இங்கிலாந்து ஊடகங்கள் ஈராக் போரின் போது நடந்துகொண்ட முறை! - நூல் விமர்சனம்
வாட் தி மீடியா ஆர் டூயிங் டு அவர் பாலிடிக்ஸ்
ஜான் லாய்ட்
ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜான் லாய்ட் எழுதிய நூல். தனது செய்தி சேகரித்தலுக்காக முக்கியமான விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய இந்த நூல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊடகங்கள், ஈராக் போரின்போது எப்படி அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டன. அதன் விளைவுகள் என்ன என்பதை ஆராய்கிறது.
அரசின் பணத்தில் இயங்கும் இங்கிலாந்து ஊடகமான பிபிசி, ஈராக் போரின் போது எடுத்த நிலைப்பாடு, அதன் இயக்குநர்கள், தலைவர்கள் எப்படி எதுமாதிரியான கருத்தியல் கொண்டவர்களாக இருந்தனர். அரசியல் ரீதியாக ஊடகங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், கருத்தியல், நிர்வாக ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என பல்வேறு விஷயங்களை நூல் பேசுகிறது. இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஊடகங்களை, அங்கு நடக்கும் ஊடக அரசியல் பற்றி பேசிவிட்டு உடனே இங்கிலாந்து நாட்டின் ஊடக பிரச்னைகளுக்கு ஆசிரியர் திரும்பிவிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை தனியார் தொழிலதிபர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நேரடியான, மறைமுகமான ஆதரவை அளிக்கின்றனர். இதை பெரும்பாலும் மறைக்க முடிவதில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட செய்தியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு எந்த பேட்டியும் கிடையாது என கூறும் தர்மசங்கட சிக்கல்களும் எழுகின்றன. கரண் தாப்பர் என்ற செய்தியாளருக்கு பாஜக கட்சி இதுபோல தடை விதித்து அதை மறைமுகமாக அரங்கேற்றியது. இதை முன்வைத்து பார்த்தால் உலகளவில் ஃபாக்ஸ்டிவியை நடத்துகிற ரூபர்ட் முர்டோக் முக்கியமானவர். இவர் வலதுசாரி கருத்தியலை தனது ஊடகங்கள் வழியே பரப்புகிறார். அமெரிக்காவில் டிரம்பிற்கு ஆதரவான கருத்து கொண்ட டிவி குழுமம் இது. பிபிசி அரசு ஊடகம் என்றாலும் அதன்செயல்பாடுகள் அதை இயக்குபவர்களின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது. அதேசமயம் ரூபர்ட் முர்டோக் போன்றோரின் தீவிர வணிக நோக்கம் கொண்ட நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி சேனல்கள் சமூகத்தை எப்படி மாற்றுகின்றன என்பதையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஊடகங்களின் நோக்கம் சமூகத்தில் உண்மை இருந்தால் அதை கண்டுபிடிப்பது என பகடியாக கூறுகிறார். நிலைமை அப்படித்தான் மாறிவிட்டது. இங்கிலாந்தில் தனியார் ஊடகங்களின் பெருக்கம் எப்படி வாடிக்கையாளர்களை செய்திகளை நுகர்வுக்கு உள்ளாக்கின என்பதையும் கூறுகிறார். கிசுகிசு, சினிமா தகவல்கள், குற்ற சம்பவங்கள் என தனியார் ஊடகங்கள் வருமானத்தை பெருக்கின. நாளிதழ்களின் ஆதரவைப் பெற அன்றைய ஈராக் போர் கால அரசியல்வாதிகள் முயன்ற செய்தி ஆச்சரியமாக உள்ளது. கார்டியன்,இன்டிபென்டன்ட், டெய்லிமிரர், திசன், தி டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் வெவ்வேறு கருத்தியல் கொண்டவை. இவற்றைப் பற்றி பேசும் ஆசிரியர் அவற்றின் செய்தி வழியே அதன் கருத்தியலை வெளிப்படையாக கூறுகிறார்.
ஊடகங்கள் அரசியலில் எந்தளவு வலிமையோடு உள்ளன என்பதை அறிய இந்த நூல் வாசகர்களுக்கு உதவும்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக