0.1 சதவீத உண்மையைக் கண்டுபிடிக்க போராடும் குற்றவியல் வழக்குரைஞர்!

 










99.9 கிரிமினல் லாயர்


ஜே டிராமா 


இருபது எபிசோடுகள் - இரண்டு சீசன்கள்



குற்றவழக்குகளில் உள்ள உண்மையை கண்டுபிடித்து அரசு தரப்பை அடித்து நொறுக்கு கிரிமினல் வழக்குரைஞரின் கதை. மொத்தம் இருபது எபிசோடுகள். இரு சீசன்களையும் சேர்த்து...


ஜப்பானில் கிரிமினல் வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. தப்பிக்கும் ஆட்களின் சதவீதமே 0.1தான். இதைத்தான் வழக்குரைஞர் மியாமா சவாலாக எடுத்துக்கொண்டு சாதிக்கிறார். போலியாக சாட்சிகளை தயாரித்து சரிவர விசாரிக்காமல் குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நீதித்துறைக்கு எதிராக தனியாக நின்று போராடுகிறார். இந்த போரில் மெல்ல மதார்மா நிறுவனத்தையே ஈடுபடுத்துகிறார். 


மதார்மா நிறுவன தலைவருக்கும், மியாமாவுக்கும் பழைய தொடர்பு ஒன்று இருக்கிறது. அது என்னவென்று இருவரும் ஒருகட்டத்தில் அறிகிறார்கள். ஆனால் அதை வெளிப்படையாக கூறுவதேயில்லை. மதார்மா நிறுவன தலைவரே நேரடியாக மியாமாவை தனது நிறுவனத்தில் சேர சொல்லுகிறார். சம்பளமும் கூட அதிகமாக பேசுகிறார். அன்றைய சூழலில் மியாமா வழக்கில் வென்றாலும் சம்பளம் என்பது குறைவாகத்தான் கிடைக்கிறது. அதில்தான் அவரும், உதவியாளரும் நண்பருமான ஆகாசி வாழவேண்டும். இந்த நிலையில் மதார்மா, நிறுவன வழக்குகளை மட்டுமே நடத்தி வந்தது, புதிதாக குற்றவழக்குகளை நடத்த மியாமாவை நம்பி  புதிய பிரிவை உருவாக்குகிறது. அதற்கு தலைவராக சடா வருகிறார். இவருக்கு வாடிக்கையாளரின் திருப்தி, அவர் மூலமாக நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபமே முக்கியம். கார்ப்பரேட் நிறுவன பிரிவில் இருந்தவரை குற்றவழக்கு பிரிவு தலைவராக மாற்றுகிறார்கள். ஆனால் அவருக்கு இந்த மாற்றம் பிடிப்பதில்லை. ஆனால் வேறுவழியில்லை என இ்ங்கு வருகிறார். 


சடாவுக்கு வழக்கு என்றால் அதில் உண்மை முக்கியமில்லை. தன்னை நம்பிய வாதியை காப்பாற்றவேண்டும். அதுவே முக்கியம். ஆனால் மியாமாவுக்கு வழக்கில் உண்மைதான் முக்கியம். வாதியிடம் உண்மை இல்லை என்றால் அவரே விலகிக் கொண்ட வரலாறு கூட உண்டு. எனவே இருவருக்கும் கருத்தியல் ரீதியாக முட்டிக்கொள்கிறது. மியாமாவை சடாவால் தடுத்து நிறுத்தவே முடிவதில்லை. காரணம் வழக்கு என்றால் வெளியில் சென்று வேலை செய்யும் விதம் என அனைத்துமே வேறுவிதமாக இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல. அந்த பிரிவுக்கு வந்த பிற ஊழியர்களுக்கும் பீதியாகிறது. 


