பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை
கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.
கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.
கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்டர்ஸ் அண்ட் ஹியூமன்ஸ் அபார்ட் என்பதை கேப்சா என்ற சொல்லின் விரிவாக்கமாக கூறலாம். ஒருவர் மனிதரா அல்லது ஏஐ பாட்டா என கண்டுபிடிக்க கேப்சா உதவுகிறது. 2016ஆம் ஆண்டு இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூகுளின் புகைப்படங்களைக் கொண்ட கேப்சாவை எளிதாக தோற்கடிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இதன் வெற்றி சதவீதம் எழுபதாக இருந்தது. தானியங்கியாக இயங்கும் மென்பொருட்களை வைத்தே இதை சாதித்தனர். இதை எதிர்கொள்ள ஹெச்கேப்சா போன்ற நிறுவனங்கள் முயல்கின்றன. நிஜத்தில் இல்லாத பாத்திரம் ஒன்றை கண்டுபிடிக்கும்படி கேப்சாவை உருவாக்கியுள்ளது இந்த நிறுவனம்.
போக்குவரத்து சிக்னல், நடைபாதை, பேருந்து ஆகியவற்றை அடையாளம் கண்டுபிடிக்கும் கேப்சாக்கள் மிக பழையவை. இனிமேல் அவை வலைதளங்களில் பயன்பட அதிக வாய்ப்பில்லை. செயற்கை நுண்ணறிவு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கேப்சா அந்தளவு வேகமாக மாறவில்லை. வெறும் எழுத்து, படம் என்று இல்லாமல் போனை குறிப்பிட்ட முறையில் அசைப்பது என உடல்ரீதியான தன்மைக்கு கேப்சாவை மாற்றினால் அதை ஏஐ அல்காரிதம் எதிர்கொள்வது கடினம் என்கிறார். ஆராய்ச்சியாளர் மௌரோ மிக்லியார்டி. இது அனைவருக்கும் எளிதான செயலாக இருக்காது என்பது உண்மை.
கூகுள், க்ளவுட்ஃபிளேர் ஆகிய நிறுவனங்கள் இணையத்தில் மக்களின் மௌஸ் நகர்வு, அவர்கள் தேடும் தகவல்கள் ஆகியவற்றை வைத்து ஒருவர் எந்திரமா மனிதனா என்று கண்டுபிடிக்கிறார்கள். இது தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலானது என டெக் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்போது கேப்சாவிற்கு மாற்றாக பிரைவசி பாஸ் என்ற தொழில்நுட்பம் புகழ்பெற்று வருகிறது. இதை பயன்படுத்தும்போது ஒருவர் மனிதரா என்பதை அறிய அவரது போனையும் கூடவே பயன்படுத்த வேண்டும். போனில் ஒருவரைப் பற்றிய தகவல் இருந்தால். அதை வலைத்தளம் பயன்படுத்திக்கொள்ளும். இந்த தகவல் வேறு எங்கும் பகிரப்படாது. இப்படி பகிரும் தகவல்கள் காரணமாக கேப்சாவை நிரப்பவேண்டியதில்லை. அதேநேரம் பாதுகாப்பு பிரச்னையும் எழாது. ஆப்பிள் போனில் பிரைவசி ஆக்சஸ் டோக்கன் எனும் வசதி பயன்படுகிறது. இந்த வசதியை மேம்படுத்த கூகுள், க்ளவுட்ஃபிளேர், ஃபாஸ்ட்லி, ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து முயன்று வருகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக