ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

 








பார்ன் அகெய்ன்


கே டிராமா


32 எபிசோடுகள்


இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய்யாத கொலைகளுக்காக அதாவது, அப்பா செய்த கொலைகளுக்காக அவன் காவல்துறையால் வேட்டையாடப்படுகிறான். அவமானப்படுத்தப்படுகிறான். அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல், ஓல்ட் ஃப்யூச்சர் என்ற புத்தக கடைதான். அங்கு சென்று நூல்களை வாங்க காசில்லாததால் அங்கேயே நூல்களை படித்துக்கொண்டிருப்பான். அவன் பெயர்தான் காங் ஜி சியோல். அவனுக்கு புத்தக கடையை நடத்தும் பெண்ணான ஹன் மீது ஒரு ஈர்ப்பு. அவளது அமைதியான வாழ்க்கை அவனுக்கு வியப்பு தருகிறது. வாழ்க்கையை வாழ உந்துதல் தரும் ஒரு சக்தியாக இளம்பெண்ணைப் பார்க்கிறான். ஹன், நேரம் கிடைக்கும்போது வார இறுதியில் தேவாலயத்தில் நூல்களை மக்களுக்கு படித்துக் காட்டுவது வழக்கம். கூலி வேலை செய்யும் சியோல் அந்த கூட்டத்திற்கு மெல்ல தன்னியல்பாக வரத் தொடங்குகிறான். அவனை ஹன் கவனிக்கிறாள். அவளுக்கு ஏதோ அவன் மீது பரிதாபம் வர, சில நூல்களைக் கூட இரவலாக படிக்க கொடுக்கிறாள். 


சியோலை அவனது அப்பா உள்பட பலரும் உடல், மன ரீதியாக சித்திரவதை செய்கிறார்கள். அவனுக்கு ஒரே ஆறுதல், ஹன்னை மறைவாக இருந்தபடியே பார்ப்பதுதான். ஹன்னுக்கு இதயநோய் உண்டு. அதை தெரிந்தும் அவளது காவல்துறை காதலன் மணம் செய்துகொள்ள நினைக்கிறான். ஆனால் ஹன் அதை மறுக்கிறாள். இந்த சூழ்நிலையில், அந்த நகரில் மஞ்சள் குடை மர்மக்கொலைகள் நடக்கின்றன. அதை சியோலின் அப்பாதான் செய்கிறார். அவருக்கு தன் மகன் தன்னைப் போலவே கொலைகாரனாகவேண்டும் என்று ஆசை. ஆனால் சியோல் தான் அப்படி கொலைகளை செய்யமாட்டேன் என்கிறார். அது அப்பாவை கோபப்படுத்துகிறது. நீ காதலிக்கும் புத்தக கடை பெண்ணை கொல்வேன் என சவால்விடுகிறார். அதேமாதிரி செய்துவிடுகிறார் என்பது வேறுகதை. அப்பா, தனது கொலைகளை மகன் செய்ததாக காட்ட முயல்கிறார். ஏறத்தாழ அதில் வெற்றியடைகிறார். ஹன்னின் காதலன், சியோலை தேடி வேட்டையாட அலைகிறார். ஹன்னுக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. ஹன் சிலமுறை இதயம் பழுதுபட்டு மயங்கி விழும்போது அவளைத் தேடிவரும் சியோல்தான் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காக்கிறான். அவளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தால் மயங்கிவிழமாட்டாள் என மருத்துவர் கூறுவதைக்கேட்கிறான். அதற்கு இதயத்தை தானமளிப்பவர் தேவை. இதற்காக அவன் தனது சகோதரனாக நினைத்தவனை கொன்ற சலூன் பெண்மணியைத் தேர்ந்தெடுக்கிறான். அவளைக் கொல்கிறான். அந்த நேரத்தில் அந்த கொலையைப் பார்த்துவிடுகிறாள் ஹன். போலீசுக்கு அவள்தான் சியோல் பற்றி தகவல் கூறுகிறாள். பிறகு மயங்கி விழுபவளை சியோல் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறான். தான் தலையில் அடித்து காயப்படுத்திய பெண்மணியின் இதயத்தை ஹன்னுக்கு வைப்பதுதான் அவனது திட்டம். ஆனால் அது நடக்காமல் போகிறது. சியோலை சலூன் பெண்மணி கொலையில் குற்றம்சாட்டி சிறையில் அடைக்கிறார்கள். அங்கிருந்து தப்புபவன். ஹன்னை ஒருமுறை பார்க்க நினைக்கிறான். அதற்குள் அங்கு அவளின் காதலன் பின் வந்துவிடுகிறான். சியோல், பின் கைகலப்பில் பின் இறந்துபோகிறான். இதைப் பார்த்து அதிர்ச்சியில் ஹன் மயக்கமடைகிறாள். இது முதல் பிறவி கதை. 


அடுத்தபிறவியில் ஹன் தடவியல் அதிகாரியாக சன் என்பவராக பிறக்கிறாள். பின், வழக்குரைஞராக கிம் சியோக் என்பவராக பிறக்கிறார். அடுத்து சியோல் வழக்குரைஞர் தலைவர் வீட்டு பணக்காரப்பிள்ளை பியோமாக பிறக்கிறார். என்எஃப்சில் வேலை பார்க்கும் தடவியல் அதிகாரி சன்னின் மாணவன்தான் பியோம். படு புத்திசாலி. அதிக மதிப்பெண் எடுக்கும் ஆள். சன்னிடம், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள கிம் வருகிறான். முதல் பிறவியில் நடந்த அதே முக்கோண காதல் கதை, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சற்றே மாறி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த மூன்று எலும்புகூடுகளை காவல்துறை கண்டுபிடிக்கிறது. இதுகூட இன்னொரு கொலைகாரரின் வழக்கில் கிடைக்கும் எதேச்சை ஆதாரங்கள்தான். இந்த மூன்று பாத்திரங்களுக்கும் இறந்த கால நினைவுகள் மெல்ல திரும்புகின்றன. இதில் பியோம் இந்த முறையும் துரதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் அவனுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் திறன் இருக்காது. இதனால் அவன் பிறரது உணர்ச்சிகள் பற்றிய நூல்களைப் படித்து தன்னை சமூகத்தில் இணைத்துக்கொண்டிருப்பான். ஆனால் முந்தைய பிறவி போல கொலை செய்யும் தவறை செய்யமாட்டான். தவறு செய்தவர்கள் தங்கள் குற்றங்களை உணரவேண்டும். அவர்களைக் கொல்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறும் கருத்து அற்புதம். இதே கருத்தால்தான் முன்முடிவுகளைக் கொண்ட கிம் சியோக் கூட மெல்ல மாறுவான். தனது கடந்தகால புனைவு வழக்குகளை ஒப்புக்கொள்வான். 


எனக்கு ரெண்டு இதயம் இருந்தா எப்படியிருக்கும்?


ஒருத்தனப் பார்த்தா இதயம் வேகமாக அடிச்சுக்கிது. இன்னொருத்தனப் பார்த்த இதயம் முழுக்க வலிக்குது. இப்ப நான் யாரை காதலிக்கிறது?


நீ என்னோட குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். நீ தனியா இருக்கும்போது நான் கூடவே இருப்பேன். 


