உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?









வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார். 


அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கையிலிருந்து மனிதர்கள் தனியாக பிரித்து தம்மை பார்க்கத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் அர்த்தம் தேடும் பயணத்தின் தேடுதலில்தான் மனிதர்கள் தம் மனதில் உள்ள தனிமை, தனித்து இருத்தல் எனும் இரண்டையும் புரிந்துகொள்கிறார்கள். அதை கடந்து வர முயல்கிறார்கள். 


சுதந்திரமான தனித்துவமான கருத்துகளைக் கொண்டு பிறருடன் இணக்கத்தோடு இருக்க முயல்கிறோம். இதில் சில சமயங்களில் அதிகாரத்திற்கு ஆதரவாகவும், ஆதிக்க சக்திகளுக்கு எதிர்ப்பாக இன்றி இணக்கமாகவும் கூட இருக்க நேரிடுகிறது. ஆனால்  இது, தவறான முறை என எரிக் ஃப்ரோம் கூறுகிறார். நாம் மனிதர்கள், கருத்துகள், அமைப்புகள் என அனைத்திற்கும் பொறுப்பேற்று குறிப்பிட்ட கருத்துகளின் படி செயல்படும்போது தனித்துவிடப்படுகிறோம். நமது கருத்துகள் அதிகாரத்திற்கு, நமக்கு மேலேயுள்ள மனிதர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று கூறமுடியாது. ஒருவரை தனித்த ஆளுமை என்று கூறுவதற்கு, அவரின் கருத்து பிறரிடமிருந்து பெரிதும் மாறியிருப்பதே காரணம். மனிதர்கள் தமது கருத்துகள் வழியாக தன்னைத்தானே பிரசவித்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள், குழப்பம், தனிமை, அக்கறையின்மை ஆகியவற்றை எளிதாக தீர்க்க முடியும். 


எரிக் ஃப்ரோம்


ஜெர்மனியில் யூத குடும்ப பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்தார். தொடக்க காலத்தில் மதப்படிப்பில் ஆர்வம் காட்டினார். ஆனால் பின்னாளில் மனப்பகுப்பாய்வில் ஆர்வம் திரும்பியது.  கூடவே கார்ல் மாக்ஸ், சோசலிச கோட்பாடுகளை ஈடுபாட்டுடன் வாசித்தார். முதல் உலகப்போர் சமயம் நீதியியல் படித்துவிட்டு பிறகு சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஜெர்மனியில் நாஜிகள் ஆதிக்கம் பெற்றபிறகு, அங்கிருந்து கிளம்பி சுவிட்சர்லாந்து சென்றார். பிறகு, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு நாடு மாறினார். கொலம்பியா பல்கலையில் மனப்பகுப்பாய்வுக்கான பிரிவைத்தொடங்கி மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார். 


ஃப்ரோமுக்கு மூன்று முறை திருமணமானது. உளவியலாளர் காரென் ஹார்னியோடு உறவு கொண்டிருந்தார். 1951ஆம் ஆண்டு அமெரிக்காவை விட்டு மெக்சிகோவுக்கு கல்வி கற்பிக்க சென்றார். பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து அமெரிக்கா திரும்பி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். தனது எழுபத்தொன்பதாவது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். 


முக்கிய படைப்புகள்


1941 the fear of freedom


1947 man for himself


1956 the art of loving



ஒருவர் தனது தனித்தன்மையை எப்போது கண்டுபிடிக்கிறாரோ அப்போதுதான் அவரது வாழ்க்கை முழுமை பெறுகிறது என எரிக் நம்பினார். சிந்தனை, லட்சியங்கள், ஆர்வங்கள் என அனைத்தையும் முயன்று பார்க்கவேண்டும். புதுமைத்திறனை செயல்படுத்த ஒருவருக்கு தைரியம் தேவைப்படுகிறது. இதில் அன்பு என்பதை எரிக் உலகம் அதுவரை புரிந்துகொண்டவிதமாக கருதி கூறவில்லை. ஒருவரின் ஆளுமையின் ஒரு பகுதியாக அன்பை உருவாக்கி வளர்க்கவேண்டும் என்று கூறினார். முழு உலகையும் தொடர்புபடுத்திக்கொள்ள மனிதன் செய்யும் அர்ப்பணிப்பான தன்மை என்று அழுத்தமாக பேசினார். 

பிறர் மீது கொள்ளும் அன்பை, காதலை அவர் மூன்று அம்சங்கள் கொண்டதாக கருதினார். பொறுப்பு, மரியாதை, அறிவு என மூன்றும் காதலில் இருப்பதாக வரையறுத்தார். இருவரும் தங்களின் தனித்துவத்தை, தனிமையை இரண்டையும் பராமரித்தால் மட்டுமே காதல் நிலவ முடியும். இதில் இருவருக்குமான மரியாதை முக்கியம். இரண்டுவிதமான ஆளுமைகள் ஒன்றாக இணைவதல்ல. அவை தனித்துவத்தோடு தனியாகவே இருக்கவேண்டும். தனிமை, தனித்துவம் என இரண்டையும் அங்கீகரிக்கும் ஒருவர்தான் பிறரை காதலிக்க முடியும். அப்படி இல்லாதவர்களின் காதல் என்பது இருவரின் தனித்துவத்தை அழித்துவிடும். அதுதானே காதல் என்று பிறர் கூறலாம். ஆனால் அதை எரிக் ஏற்கவில்லை. தன்னைத் தவிர பிற இடங்களில்தான் நல்ல விஷயங்கள் இருக்கின்றன என சிலர் நினைத்து காதலைப் பெறுகிறார்கள். இவர்களுடையது விரைவிலேயே பிரிந்துவிடக்கூடிய உறவு. 


எரிக் அட்டவணைப்படுத்திய ஆளுமை வகைகளைப் பார்ப்போம். ரிசெப்டிவ்,எக்ஸ்ப்ளோய்டிவ், ஹோர்டிங், மார்க்கெட்டிங்,நெக்ரோபிளஸ் என ஐந்து உண்டு. இதில் நேர்மறை, எதிர்மறை என இரண்டு வகையான விஷயங்களும் உண்டு. 


ரிசெப்டிக் வகையில் ஒருவர் தனக்கு கொடுப்பதை அனைத்தையும் பெறுகிறார். இவர்கள் ஒருவரை பின்பற்றுவார்கள். பிறர் கூறும் வேலைகளை ஏற்று செய்வார்கள். பக்தியும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அதிகம். இவர்களை விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்களோடு எரிக் ஒப்பிட்டு பார்க்கிறார். 


எக்ஸ்ப்ளோய்டேடிவ் வகையைச் சேர்ந்தவர்கள், தம்பி உன்னோட சட்டை அண்ணனுக்கு பிடிச்சிருக்கு. எடுத்துக்கிறேன் என்பதைப் போலத்தான். மக்களிடமிருந்து தேவையான பணத்தையும் அதிகாரத்தையும் பெறும் அசாதாரண தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஹோர்டர்கள், எதையும் லாபமாகவே பார்ப்பவர்கள். இவர்களது காதல் கூட பணக்கார அந்தஸ்தான இடத்தில்தான் இருந்து வரும்படி பார்த்துக்கொள்வார்கள். கருணையோ தாராளமான எண்ணமோ இல்லாத அதிகார வெறி கொண்டவர்கள். மார்க்கெட்டிங் மனிதர்கள். எடுத்துக்காட்டாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சொல்லலாம். உடை, நடை என அனைத்திலும் விளம்பர வெறி ஊறிப்போனவர்கள். உடை, கார், சுற்றுலா, திருமணம் என அனைத்திலும் பிராண்டு பார்ப்பார்கள். சந்தர்ப்பவாதிகள். 


நெக்ரோபிளியஸ் எனும் வகையினர் அழிவை ஏற்படுத்துபவர்கள். அரை பாதி காலியான மேல்மாடியைக் கொண்டவர்கள். நோயை, இறப்பைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுபவர்கள். கட்டுப்பாடில்லாத சமூகத்தை எதிர்த்து அடக்குமுறை தேவை சட்டம் வேண்டும் என கூறுபவர்கள். 


கார்ல் மார்க்ஸ் பற்றி வெகுசன மக்களுக்கு புரியும்படி எழுதிய உளவியலாளர் இவரே. உளவியலில் மனித தன்மை கொண்ட அம்சங்களை உருவாக்கியவர் என புகழப்படுகிறார். 


pixabay




 










கருத்துகள்