுப்பவனின் நலத்துக்காக வாதாடுபவர். அவரே மகன் செய்த கொலையைப் பார்த்து மிரண்டு கோர்ட்டில் வாதாடுகிறார். சாட்சியே இல்லாத வழக்கில் ஓராண்டு தண்டனையை வாங்கிக் கொடுக்கிறார். ஓராண்டுக்குப் பிறகு திரும்பி வந்தவர், அப்பாவுடன் தேவையில்லாத மனஸ்தாபம் எதற்கு என சேரி மக்களுடன் சென்று வாழ்கிறார். வேலை வேண்டும் என்பதற்காக, அங்குள்ள சில நண்பர்களை சேர்த்து பணக்காரர்களின் வீடுகளை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதனால் காவல்துறையின் குற்றப்பட்டியலில் தர்மாவின் பெயர் வந்துவிடுகிறது. இந்த நிலையில் தர்மாவின் திருட்டு்ப் பணத்தில் படித்து காவல்துறை அதிகாரியான ரஞ்சித் பணியில் சேர்கிறார். அவரை தனது தங்கைக்கு மணம் செய்து வைக்கிறார். அவர் வேறுயாருமில்லை. யாருடைய கையை வெட்டியெறிந்து கொன்றாரோ அந்த ரௌடியின் ரத்த சொந்த தம்பி. அப்புறம் கதை எப்படி நகரும் என நான் தனியாக சொல்லவேண்டுமா?
விஜயகாந்தின் படங்களில் உள்ள தங்கைகள் தனி ரகம். நன்றாக படித்திருப்பார்கள். அண்ணனுக்கு சோறு ஊட்டி ஆறுதல் சொல்பவர்கள், மணம் செய்தவுடன் மனவலிமையை இல்லாதது போல மாறிவிடுவார்கள். கொடுமைப்படுத்தும் கணவனை விஷம் வைத்துக் கொல்லாமல் அவர்களின் சதியில் பாதிக்கப்பட்டு விஷம் அல்லது கத்திக்குத்தால் சாவுவார்கள். என்ன துர்பாக்கியம்? இவர்களுக்காக அண்ணன் விஜயகாந்த் லெஃப்ட் காலால் அந்தரத்தில் தாவி எட்டி உதைத்து வில்லன்களை வீழ்த்துவார்.
தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். ஒருவரின் குடும்பம், அண்ணன், தம்பி என யாரையும் விசாரிக்காமலா செய்து வைப்பார்கள். தங்கை நான்கு கத்திக்குத்துகளை வாங்கி, கழுத்தில் டெலிபோன் வயர் இறுக்கப்பட்டு இறந்துகிடக்கிறார். அதையும் கூட யாரும் கண்டுகொள்வதில்லை. கொலை என்று கூட சந்தேகம் வருவதில்லை. இத்தனைக்கும் தர்மாவின் அப்பா வழக்குரைஞர், அவரின் மூத்தமகன் தினசரி பத்திரிகையாளர்.
பத்திரிகையாளர் பாத்திரம் இறந்துபோவது, தங்கை கணவரை சந்தேகப்படாமல் இருப்பது கூட நம்பும்படியாக இல்லை. பரிதாபம். மன்சூரலிகானின் பாத்திரமும், வசனமும் நன்றாக இருக்கிறது. அலட்டிக்கொள்ளாத வில்லன். படத்தில் இவர் மட்டுமே அதிக உணர்ச்சிவசப்படாமல் நடிக்கிறார்.
கையில் பலமிருக்கிறதா, பழிவாங்குங்கள். தவறு ஒன்றும் கிடையாது என தர்மா உறுதியாக நம்புகிறார். இறுதியாக காசுக்கு வாதாடிய அப்பாவையும் தனது பக்கம் இழுக்கிறார். படம் நிறைவடைகிறது. ஏறத்தாழ அனைத்து கொலைகாரர்களையும் தர்மாவும் சேரி மக்களும் சேர்ந்து கொன்று வீழ்த்துகிறார்கள். இரு கண்கள் போதாது பாடலை பல்வேறு வெர்சன்களில் ராஜா சார் இழுத்து இழுத்து பாடுகிறார். நமக்கு சங்கடமாகிறது. முதல்முறை ஓகே சார். எதற்கு இத்தனை முறை ரிப்பீட் செய்வது?
கையில் வலிமை இருந்தால் மிருகங்களாக மாறிய மனிதர்களை அழிக்க மிருகமாக மாறுங்கள் என வழிகாட்டுகிறான் தர்மா!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக