தந்தை - மகன் உறவில் உள்ள இடைவெளிக்கு உண்மையான காரணம்!
அப்பா, மகன் உறவு என்பது சினிமாக்களில் வருவதைப் போல எளிதானது அல்ல. சொத்துக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்காக ஒருவர் பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தந்தைகள் பெரும்பாலும் மகன்களோடு நெருக்கமாக பழகுவதில்லை. பெரும்பாலும் இருவருக்கும் இடையிலான உறவில் மௌனமே உள்ளது. ஆண்களின் உறவு சிக்கல்கள் பற்றி பெரிதாக உளவியலாளர்கள் கவலைப்பட்டது இல்லை. ஆனால், பிரெஞ்சு - கனடா நாட்டு உளவியலாளர் கய் கார்னியு என்பவர், இதில் கவனம் குவித்து அப்சென்ட் ஃபாதர்ஸ் லாஸ்ட் சன்ஸ் என்ற நூலை 1991ஆம் ஆண்டு எழுதினார். உளவியலாளர் தன்னுடைய அப்பாவுடனான உறவை முன்னுதாரணமாக வைத்துத்தான் ஆய்வு செய்து நூலை எழுதி வெளியிட்டார்.
பெண் பிள்ளைகளை விடுங்கள். அவர்கள் தங்கள் அழகு, செயல் என ஏதாவது வகையில் பிறரிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்றவர்களிடமிருந்தே அங்கீகாரம், பாராட்டு கிடைப்பதில்லை. அந்த வகையில் மகன்களுக்கு தங்கள் தந்தையிடமிருந்து மனப்பூர்வமான பாராட்டு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் கூட அதற்கு வெகு காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.
ஏன் தந்தை மகனை மனப்பூர்வமாக பாராட்டுவதில்லை? காரணம் அப்படி பாராட்டினால் அவர் தனது ஈகோவை சமரசம் செய்துகொள்வதாக நினைக்கிறார். அதேசமயம் மகனுக்கு அப்பா எளிதாக பாராட்டைக் கொடுத்துவிட்டால் அவனது மனதில் அவருக்கான மரியாதை இருக்காது. இதில் சமூகமும் அழுத்தம் செலுத்துகிறது. ஒரு மனிதன் ஒரே நேரத்தில் வலிமையாகவும், திறந்த மனதுடனும் இருக்க முடியாது என போதிக்கிறது. இதனால் இரு ஆண்கள் அதாவது, தந்தை, மகனுக்கு இடையிலான நல்ல உறவு உருவாகாமலேயே போய்விடுகிறது. இறுதிவரை அவர்களுக்கு இடையில் அன்பு பாலம் என்பது கட்டப்படாமலே இருக்கிறது. வெளிப்படுத்தாத அன்பை ஒருவர் மனதில் வைத்திருந்து என்ன பயன்? இதைத்தான் கார்னியு தனது ஆய்வில் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக