தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!
கைதி
சிரஞ்சீவி, மாதவி
ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.
இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.
இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சிரஞ்சீவியின் அப்பாவிடம் கடனை அடைக்கச்சொல்லி மிரட்டுகிறார். அது நேரடியாக காதலை கைவிடு என்று கூறும் மறைமுக மிரட்டல்தான்.
மேலும்,சிரஞ்சீவியின் விதவை அக்காவை பாலியல் ரீதியாக பயன்படுத்த கிராம முன்சீபை வீரபத்திரம் தூண்டுகிறார். இதைக் கேட்டு கோபமாகும் சிரஞ்சீவியின் அப்பாவைக் கழுத்தில் துண்டை இறுக்கி கொல்கிறார்கள். பிறகு அவரின் மகளை திருமணம் செய்ததாக ஏமாற்றி வனத்துறை அதிகாரியின் படுக்கைக்கு அனுப்புகிறார்கள். அவர் அதை அறிந்து தப்பிக்கும் முயற்சியில் கொல்லப்படுகிறார். இதை அறிந்து அங்கு பழிவாங்க வரும் சிரஞ்சீவியை அடித்து, உதைத்து அவன் தனது சகோதரியை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி சம்பாதித்தான் என புகார் கூறுகிறார் வீரபத்திரம். அங்கு இருந்து தப்பும் சிர்ஞ்சீவி, வீரபத்திரத்தை கொலை செய்வதற்காக முயல்கிறார். இந்த முயற்சியில் இருக்கும்போது அவர் பெண் மருத்துவரை சந்திக்கிறார். அவருக்கும் ஒரு பழிவாங்குவதற்கான காரியம் இருக்கிறது. அவர் யார், யாரை பழிவாங்க நினைக்கிறார் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
பழிவாங்குவதை முதன்மையாக கொண்ட கதைக்களம் சண்டைப்பிரியர்களுக்கானது. காவல்நிலையம், காடு, கிராமம் என பல்வேறு இடங்களில் சண்டை உக்கிரமாக நடைபெறுகிறது. படத்தின் இறுதியில் சிரஞ்சீவி இறந்துபோவதே அவர் மனதில் இருக்கும் மோசமான வலிக்கு, வேதனைக்கு நேர்மையாக இருக்கும். மாதவி தவிர அவருக்கு உதவிய ஆதரவளித்த அனைவருமே இறந்துபோகிறார்கள். மாதவி கொண்ட காதலே சிரஞ்சீவியின் எளிமையான வாழ்வை முழுக்க அழித்தொழிக்கிறது. ஆனால் அவர் தனது காதலி மீது பெரிய நெருக்கமோ, விலக்கமோ கொள்வதில்லை. தனது விதியை ஏற்கெனவே அறிந்துகொண்டவர் போலவே நடந்துகொள்கிறார். சாதிமுறை, நீதிமன்றம், காவல்துறை என அனைவருமே ஏழை, எளிய மக்கள் விவகாரத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதை காட்டியிருக்கிறார்கள்.
படத்தை வணிகப்படமாக பார்த்தாலுமே ஒருகட்டத்தில் உள்ளுக்குள் உங்கள் ரத்தம் கொதிப்புற்று ஓடுவதை உணர்வீர்கள்.
கோமாளிமேடை டீம்
Story byParuchuri brothers
கருத்துகள்
கருத்துரையிடுக