இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!








 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்!


இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி. 


வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே உணவு இல்லாமல் பழங்களை சாப்பிடசொல்லி வரும் நிலையில், இதுபோன்ற வசதிகளுக்கு வறுமையில் உள்ள பெற்றோர் என்ன செய்வார்கள்?


ஜோசப் ரோன்ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு, வறுமை பற்றிய ஆய்வறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் 2017ஆம் ஆண்டு 1.55 மில்லியனாக இருந்த வறுமையில் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது ஐந்து மடங்கிற்கும் அதிகமாக பெருகியுள்ளதாக கூறியுள்ளது. மூன்றில் இரண்டு சதவீத வயது வந்தோர் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வறுமை நிலையை டெஸ்டிடியூட் என்று குறிப்பிடுகிறார்கள். குழந்தைகள் அணிய ஆடையின்றி பெற்றோரின் ஆடைகளை அணியத் தொடங்கி வருகின்றனர். உணவுவேளையில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர். 


இந்திய வம்சாவளி புகழ் ரிஷி சுனக், இந்த நேரத்தில் நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கான வரிகுறைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவருக்கு காசு கொடுப்பவர்களுக்கு விசுவாசமாக வேலை செய்கிறார். அப்படித்தானே? இங்கிலாந்தில் உள்ள நூலகங்கள், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பொது இடங்களில் மக்கள் குளிரைத் தாங்கி தங்களை கதகதப்பாக்கிக்கொள்வதற்கான வசதிகளை அரசு மெல்ல செய்யத் தொடங்கியுள்ளன. வீட்டில் ஹீட்டர்வசதி செய்ய முடியாதவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள இதுவே வழி. 


டோரி கட்சி அரசியல்வாதிகள், குழந்தைகள் உணவுக்கு செலவிடமுடியாத பெற்றோர் போன்களுக்கு எதற்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் என அரிய கேள்விகளை அடுக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாகவே டோரி கட்சியினர் நாட்டில் மெல்ல பரவி வரும் வறுமை நிலையை மறைக்க முயன்று வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள், அல்லது செலவு செய்யாமல் தேமேயென்று இருக்கிறார்கள் என மக்கள் மீதே பழியைத் தூக்கிப்போட்டு வருகின்றனர். குழந்தைகள் வறுமையில் வீழ்வதால் இங்கிலாந்தில் ஏற்படும் பொருளாதார சுமை 47 பில்லியன் டாலர்களாகும். வறுமை மட்டுமல்ல வேலையின்மையும் கூட அரசுக்கு பின்னாளில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்பதே உண்மை. 


பிரான்சஸ் ரியான் 


கார்டியன் வீக்லி

pixabay

கருத்துகள்