மியாமா, கொலை நடந்த இடத்திற்கு செல்வது, வாதியை சந்தித்து ஒட்டுமொத்த வாழ்க்கையை கேட்டு அறிவது, குற்றத்தை திரும்ப மறு உருவாக்கம் செய்வது என தனித்துவமாக வேலை செய்பவன். முதல் வழக்கில் அலுவலகத்தில் அவன் செய்யும் மறு உருவாக்க காட்சியை மொத்த பணியாளர்களுமே பார்த்து வியப்பார்கள். அந்த வழக்கு தொடங்கி ஒட்டுமொத்த அவனது பிரிவினரும் அவன் சொல்படி கேட்டு நடக்க ரெடியாகிவிடுவார்கள். 


வழக்கு என்றால் அதில் அவன் காட்டும் தீவிரமும், உண்மையைக் கண்டுபிடிக்க காட்டும் ஆராய்ச்சியும் அதுவரை யாருமே செய்யாத ஒன்று. குறிப்பாக அரசு வழக்குரைஞர்களுக்கு மியாமாவின் சாட்சி ஆதாரங்களுக்கும் வழக்குக்கும் உள்ள தொடர்பை அறிவதற்குள் அந்த வழக்கு முடிந்துபோயிருக்கும். 


மொத்த இருபது எபிசோடுகளில் மியாமாவின் அப்பா பற்றிய வழக்கு, அதைப்போன்றே மூன்று பெண்கள் கொல்லப்படும் வழக்கு, ஒசாகியின் தம்பி பற்றிய வழக்கு, சடா  மீது போடப்படும் நிதிமோசடி வழக்கு ஆகியவை காட்சியாக காணும்போது சுவாரசியமாக இருந்தது. சற்று கடினமான வழக்கு என்றால், சமையல் கலைஞர் தனது மனைவியை அடித்து கொன்று தீ வைத்த வழக்கு. இதை பார்வையாளர்கள் புரிந்துகொள்வதே கடினம். கூடுதலாக இது வழக்கை திரும்ப தொடங்கி மறுவிசாரணை செய்யக்கோருகிற போராட்டம். இதைப்போலவே இன்னொரு வழக்கு. இனிப்பில் விஷம் கலந்து அரசியல்வாதி கொல்லப்படுவது. தலையே சுற்றச்செய்யும் அளவுக்கு இதில் சிக்கல்கள் உண்டு. மியாமா கூட இதில் ஓரிடத்தில் தடுமாறி பிறகு சுதாரித்து வாதியை தண்டனையில் இருந்து காப்பாற்றுவார். 


மியாமாவின் அணுகுமுறையை மதார்மா நிறுவனர் மட்டுமே புரிந்துகொள்கிறார். காரணம், அவரது நண்பருக்கு நேர்ந்த அநீதி. 


குற்றவழக்கு தொடர்பான தொடர்தான். ஆனால் தொடரில் நகைச்சுவைக்கென ஒரு பட்டாளமே இருக்கிறது. மியாமாவின் நண்பன் ஆகாசி, அடுத்து, மியாமாவின் ஆப்பிரிக்க சகோதரன் உணவகத்தில் வரும் பாத்திரங்கள், குறிப்பாக மியாமாவை ஒருதலையாக காதலிக்கும் பாப் பாடகி. இவர்களால்தான் தொடரே சற்று நெருக்கடி குறைந்து பார்க்க நன்றாக இருக்கிறது. குற்றங்களை தீர்ப்பதற்கான சில குறியீடுகளையும் இயக்குநர் நகைச்சுவை பாத்திரங்களில் வைத்திருக்கிறார். அதெல்லாம் நல்ல ஐடியாக்கள்தான். பார்க்கலாம் ரசிக்கலாம். 


ஜப்பான் நாட்டில் உள்ள நீதித்துறையின் அரசியல் பிரச்னைகள், ஊழல்கள் ஆகியவை வழக்குரைஞர்கள், நீதிபதிகளை நெருக்கடியில் தள்ளுகின்றன. இதன் காரணமாக நீதியை வேண்டி வரும் எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதை காட்சி பூர்வமாக நேர்த்தியாக பதிவு செய்த தொடர் என இந்த கிரிமினல் லாயரை கூறலாம். 


கோமாளிமேடை டீம் 

https://asianwiki.com/99.9_Criminal_Lawyer


கருத்துகள்