செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

 










லீக்கிங் புக்ஸ்டோர் 


தாய்லாந்து டிராமா - டி டிராமா


10 எபிசோடுகள்


மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார். 


காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்கிறார். நண்பர்கள் சேர்ந்து சமூக வலைதளத்தில் குற்றங்கள் பற்றிய நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்கள். கூடவே நூலை விற்க காவோ வென், பாட்காஸ்ட் ஒன்றையும் நடத்துகிறார். இதில் தான் படித்த நூல்களைப்பற்றி பேசி வருகிறார். 


இப்படி செல்லும் வாழ்க்கையில் அவருக்கு முன்னாள் போலீஸ்காரர், ஒருவர் வழக்கு ஒன்றின் துப்பு தருவதாக கூறி பணம் கேட்கிறார். இவரும் அதை தருவதாக கூறுகிறார்.ஆனால் அதற்குள் அவர் காரில் கொல்லப்பட்டு கிடக்கிறார். இப்படி கொல்லப்பட்டு கிடப்பது காவோ வீடு செல்லும் வழியில் என்பதால், அந்த தீப்பற்றி எரியும் காரை அணைக்க முயல்கிறான். அப்போதுதான் தெரிகிறது. இறந்துபோனவர் போலீஸ் அதிகாரி என. அவரது போனில் உள்ள தான் பேசிய தகவல்களை அழித்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுக்கிறான். போலீசும் வந்து விசாரித்துவிட்டு செல்கிறது. அப்போது அவன் கார் டிக்கியி்ல் வெட்டப்பட்ட ஆட்காட்டி விரல், கழுத்தை நெரித்துக்கொல்ல பயன்பட்ட கம்பி ஆகியவை உள்ளன. அதை போலீசுக்கு முன்னதாகவே பார்த்தவன் மறைத்துவிடுகிறான். பிறகு வீட்டுக்கு கொண்டுபோய் வைத்திருக்கிறான். 


நாவல் போட்டியில் அவனது நாவலை கோஸ்ட் என்ற பதிவாளர், கடுமையாக விமர்சிக்கிறார். தரமே இல்லாத நிறைய ஓட்டைகள் உள்ள கதை என்கிறார். இது காவோ வென்னை கோபமுற செய்கிறது. யார் அந்த கோஸ்ட் என கண்டுபிடிக்க முயல்கிறார். மேலும் கொலை வழக்கில் தன்னை மாட்டிவிட முயல்பவர் யார் எனவும் அவருக்கு புரியவில்லை. 


இந்த நேரத்தில் அரசு தரப்பின் உதவி வழக்குரைஞர் ஒருவர், காவோ வென் தான் கொலைகார ரோ என சந்தேகிக்கிறார். ஏனெனில் அதற்கான அத்தனை பொருட்களும் கொலை நடக்கும் இடத்தில் கிடக்கின்றன. குறிப்பிட்ட மர்ம நாவல்கள் கொலை நடக்கும் இடத்தில் கிடக்கின்றன. அவை இரண்டுமே டிடக்‌ஷன் புத்தக கடையில் இருந்து வாங்கப்பட்டவை. 


உளவியலாளராக இருக்கும் நபர் திருநங்கை. அவர் தன்னுடன் தங்கியுள்ள பெண்ணின் உடைகளை அணிந்து பார்த்து அதை புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார். திடீரென பப் ஒன்றில் மது அருந்தும்போது, போன் காணாமல் போகிறது. போனை திருடியவன் செக்ஸ் வெறியன். அவன் உளவியலாளரை குதப்புணர்ச்சி செய்வதோடு பணமும் கேட்டு மிரட்டுகிறான். இந்த செக்ஸ் வெறியன் சில நாட்களில் கடற்கரையில் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் அருகில் பீர் பாட்டில் ஒன்று கிடக்கிறது. இந்த பாட்டில் மது சந்தைக்கு வராத ஒன்று. இதை ஜிம் நடத்தும் முன்னாள் செக்ஸ் குற்றவாளி ஒருவர் உளவியலாளருக்கு கொடுக்கிறார். அவர் டிடக்‌ஷன் புத்தக கடைக்கு கொடுக்கிறார். அங்கு வந்து பீர் பாட்டிலை பார்க்கும் வழக்குரைஞருக்கு காவோ மீது சந்தேகம் உருவாகிறது. ஆனால் அதை கொடுத்தவர் உளவியலாளர் என்று உண்மையை கூறிவிடுகிறான். இதற்கிடையில் காவோவுக்கு கோஸ்ட் என்பவர் மர்மமாக செய்திகளை அனுப்புகிறார் என்றால், உளவியலாளருக்கு அவரின் அந்தரங்க புகைப்படங்களே எமனாகிறது. அவர்தான் தனது போனை எடுத்துவர இன்னொரு செக்ஸ் குற்றவாளியை அனுப்ப, அவன் போனைக் கொடுத்துவிட்டு தன்னை விடுதலை செய்ய நீ உதவ வேண்டும் என உளவியலாளரை மிரட்டுகிறான். 


உளவியலாளரிடம் சிகிச்சை பெற்ற இரு குற்றவாளிகள் இறந்துவிடுகிறார்கள். ஒருவர் கொலை செய்த குற்றத்தில் மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறார்.இது தொழில்ரீதியாக உளவியலாளருக்கு பெரும் அடி.


உளவியலாளரின் அறையில் தங்கியுள்ள பெண்மணி இருக்கிறார் அல்லவா, அவருக்கு ஜிம்மி்ல பயிற்சியாளராக உள்ள முன்னாள் செக்ஸ் குற்றவாளி மீது மெல்ல காதல் பிறக்கிறது. அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியும் முன்னரே தனது உடலை பகிர்ந்துவிடுகிறாள். மெல்ல ஜிம் பயிற்சியாளரும் காதலனுமான அவனைப் பற்றிய உண்மைகளை அறியத் தொடங்குகிறாள். இது ஒரு கதை. அடுத்து லான். மருந்தகத்தில் விற்பனையாளராக உள்ளவளுக்கு பிரச்னை, அவளது தம்பி. அவன், சட்டவிரோத ரவுடிக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டு அலைகிறான். இதனால் சிறைவாசம் கிடைக்கிறது. வெளியே வந்தவனை முன்னாள் செக்ஸ் குற்றவாளி எடுபிடி வேலைகளுக்கு வைத்துக்கொள்கிறான். அவன் செய்யும் கொலைக்கு பொறுப்பேற்றால், அவனது அக்கா வல்லுறவு செய்யப்பட்டதற்கு காரணமான குற்றவாளியை அடையாளம் காட்டுவதாக கூறுகிறான். அதை அப்பாவியாக நம்புகிறான். இதனால் அவனும் கொலை செய்த நண்பனோடு சேர்ந்து சிறை செல்ல நேர்கிறது. அவனை பெரும் பணம் செலவு செய்து பிணையில் வெளியே கொண்டு வருகிறாள் லான். 


உண்மையில் இந்த நான்கு நண்பர்களுக்கும் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கும் தொடர்புண்டா இல்லையா என மண்டை காய்ந்து பார்ப்போம். இறுதியாக யார் அந்த கொலைகளை செய்த வஸ்தாது என கூறுகிறார்கள். 


லான் இறுதியாக நீதிமன்றத்தில் தன்னை வல்லுறவு செய்துவிட்டதால் இனி என்ன என்று துணிந்து கொலைகளை செய்ததாக கூறுகிறார். உடல் என்பது அந்தளவு புனிதமான ஒன்று என அவர் நினைக்கிறார் போல. அதாவது கற்பு. ஆனால், அக்கா வல்லுறவு செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே அவர் பாலியல் குற்றவாளிகளை கொலை செய்யும் தீவிர முயற்சியில் இறங்குகிறார். ஏறத்தாழ அதில் தனது மொத்த வாழ்வையே அடகு வைக்கிறார். அதில் உடல் களங்கப்பட்டது என்பதை மட்டுமே குறிப்பிடுவது ஏன் என்று புரியவில்லை. 


இந்த தொடர் காட்சிரீதியான நிறைய ஆச்சரியங்களைக் கொண்டது. எனவே முழுக்கதையை வெளிப்படையாக சொன்னாலும் பார்க்கிற ஆர்வம் குறையாது. அந்தளவு காட்சிகளை அமைத்து தொடரை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இறுதிக்காட்சி நெகிழ்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. லான், தனது பெற்றோரைப் பற்றி தவறாக எண்ணவில்லை. ஆனால் அக்காவின் காதலன் அவளுக்கு ஆதரவாக இல்லை என கோபம் கொண்டு கொலைப்பழியை அவன் மீது போடுகிறாள். பெற்ற தந்தையே மகள் உடை உடுத்தும் பழக்கத்தை தவறாக பேசுகிறார். அங்கு லானுக்கு அப்பா மீது கோபம் வரவில்லை. ஆனால் காவோ அவன் தந்தை கூறியதற்காக சிறிது நாட்கள் பேசாமல் இருக்கும்போது, லானின் அக்கா தற்கொலை செய்துகொள்கிறார். அந்த சம்பவம் நடந்ததற்கு உண்மையில் யார் பொறுப்பு? யாருமே எதையும் கூறமுடியாது. 


நாயகன் காவோ பற்றி நண்பர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை லான் சொல்லும்போது சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. உண்மையில் நாயகன் குற்றவாளியை காதலி இறந்த நாளில் இருந்து தேடிக்கொண்டுதான் இருப்பான். இதை அவனது நண்பனான உளவியலாளர் ஏற்கெனவே அறிந்துகொண்டிருப்பான். அதை அவன் லானிடம் நேரடியாக கூற மாட்டான். இறுதியாக காதலியின் சகோதரி லானின் சிறை தண்டனையைக் குறைக்க நாயகன் பார் எக்சாம் எழுத முனைவான். அவனுடன் செக்ஸ் குற்றவாளி வழக்கை விசாரித்த பெண் வழக்குரைஞரும் ஒன்று சேர்ந்து கொள்வாள். காவோ, உளவியலாளர், அவனது அறைத்தோழி ஆகியோர் சென்று  தற்கொலை செய்துகொண்ட லானின் அக்காவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வருவார்கள். அதோடு தொடர் நிறைவடைகிறது. 


ஒரு குற்றச்சம்பவம் எத்தனை பேரின் வாழ்க்கையை நேரடியாக மறைமுகமாக பாதிக்கிறது என்பதை காட்சியாக நன்றாக காட்டுகிறார்கள். சிறுவயதில் நடைபெறும் பாலியல் சீண்டல், வல்லுறவு அவரை எந்தளவு சிதைத்து எதிர்காலத்தை உருக்குலைக்கிறது என்பதற்கு ஜிம் பயிற்சியாளர் வாழ்க்கை உதாரணம். 


வித்தியாசமான க்ரைம் கதைகளை தேடி பார்க்க நினைப்பவர்களுக்கானது. 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்