இதுதான் தனது காதலை அன்பை பியோம், சன் என்ற பெண்ணிடம் கூறும்போது அவள் கூறுவது....இரண்டாவது பிறவியில் அவள் பியோமை தனித்துவம் வாய்ந்த ஆளாகவே பார்க்கிறாள். அவன் முற்பிறப்பு நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு சியோலின் எலும்புக்கூடு அருகே நின்று பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன. அதில் அவன் தனது முற்பிறப்பு காதலை, ஹன் மீதுள்ள பிரியத்தை நிதானமாக வெளிப்படுத்துவான். அதை சன் யோசித்துப் பார்த்து மெல்ல பியோம் மீது ஈர்ப்பு கொள்வாள். அதேநேரம் அவளுக்கு கிம் சியோக்கை விட்டு பிரியமுடியாது என்ற தீவிர எண்ணம் இருக்கும். முற்பிறவியில் தன்னை, வாழ்க்கையை இழக்கத் தயாராக இருக்கும் சியோலை ஹன் முழுமையாக புரிந்துகொள்ள மாட்டாள். ஏனெனில் அவள் பின் மீது அதீத காதல் கொண்டிருப்பாள். சியோல் மீது பரிதாபம் காண்பிப்பாள். நட்பு கூட கிடையாது. ஆனால் அவளுக்காக சியோல் தன்னை இழக்க கூட தயாராகி இறுதியாக சிறைக்கு செல்வான். ஆனால் தான் விலங்கல்ல மனிதன்தான் என்ற கூறி, கொலையை அவளுக்காக அவளுக்கு தேவையான இதயத்திற்காக செய்தேன் என்று கூறமாட்டான். 


இரண்டாவது பிறவியில் பியோம், சானிடம் வெளிப்படையாக தனது காதலை கூறிவிடுவான். அவள் நான் உன்னோடு கொஞ்சநாட்கள்தான் இருப்பேன். பிறகு திரும்பி கிம் சியோக்கிடம் போய்விடுவேன். அவனை காதலிக்கிறேன் என்பாள். பியோம், உன்னை யார் நல்லபடியாக பாதுகாக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்பான். சொன்னபடி பியோம்தான் சானை போன பிறவி போலவே மருத்துவமனைக்கு தூக்கிச்செல்வான். சான், இரண்டாவது பிறவியில் குற்றவாளி ஒருவரிடமிருந்து மாற்று இதயம் பொருத்தப்பட்டு நன்றாகத்தான் இருப்பாள். ஆனால் அது இறுதியாக செயலிழக்கும்போது பியோம் செய்யும் செயல் அவளை உருக வைத்துவிடும். அந்தளவு ஒரு பாசத்தை வெறியை அவள் கிம்மிடம் கூட பார்த்திருக்க மாட்டாள். அதுதான் சானை மெல்ல பியோம் பக்கம் கூட்டிச்செல்லும். அதுவும் தன்னைக் கொன்று தன் இதயத்தை காதலிக்கு தர முயலும் இடம், நெகிழ்ச்சி. அதை புரிந்துகொண்டு கிம் சியோக் கூட சற்று இளக்கமான தன்மையில் மாறிவிடுவான். உண்மையில் அவன் முன்னாள் காதலி யாரென்று பியோம் மூலமாகவே அறிவான். அப்போதுதான் அவன் முன்முடிவுகளிலிருந்து மெல்ல வெளியே வருவான். தனது தவறுகளை ஒப்புக்கொள்ள பியோம் நேரடியாக கேட்பதோடு, அவனது உயிரையும் ரவுடி ஒருவரிடமிருந்து காப்பாற்றுவான். அதற்குப் பிறகு கிம்மின் செயல்பாடுகள் மாறிவிடும். அவனது அப்பா, குற்றவாளி ஒருவருக்கு குறைந்த தண்டனை அளிப்பதோடு, அவர் திருந்திவிடுவார் என பேசுவார். ஆனால் அந்த குற்றவாளி சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கிம்மின் அப்பாவைக் கொன்றுவிடுவான். இதனால் குற்றவாளி என  சந்தேகம் தோன்றினாலே ஒருவரை வழக்கில் சிக்கவைத்து போலி ஆதாரங்களை உருவாக்கி நீதிமன்றத்தில் வாதாடுவது அவன் வழக்கம். இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதை பியோம் மூலமாகவே கிம் அறிவான். தனது தவறுகளை திருத்திக்கொள்ள முனைவான். இந்த முயற்சியில் ஒன்றுதான், சான் பெற்றோரை தான் விபத்தில் கொன்றது பற்றி... அதை சொன்ன பிறகு சான் கடும் சோகத்தில் மூழ்கிவிடுவாள். இதயமும் பழுதாகிவிடும். அவளைத்தான் பியோம் தனது இதயம் மூலம் காப்பாற்ற முனைவான். 


