போர், பாலியல் சீண்டல், வன்முறையால் குழந்தைகளுக்கு நேரும் உளவியல் குறைபாடுகள்!
பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்டியக்ஸ் நகரில் போரிஸ் சைருல்னிக் பிறந்தார். இரண்டாம் உலகப்போருக்கு சிறிது முன்னதாக பிறந்தார். இவரது பெற்றோர் வாழ்ந்த பகுதியின் ஆட்சி வேறு ஒரு குழுவிற்கு மாறியதால், அவர்கள் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். இதனால் யூதராக போரிஸின் வீடு சோதனை செய்யப்பட்டு யூதரான பெற்றோர் ஆஷ்விட்சிலுள்ள வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை மட்டும் பாதுகாப்பாக வளர்க்க ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களோ சிறியளவு தொகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். சிறுவனான போரிஸ் விரைவில் வதைமுகாமுக்கு மாற்றப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக மாறினார். தன்னைத்தானே பராமரித்துக்கொண்டு கல்வியை தானாகவே கற்றுக்கொண்டார். உறவுகளே இன்றி வளர்ந்தவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். தன்னுடைய வாழ்க்கையை ஆய்வு செய்ய நினைத்தவர், உளப்பகுப்பாய்வு, நியூரோசைக்கியாட்ரி ஆகியவற்றை கற்றார். தனது வாழ்வு முழுவதும் மோசமான விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவிட்டார்.
முக்கிய படைப்புகள்
1992 the dawn of meaning
2004 the whispering of ghosts
2009 resilience
ஒரு மோசமான விஷயம் நடைபெறுகிறது. அதன் விளைவாக ஒருவர் நொறுங்கிப்போனதாக உணர்ந்து விரக்திக்கு உள்ளாகிறா். தொடர்ந்து அதன் விளைவாக அனைத்திலும் மனதின் ஈடுபாடு குறைந்து நொடித்துப்போகிறார். அடுத்து, நடந்த மோசமான விஷயத்தில் இருந்து ஒருவர் மீண்டு வர முயல்கிறார். இழப்பிலிருந்து மீண்டு தொழிலை, சொந்த வாழ்க்கையை மெல்ல மீட்டெடுக்கிறார். நடந்த சோகமான சம்பவத்தை அவர் சவாலாக எடுத்துக்கொண்டு சாதிக்கிறார்.
மோசமான பாலியல் சீண்டல், வல்லுறவு, பெற்றோரின் சித்திரவதை, வன்முறை ஆகியவற்றை ஒருவர் தாண்டி வருவது கடினம். இந்த சித்திரவதைகள் ஒருவர் வளரும் இளம் பருவத்தில் நிகழ்ந்தால் மனவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாகவே அவருக்கு மனநல குறைபாடுகள் உருவாகின்றன. சிலருக்கு வெளிப்படையாக தெரியும் வகையில் அதீத பயம், மனப்பதற்றம் ஆகியவை கூட ஏற்படுவதுண்டு.
இயற்கை பேரிடர்கள் நடக்கும் நாடுகளில் அரசை எதிர்பார்ப்பதை விட மக்கள் அவர்களாகவே தனிக்குழுக்கள் அமைத்து நிலைமையை சீர்செய்ய முற்படுவார்கள். இப்படி சோதனைகளுக்கு எதிராக எதிர்த்து நின்று சமாளிக்கும் திறன் சிலருக்கு உண்டு. சிலர் அந்த வேதனையைத் தாங்கமுடியாமல் அதிலேயே தங்களை ஆழ்த்திக்கொண்டு காணாமல் போவதும் உண்டு.
போரிஸ் தனது வாழ்க்கையை உளவியல் பகுப்பாய்வு அடிப்படையில் பார்த்து சில கொள்கைகளை உருவாக்கினார். அதன்படி ஆதரவில்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்கு பிரச்னைகளை சமாளித்து சவாலாக ஏற்று வளரும் வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு கிடைக்கும் உறவுகள்தான் அதை சாத்தியப்படுத்துகின்றன. இந்த வகையில் மோசமான சம்பவங்களால் பாதிக்கப்படும் சிறுவர்களை எந்த வித நோயாளி முத்திரையும் குத்தாமல் அவர்களை மனிதர்களாக ஏற்று நடத்துவது முக்கியம். அன்பு காட்டப்படுவது முக்கியம். அப்படியல்லாதபோது அவர்கள் கடந்தகால மோசமான சம்பவங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அனைத்து ஜிஃப்களும் பெறப்பட்ட வலைத்தளம்
டெனர்.காம்
கருத்துகள்
கருத்துரையிடுக