அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

 












அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள். 


பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு 800 பக்கங்களை ஸ்கேன் செய்து வருகிறார்கள். இப்படி குறிப்பிட்ட முறையில் ஸ்கேனாகும் பக்கங்களை சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் என்ற பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் நூல்கள், பேச்சுகள், வார இதழ்கள், நாளிதழ்கள், ஒலி கோப்புகள், கையெழுத்து பிரதிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் பக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு நூலகங்கள், ஆவணப்பக்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். பதினைந்து மொழியில் உள்ள நூல்கள் உள்ளன. அனைத்துமே பொதுவுடைமதான். யார் வேண்டுமானாலும் இதை எடுத்து படிக்கலாம். பயன்படுத்திக்கொள்ளலாம். பிறருக்கும் பகிரலாம்.


இந்தியாவில் 1.4 பில்லியன் மக்களுக்கு ஐம்பதாயிரம் பொது நூலகங்கள் உள்ளன என ராஜா ராம்மோகன்ராய் லைப்ரரி பௌண்டேஷன் தகவல் கொடுக்கிறது. பொது நூலகத்தை பிரபலப்படுத்த இந்திய அரசு மேற்சொன்ன அமைப்பை உருவாக்கியது. மாநில தலைநகரிலுள்ள நூலகத்தில் எழுபத்தி ஏழாயிரம் நூல்கள், மாவட்ட நூலகத்தில் இருபத்து நான்காயிரம் நூல்கள் என இருக்கின்றன. பொது நூலகங்களில் உள்ள நூல்களை பராமரிப்பதில் அலட்சியம் நிலவுகிறது. இதன் விளைவாக ஏராளமான நூல்கள் பழுதுபட்டு அழிந்துவருகின்றன. இணையத்தில் ஸ்கேன் செய்து வைப்பதன் மூலம் நூல்களை உலகிலுள்ள உள்ள ஆய்வாளர்கள், மாணவர்கள் என எவரும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்காவில் உள்ள கார்ல் மலாமட் என்பவர் லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பான பப்ளிக் ரிசோர்ஸ் என்பதை நிறுவி காந்தியின் சுயராஜ்ய நூல்களை  பொதுவுடைமையாக மாற்றியிருக்கிறார். இந்திய அரசு பொதுவுடைமை ஆக்கிய பல்வேறு நூல்களை இவர் டிஜிட்டல் வடிவில் மாற்றியுள்ளார். கார்லுடன் தொழில்நுட்ப வல்லுநரான ஓம்பிரகாஷ் ஹெச் எல் இணைந்து கம்யூனிட்டியாக செயல்பட்டு நூல்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி வருகிறார். 


சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டத்திற்கு, பப்ளிக் ரிசோர்ஸ் அமைப்பு நிதியுதவி அளிக்கிறது. இப்படி பதிப்புக்கும் நூல்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் வாசிக்க முடியும் என்பதே நம்பிக்கை அளிக்கிற செயல்பாடு. இந்தியாவில் நூலகராக மாற்றுத்திறனாளிகளாக  உள்ளனர். அதை குறைகூற ஏதுமில்லை. ஆனால், அவர்களால் மனத்தளவில் ஏற்றுக்கொண்ட பணியை செய்யும் தகுதி, திறமை கொண்டவர்களாக இருப்பது முக்கியம். இவர்களில் பெரும்பாலும் தாழ்ந்த மனப்பான்மையும் ஆணவமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது மேல்சாதி மனநிலையில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களை உள்ளே விடக்கூடாது என உறுதியாக வன்ம மனதுடன் நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் இணையம் மட்டுமே சற்று நம்பிக்கை அளிக்கிறது. மக்களது நன்மைக்காக தங்களை எரித்துக்கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நம்பிக்கை அளிக்கிற ஒன்று.



அனன்யா

எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ


மூலக்கட்டுரையை தழுவியது. 


ஃப்ரீதமிழ்இபுக்ஸ் குழுவைச் சேர்ந்த திரு.அன்வர் சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டத்திற்காக ஏராளமான நூல்களை ஸ்கேன் செய்து பங்களித்து உள்ளார் என கணியம் சீனிவாசன் கூறினார். அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.....


கருத்துகள்