இதில் இரண்டுவிதமான பாத்திர வார்ப்பில் நாயகி இருக்கிறார்கள். ஒன்று, நாயகன் குணத்தில் எப்படி இருந்தாலும் தன்னிடம் நடந்துகொள்ளும் விதத்தில் நல்லவன் என்று நம்பி காதலிக்கும் ஹன். இரண்டாவது பிறவியில் உள்ள சான் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் யோசிப்பவள். கிம் சியோக்கை காதலிக்கும் முன்னரே பியோம் அறிமுகமாகிவிடுகிறான். அவனது அழகுடன் பெண்களை பெரிதாக கண்டுகொள்ளாத உணர்ச்சியற்ற போக்கும் செயல்பாடும் கல்லூரியில் நிறைய பெண்களை ஈர்க்கிறது. வீட்டில் அவனது அப்பா, தம்பி என இருவருமே அவனை அவமானப்படுத்துகிறார்கள். அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு. அதிலும் கூட தவறு பியோமிடம் இருக்காது. ஒரு சிறுமி அவனை ஒருதலையாக காதலித்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வாள். அந்த வழக்கில் பியோமை குற்றவாளி என கூறி காப்பகத்தில் அடைத்துவிடுகிறார்கள். இந்த வழக்கு பற்றிய உண்மையை அவன் தான் காதலிக்கும் கல்லூரி பேராசிரியர் சானிடம்தான் முதல்முறையாக கூறுகிறான். கிம் மீது காதல் இருந்தாலும் பியோமின் கண்ணியமான நடத்தை, புத்திசாலித்தனம், தவறு செய்யாமலேயே குற்றத்தை தோளில் சுமக்கும் துயரம் இதெல்லாம் சானை மெல்ல அவனை நேசிக்க வைக்கிறது. கிம் ஒருபுறம் இருந்தால் மற்றொரு புறம் அவளை நேசித்து பாதுகாப்பவனாக பியோம் மட்டுமே இருக்கிறான். அதை அவளும் மெல்ல உணர்கிறாள். இந்த குணம் ஹன்னிடம் இல்லை. இதனால்தான் இரண்டாவது பிறவியில் தனது காதலை ஹன் அல்லது சான் சியோல் அல்லது பியோமிடம் கூறுகிறாள். இருவரும் ஒன்றாக சேர்கிறார்கள். 


கதையில் போக்கிலேயே கூட காவல்துறை, சமூகம், ஊடகங்கள், உறவுகள் எப்படி முன்முடிவுகளால் கோபத்தை, வன்மத்தை பலவீனமான அப்பாவியிடம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அவன் இறக்கும் முன் சிறிதுநேரமேனும் அன்பு கிடைத்தால், காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கூட நன்றாக இருக்குமே என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம். ஹான் இதயம் செயலிழந்து இறக்கும் சூழ்நிலை. அதேநேரம் கிம் சுட்ட துப்பாக்கி தோட்டா பியோமின் மூளையில் இருக்கிறது. பியோம் தான் இறந்தால கூட தனது இதயத்தை நேசிக்கும் காதலி சானுக்கு கொடுக்க தனது ரவுடி சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறான். இந்த காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. 


இருபிறவிகளிலும் ஹன், சான் என்ற பாத்திரம் மட்டுமே சியோல், பியோம் மீது கருணை காட்டும் பாகுபாடின்றி நடந்துகொள்ளும். மற்றவர்கள் அனைவருமே சியோல், பியோமை சுயநலமாக சுரண்டவே நினைப்பார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ்சரில் வரும் நாயகனின் வடகொரிய காதலிதான் இதில் நாயகி. சிரித்தால் அவ்வளவு அழகு. நன்றாக நடித்திருக்கிறார்.  


நெகிழ்ச்சியான காதல் கதை


கோமாளிமேடை 


https://asianwiki.com/Born_Again

கருத்துகள்