முன்முடிவுகளின்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே ஆனந்தம்தான்!

 









பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனநல குறைபாடு என்பது சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. அதனை எதிர்மறையாகவே மருத்துவர்களும், மக்களும் புரிந்துகொண்டனர். அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தனர். மனநல குறைபாடு என்றால் இதுதான் என்று  வரையறைகளும், அதை தீர்ப்பதற்கான முறைகளும் கூறப்பட்டன. 


மனிதர்களுக்கு ஏற்படும் மனநல குறைபாடு என்பது பன்மைத்தன்மையானது. அதை குறிப்பிட்ட இறுக்கமான வரையறைக்குள் அடைப்பது சரியானது அல்ல என்ற கருத்தை அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் கொண்டிருந்தார். மனநிலையை குறிப்பிட்ட வரையறைக்குள் அடைப்பதை அவர் ஏற்கவில்லை. நல்ல மனநிலையை ஒருவர் அடைவதற்கு குறிப்பிட்ட செயல்நிலைகள் கிடையாது என கூறினார். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டே இருக்கிறது. நாமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். அதன் வழியாக அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. எனவே, மனநிலை சீர்கெட்டு உள்ளதாகவும், அதை ஒருவர் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதையும் ரோஜர்ஸ் ஏற்கவில்லை. 


நல்ல வாழ்க்கையை ஒருவர் வாழ அவர் புதிய அனுபவங்களுக்கு தனது மனதை திறந்து வைக்க தயாராக இருக்கவேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும். தன்னை நம்பவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தன்னையும் பிறரையும் எந்த நிபந்தனையுமின்றி நேர்மறையாக ஏற்க வேண்டும். இதெல்லாம் ரோஜர்ஸ் உருவாக்கிய கொள்கைகள். 

மனிதர்கள் வாழும் வாழ்க்கை என்பது எந்த இலக்கையும் அடைவதற்கல்ல. வாழ்க்கை என்பது வளர்ச்சியும் பல்வேறு விஷயங்களையும் கண்டுபிடிப்பதற்கானது. இந்த செயல்பாடு ஒருவர் மரணமடையும் வரை நிற்பதில்லை. 


கார்ல் ரோஜர்ஸ் அமெரிக்காவின இலினாய்ஸில் உள்ள ஓக் பார்க்கில் பிறந்தார். கல்லூரிக்கு போகும் முன்னர்,குடும்பம் தாண்டி அவருக்கு மிகச்சில நண்பர்களே இருந்தனர். தொடக்கத்தில் வேளாண்மை பாடத்தில் பட்டம் பெற்றிருந்தார். பள்ளிக்கால தோழி ஹெலன் எலியட்டை 1924ஆம் ஆண்டு மணம் செய்தபிறகு இறையியல் வகுப்பில் படிக்க சேர்ந்தார். பிறகு அதிலிருந்து விலகி உளவியலில் இணைந்தார். ஓகியோ, சிகாகோ, விஸ்கான்சின் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறார். வாடிக்கையாளரை மையமாக கொண்ட உளவியல் சிகிச்சையை வடிவமைத்து அதை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களை குணப்படுத்த பயன்படுத்தினார்.  இதற்காகவே அமெரிக்க சேவை அமைப்பில் இணைந்தார். இதற்காக அவருக்கு 1964ஆம்ஆண்டு சிறந்த மனிதநேயர் என்ற விருது வழங்கப்பட்டது. உலக அமைதிக்காக பத்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1987ஆம் ஆண்டு நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெருமைக்குரியவர். 


முக்கிய படைப்புகள் 


1942 Counselling and psychotherapy


1951 client centered therapy


1961 on becoming  a person



வாழ்க்கையை கிங் சைசில் வாழ வேண்டுமென பலர் நினைக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையின் யதார்த்தம் என்னவென்றால், ஒண்டு குடித்தன வீட்டில் வாழ்க்கை அமையும்படி இருக்கிறது. இதை ஒருவர் எதிர்மறையாக கருதவேண்டியதில்லை. இப்படி எதிர்மறையாக கருதினால், உண்மையில் அவருக்கு கிடைக்கும் அந்த நேர நிகழ்கால அனுபவம் கிடைக்காமல் போகிறது. எனவே, முன்முடிவுகள் இல்லாமல் அனுபவத்தை எதிர்கொள்ளவேண்டும். இதன் வழியாக கிடைக்கும் அனுபவம் நேர்மறை, எதிர்மறையாக இருக்கலாம். வலியை, மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கை அனுபவமாக அவை மனிதர்களை செழுமை செய்கிறது. முன்முடிவுகளை ஒருவர் தவிர்த்தாலே வாழ்க்கையை நல்ல முறையில் வாழ முடியும். ஆனால் இந்த செயல்முறை கூறுவதைப் போல எளிமையானது அல்ல. 


தன்னுடைய சிந்தனைகள், பிறருடைய யோசனைகள் என்று இல்லாமல் வாழ்க்கையில் நடைபெறும் அனுபவங்களின் வழியாக பெறும் படிப்பினைகள் முக்கியமானவை என ரோஜர்ஸ் கருதினார். இந்த வகையில் ஒரு மனிதரை எந்த நிபந்தனையுமின்றி ஏற்கவேண்டும் என்றார். குறிப்பாக, பெற்றோர் பிள்ளைகளை குறிப்பிட்ட தேர்வில் மதிப்பெண் பெற்றால் அவர்களுக்கு சலுகைகளை, பரிசுகளை தருவது என்பதை தவறு என்றார். இது அவர்களை காலப்போக்கில் தங்கள் மேல் மதிப்பு இல்லாதவர்களாக மாற்றுகிறது. பிள்ளைகள் அனுபவத்தை தங்களுடைய இயல்பான குணப்போக்கினால் அணுக முடியாமல் போகிறது. பிறரது நிர்ப்பந்தம் காரணமாகவே தங்களது வாழ்க்கையில் ஒன்றை சந்திக்கிறார்கள். அதுவே அவர்களை பின்னாளில் மன அழுத்தத்தில் தள்ளுகிறது. ஒருவர் தன்னைத்தானே ஏற்றுக்கொள்ள தொடங்கும்போது எந்த அழுத்தங்களும் இல்லாமலேயே அவரால் சிறப்பாக செயல்பட முடியும். நிறைய சாதனைகளை தன்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் செய்ய முடியும். 


1950ஆம் ஆண்டு ரோஜர்ஸ், ஆபிரகாம், மாஸ்லோ, ரோலோ மே ஆகியோரோடு இணைந்து ஹியூமனிஸ்ட் சைக்காலஜி எனும் சிகிச்சை முறையை உருவாக்கினார். இதை வாடிக்கையாளரை மையப்படுத்தியது என்று கூறியவர், பின்னாளில் மனிதர்களை முதன்மைப்படுத்திய முறை என பெயர் மாற்றினார். ரோஜரின் உளவியல் முறை உலக அளவில் பயன்பட்டு வருகிறது. கல்வி, சமூகப் பணி ஆகியவற்றில் உரையாடி பிரச்னையை தீர்ப்பது என்பது புகழ்பெற்ற அணுகுமுறையாகும். 

பின்டிரெஸ்ட்
















கருத்துகள்