கற்ற அறிவை நினைவில் வைத்து செயல்படும் விலங்குகள்! - எட்வர்ட் டோல்மனின் ஆய்வு

 










அமெரிக்காவில் புகழ்பெற்ற உளவியலாளர் என எட்வர்ட் டோல்மனை உறுதியாக சொல்லலாம். இவர் முன்னர் நாம் பார்த்த உளவியல் ஆய்வாளர்களான தோர்ன்டைக், வாட்சன் ஆகியோரை விட வேறுபட்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இவர் குணநலன் சார்ந்த உளவியலை அறிவியல் அணுகுமுறை சார்ந்துதான் அணுகினார். கோணம், அறிவாற்றல், ஊக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டார். ஜெர்மனியில் கெசால்ட் உளவியல் முறையை கற்று பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து பர்பஸிவ் பிஹேவியரிசம் என்ற கோட்பாடை உருவாக்கினார். இதை தற்போது காக்னிட்டிவ் பிஹேவியரிசம் என அழைக்கின்றனர். 


டோல்மன், குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்து விலங்குகளின் மீது செய்யும் சோதனைகளை நம்பவில்லை. ''விலங்குகளுக்கு உணவை பரிசாக கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய வைத்தாலும் அவற்றால் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்'' என்று கூறினார். இப்படி கற்ற அறிவை சேர்த்து வைத்து விலங்குகள் பின்னாளில் பயன்படுத்துகின்றன என்றார். எலிகளுக்கு சில புதிர்களை விடுவித்தால் உடனே உணவும், மற்றொரு குழு எலிகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உணவும், மூன்றாவதாக ஒரு  எலி குழுவுக்கு ஆறு நாட்களுக்கு பிறகு உணவும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் இரண்டாவது, மூன்றாவது எலி குழுக்களுக்கு செய்யும் செயலில் தவறுகள் குறைவாக இருந்தது. அவை தமக்கு கிடைக்கும் உணவு பரிசுகள் பற்றி தெளிவாக தெரிந்தது. புதிர்களை எப்படி தீர்ப்பது என்பதையும் விரைவில் தெளிவாக தெரிந்துகொண்டுவிட்டன. 


விலங்குகள் மட்டுமல்ல மனிதர்களுக்கும் கூட அறிவாற்றல் என்பது நிறைய சமயங்களில் திடீரென வெளிப்படுவதாக உள்ளது. எப்படி என்கிறீர்களா? தினசரி குறிப்பிட்ட வழியில் அலுவலகம் சென்று வருகிறீர்கள். அங்குள்ள காட்சிகள், பொருட்கள், வீடுகள் அதன் எண்கள் மனதில் பதிந்திருக்கும். ஒருநாள் இதுபற்றி கேட்கும்போது அதை இயல்பாக உங்களால் நினைவுபடுத்தி கூறமுடியும். சிலசமயங்களில் இதை கூறுபவர்களுக்கே பின்னர் ஆச்சரியமாக இருக்கும். இதை லேடன்ட் லேர்னிங் என்று அழைக்கிறார்கள். 


எட்வர்ட் டோல்மன் 


அமெரிக்காவின் மசாசூசெட்ஸிலுள்ள வெஸ்ட் நியூடனில் பிறந்தார். 1911ஆம் ஆண்டு எம்ஐடியில் எலக்ட்ரோகெமிஸ்ட்ரி படித்தார். வில்லியம் ஜேம்ஸின் ஆய்வுகளைப் பற்றி படித்தபிறகு ஹார்வர்டில்  தத்துவம், உளவியல் கற்றார். படிக்கும்போது ஜெர்மனி சென்று அங்குள்ள கெஸ்சால்ட் உளவியல் பற்றி அறிந்துகொண்டார். முனைவர் படிப்பை முடித்ததும், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யத் தொடங்கினார். போர், வன்முறைக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்த காரணத்தால் பல்கலைக்கழக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு கலிஃபோர்னியா பல்கலையில் வேலைக்கு சேர்ந்தார். இங்குதான் எட்வர்ட் எலிகளை வைத்து அதன் குண இயல்புகளைப் பற்றி சோதனைகளை செய்தார். மெக்கார்த்தி காலகட்டம் என்பதால், எட்வர்ட் வேலையிலிருந்து விலக்கப்படுவார் என அச்சுறுத்தப்பட்டார். ஆராய்ச்சி செய்வதிலும் நிறைய நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு அரசுக்கு ஆதரவான விசுவாச ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டார். பின்னரே நிலைமை மாறியது. 1959ஆம் ஆண்டு எழுபத்து மூன்று வயதில் இறந்துபோனார். 


முக்கிய படைப்புகள் 


1932 purposive behavior in animals and men


1942 drives toward war


1948 cognitive maps in rats and men


tenor.com



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்