காலம் கடந்து அடையாளம் காணப்பட்ட உளவியலாளர் ஸ்கின்னர்!

 







இயற்கையாக ஒருவரின் மரபணுவில் குணங்கள், இயல்புகள், பழக்கங்கள் உள்ளன என அறிவியலாளர் சார்லஸ் டார்வின் கருதினார். அவரின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஸ்கின்னர், இயற்கை, வளர்ப்பு என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலை விலங்குகள் முதல் மனிதர்கள் வரை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல வாழ முடிகிறது. அப்படி வாழ்ந்தால்தான் அந்த விலங்கோ,மனிதரோ தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.


ஒருவரின் மரபணு, இயற்கையான சுற்றுப்புறசூழல்கள் என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளை வளர்த்தெடுக்கின்றன என்று ஸ்கின்னர் கூறினார். இதைப்பற்றிய கருத்துகளை 1981ஆம் ஆண்டு தி செலக்‌ஷன் பை கான்சீக்குவன்ஸ் என்ற கட்டுரையில் எழுதினார். இந்த கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியானது. 


1936ஆம் ஆண்டு, ஸ்கின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையில் இணைந்தார். இந்த முறை எலிகளை கைவிட்டு புறாக்களை நோக்கி நகர்ந்தார். இந்த முறையில் புறாக்கள் வட்ட வடிவில் உள்ள ஒரு பொருளை கடிகாரச் சுற்றினால் உணவு கிடைக்கும்படி அமைத்தார். அவை அதை முழுமையாக சுற்றிமுடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும் என பின்னர் மாற்றம்செய்தார். 


ஸ்கின்னர் தனது சோதனைகளுக்கு பெற்ற பிள்ளைகளையே பயன்படுத்திக்கொண்டார். அதைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோதும் கவலையே படவில்லை. அவர் குணம் அப்படிப்பட்டதுதான். இந்த சோதனையில் இருந்து கல்வி சம்பந்தமான கோட்பாடுகள் உருவாயின. ஆனால் அதை அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் பொருட்படுத்தவில்லை. ஸ்கின்னர் பற்றிய எதிர்மறையான கருத்துகளை பேசினர். அவரின் ஆக்கப்பூர்வ ஆராய்ச்சி எடுபடவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதினால் மொத்தமாக அனைத்து தேர்வுகளும் முடிந்தபிறகு அதற்கான மதிப்பெண்களை வழங்குகிறார்கள் அல்லவா? இதற்கு காலதாமதம் ஆகிறது. இதை வேகமாக செய்யும்படி ஒரு எந்திரத்தை ஸ்கின்னர் உருவாக்கினார். மாணவர்கள் ஒரு கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உடனே எந்திரம் அதற்கு சரி, தவறு என்பதை உடனே எதிர்வினையாற்றும். இதுதான் பின்னாளில் கல்வித்துறையில் கணினி வழி கோடிங் புரோகிராமாக மாற்றப்பட்டு புகழ்பெற்றது. 


இன்று ஆளில்லாத ட்ரோன்களை இயக்கி ஒரு நாட்டு ராணுவத்திற்கு பெரும் சேதாரத்தை உருவாக்கலாம். அழித்து நிர்மூலமாக்கலாம். ஸ்கின்னர் காலத்தில் ராணுவத்திற்கு இலக்கை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசும் தொழில்நுட்பம் இல்லை. அதை ஸ்கின்னர் புறாக்களை வைத்தே உருவாக்கினார். அமெரிக்க ராணுவம் ஆராய்ச்சிக்கு உதவினாலும், ஆராய்ச்சி முடிவு நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை என்று கூறிவிட்டது. ஸ்கின்னர் நவீன புதிய கண்டுபிடிப்புகளை, கருவிகளை ஆர்வமாக தேடிக்கொண்டே இருந்தார். அவற்றை பயன்படுத்த முனைந்தார். இதெல்லாம் ராணுவத்தினருக்கு அந்தளவு நம்பிக்கை தரவில்லை. கல்வி தொடர்பான அறிக்கைகள், நூல்கள் ஆகியவற்றில் தனக்கு பிடித்த ஆய்வுக்கருத்துகளை எழுதிக்கொண்டே இருந்தார். 


குணநலன்களைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் வெளிப்படையாக உடலில் தெரியவேண்டும் என ஸ்கின்னர் நினைத்தார். இதையே தனது பியாண்ட் ஃப்ரீடம் அண்ட் டிகினிட்டி, வெர்பல் பிஹேவியர் ஆகிய நூல்களில் எழுதினார். நோம் சாம்ஸ்கி போன்றோர் இதை கடுமையாக விமர்சித்தனர். தனிப்பட்ட சுதந்திரமான செயல்பாடு, தீர்மானமான செயல்பாடு என இரண்டு விஷயங்களை ஸ்கின்னர் முக்கிய அம்சங்களாக தனது கொள்கையில் பார்த்தார். ஒருவர் தான் மேற்கொண்ட செயலில் இருந்து விலகும்போது அது தோல்வியாக இருக்கலாம். அதன்பிறகு தொடரும் விளைவுகள் தோல்வியின் தொடர்ச்சியாக மோசமானவையாகவே இருக்கும். 


அவரின் கொள்கைகளை நடைமுறை அனுபவங்களோடு உளவியலாளர்கள் இணைத்துப் பார்த்து புரிந்துகொள்ள தவறிவிட்டனர். ஸ்கின்னரின் உளவியல் கொள்கைகள் இருவழித்தன்மை  கொண்டவை. வறட்சியான ஒற்றைத்தன்மையில் ஆனவை அல்ல. ஒருவரின் குண இயல்புகள்,அவரைச் சுற்றியுள்ள சூழல் ஆகியவை இணைந்தே அவரின் குண இயல்புகள் முழுமையாகின்றன என ஸ்கின்னர் நம்பினார். 1960களில் அவரின் கொள்கைகளை யாரும் அங்கீகரிக்கவில்லை. அதை பற்றி பெரியளவு பேசவும் இல்லை. அன்றைய சூழலில் குண இயல்புகளைப் பற்றி பேசாமல் மனதின் நிலைகளைப் பற்றி உளவியலாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தனர். ஆனால் பின்னாளில் நிலை மாறியது. கல்வியாளர்கள், மருத்துவ சிகிச்சை செய்பவர்கள் ஸ்கின்னரின் ஆய்வு மீது கவனம் செலுத்தினர். அதிலுள்ள கொள்கை கோட்பாடுகளை படித்து ஆய்வு செய்யத் தொடங்கினர். அதன் காரணமாகவே இப்போது நாம் அவரைப் பற்றி வாசிக்கிறோம். 

டெனர்.காம்

கருத்துகள்