இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

 








நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர்

கிழக்கு பதிப்பகம்

341 பக்கங்கள்


காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது. 


இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார். 


இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இந்துமதம் என்பது பொதுவான மக்களின் மனதில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதற்குப்பிறகு படித்த பகுதிகளில் எல்லாமே அதை தவறாக சுயநலனிற்கு பயன்படுத்தி வயிறு வளர்க்கும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. ஒரிசாவில் தொழுநோயாளிகளுக்கு தொண்டு செய்த ஆங்கிலேயேர் அவரது பிள்ளைகள் இருவரும் மதவாத குண்டர்களால் எரித்து கொல்லப்படுவது இதற்கு சிறு உதாரணம். சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தி கொல்வதை குஜராத் முதல்வரான மோடி, தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் சிறப்பாக செய்து வந்தார். அதை அவரது கட்சி ஆட்களே கூட மனசாட்சி உறுத்தினாலும் தடுக்க முடியாது திணறினர். பிறகு அவர் நாட்டின் பிரதமர் ஆனபிறகு படுகொலைகள், பசுமாமிச கூட்டு கொலைகள், கலவரங்கள் பரவலாக நடைபெறத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் நடைபெறும் மதவாத கலவரங்களை அன்றைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவே தனது உரையில் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 


இன்றைய டிஜிட்டல் உலகில் ஆர்எஸ்எஸ் அதன் அரசியல் கட்சியான பாஜக, ஏராளமான போலிச்செய்திகளை பரப்பிவருகிறது. ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி  மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இதைப் பற்றிய நிறைய உண்மைகளை நூல் குறிப்பிடுகிறது. குறிப்பாக இந்து பெண்களை நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்தும் பிரசாரம் உட்பட. சமூக வலைதளங்களை காசு கொடுத்து பெற்று அதை தங்களது கருத்தியலைப் பரப்பும் சாதனமாக பாஜக பயன்படுத்தி வருகிறது. இதில் பரப்பப்படும் ஏராளமான போலிச்செய்திகளுக்கு மக்கள் அடிமையாகி வருகிறார்கள். அதாவது மெல்ல நம்பத் தொடங்குகிறார்கள். தனக்குள் ஆன்மிக தன்மை உருவாகி வருவதாக கூறிய எனது நண்பரும் கூட முஸ்லீம்கள் நிறைய பிள்ளைகள் பெறுகிறார்களே என அறியாமையுடன் கேள்வி எழுப்பியது அதிர்ச்சி அளித்தது. ஆனால் சசிதரூரின் நூலை முழுமையாக படித்தவுடனே இந்துத்துவா என்ற கருத்தியலை எப்படி குறுகிய மனத்துடன் கெட்டநோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என அறிந்தவுடனே நம்மை வீழ்த்தும் மதவாத பின்னலை எளிதாக அடையாளம் கண்டுவிட முடிந்தது. 


இந்துமதம் என்றால் நல்ல விஷயங்கள்தான் இருக்கிறது என்று ஆசிரியர் கூறவில்லை. அதன் இழிவுகள் பற்றியும் கவனத்தில் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்துமதம், அதன் தொன்மை அம்சங்கள், நிறுவன மதங்களோடு ஒப்பிடுகையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், மதத்தையொட்டி நடைபெறும் அரசியல், குதர்க்க வாதங்கள் என அனைத்தையும் தொட்டுச்செல்கிற அற்புத நூல்தான் இது. நூலில் ஆசிரியர் எழுதிய பிற நூல்களும் கூட உதாரணத்திற்கு எடுத்தாளப்படுகின்றன. அவற்றையும் வாசகர்கள் படிக்கலாம். இதெல்லாம் இந்துமதம் சார்ந்த தெளிவை பெறுவதற்காகவே. சசிதரூர் தனது அனுபவத்தின் வழியாக இந்துமதம் என்பதை எப்படி அறிந்திருக்கிறார் என்பதை படித்தபடியே, அவரின் அறிவு விரிவானபிறகு இந்துமதத்தை எப்படி பார்க்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. அந்த வகையில் இந்துமதத்தை ஓரளவுக்கு தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர் திரு.சத்யானந்தன் தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார். 


கோமாளிமேடை டீம்  


https://www.udumalai.com/naan-ean-indhuvaga-irukiren.htm

கருத்துகள்