ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

 








உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 

அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார். 


சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந்த மருத்துவர் ஜோசப் பிரியூவர், நோயாளிகளிடம் அவர்களின் மோசமான நினைவுகளை தன்னுணர்வற்ற நினைவிலிருந்து கூற வைத்து மனதில் சற்று நிம்மதியை வரவைத்துக்கொண்டிருந்தார். இந்த முறையில் அன்னா ஓ என்ற பெண்ணுக்கு மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் பெரிதும் குறைந்தது. இவருக்கு வாதம் மற்றும் ஹிஸ்டீரியா பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. 


பிரியூவரும், ஃப்ராய்ட் என இருவரும் இணைந்து ஹிஸ்டீரியா, மனப்பதற்றம், அதீத பயம் ஆகிய குறைபாடுகளுக்கு தீர்வு தரும் விதமான சிகிச்சை முறையை உருவாக்கினர். இதைப்பற்றி, 1895ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஸ்டடிஸ் இன் ஹிஸ்டீரியா என்ற அறிக்கையை வெளியிட்டனர். மனநல பிரச்னைகள் உருவாவதில் பாலினத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என ஃப்ராய்ட் கருதினார். இந்த கருத்தில் பிரியூவருக்கு ஏற்பில்லை. எனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஃபிராய்ட் பெரிதாக கலங்கவில்லை. தான் நம்பிய கருத்துகளை தொடர்ச்சியாக அவர் ஆய்வுசெய்யத் தொடங்கினார். 


தன்னுணர்வற்ற மனத்தின் வெளிப்புறமான தலையாட்டி பொம்மைதான் தினசரி வாழ்க்கையில் ஈடுபடும் தன்னுணர்வு மனம் என ஃப்ராய்ட் கருதினார். தன்னுணர்வற்ற மனமே ஒருவரின் இயல்புகளை, பழக்க வழக்கங்களை உருவாக்குகிறது என்று கருதினார். வலிமையான, வேதனையான நினைவுகள் தன்னுணர்வற்ற மனத்தில் பதிவாகிறது. அதிலிருந்து தன்னுணர்வு மனம் தேவைப்படும்போது சில விஷயங்களை எடுத்துக்கொள்கிறது என்று ஃப்ராய்ட் கருதினார். மருத்துவம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டு வந்த மருத்துவர் எர்னஸ்ட் ப்ரூக்கின் ஆய்வு அணுகுமுறை, அவரை கவர்ந்தது. உடலிலுள்ள சக்தி என்பது முழுக்க தீர்ந்துபோகாத ஒன்று. அதை ஒருவர் பயன்படுத்தாதபோது சேமிக்கப்பட்டு பிறகு மெல்ல வேறு ஒரு செயலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த கருத்தை எர்னஸ்ட் கூறினார். இதை அப்படியே எடுத்துக்கொண்ட ஃப்ராய்ட் அதை மனதிற்கும் பொருத்திப்பார்த்தார். மனதிலுள்ள ஒரு கருத்து அந்த காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்று, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருந்தாலும் கூட அது அப்படியே அழிவதில்லை. மாறாக தன்னுணர்வு நிலையில் இருந்து தன்னுணர்வற்ற நிலைக்கு சென்று சேமிக்கப்படுகிறது. இதை ரெப்ரஷன் என ஃப்ராய்ட் குறிப்பிட்டார். இதில், மோசமான விபத்துகள், பாலியல் வல்லுறவு, சீண்டல், பள்ளிகால சித்திரவதை, கேலி, கிண்டல் ஆகியவையும் உள்ளடங்கும். தன்னுணர்வற்ற நிலைக்கு மேற்சொன்ன சம்பவங்கள் சென்றுவிட்டால் ஒருவரின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் நேராது. 


தன்னுணர்வற்ற நிலையில் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட கருத்துகள் சேமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏற்படும் தொடர்ச்சியான முரண்பாடுகளால், தொடர்புடையவருக்கு மன அழுத்தம், சோர்வு, பதற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. சுயமுனைப்பு காரணமாகவே ஒருவர் அத்தனைக்கும் ஆசைப்படுகிறார். நடைமுறை தாண்டியும் திட்டமிடுகிறார். இவற்றில் பகுதிதான் நிறைவேறுகிறது.மீதியுள்ளவை அனைத்துமே நிராசைதான்.இந்த நேரத்தில் மிகை தன்முனைப்பு ஆற்றலாக பெற்றோர், சமூகம் ஆகியவை உள்ளன. இவை ஒருவரை அவரின் ஆசையைத் தாண்டிய இடத்திற்கு நெருக்கித் தள்ளுகிறது. 


ஃப்ராய்ட் நோயாளிக்கு கொடுத்த சிகிச்சை வாரத்திற்கு சிலமுறை என்று ஆண்டுகள் வரை நீளும். இது கூட நோயின் தன்மையைப் பொறுத்ததுதான். நோயாளி தனக்கு நேர்ந்த அனுபவங்களை படுக்க வைக்கப்பட்ட சோபாவில் சாய்ந்தபடியே சொல்லுவார்கள். அவர்கள் கூறுவதிலிருந்து தகவல்ளைப் பெறும் ஃப்ராய்ட் அதை வைத்து நோயின் அறிகுறிகளை அறிகிறார். பிறகு அதை நோயாளிகளின பங்கேற்பு மூலமே தீர்க்க நினைக்கிறார். இந்த வகையில் கனவுகளின் விளக்கம் என்ற கொள்கையை வெளியிட்டார். ஒருவர் இரவில் தூங்கும்போது காணும் கனவில் வரும் அடையாளங்கள், குறியீடுகள் அவரது வாழ்க்கை பற்றியது என ஃப்ராய்ட் கூறினார். தன்னுணர்வற்ற மனநிலையில் உள்ள ஆசைகளே, கனவில் குறியீடுகளாக வருகின்றன என்றார். கனவில் நிர்வாணமாக நிற்பது போல ஒருவர் நினைத்தால், அதற்கு அவர் பயந்த மனநிலையில் உள்ளார் என்று பொருள். சுரங்கம், மூடிய அறை, குறுகிய இடங்களில் நடப்பதுபோன்ற குறியீடுகள், அவர் அடக்கி வைக்கப்பட்ட பாலியல் ஆசைகளை கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். 


இதுபோலவே ஒருவர் தான் சொல்ல நினைப்பதற்கும், ஆனால் கூறிய வார்த்தைகளுக்கும் வேறுபாடுகள் இருப்பதுண்டு. அதாவது, நாக்கு குழறி ஏதாவது கூறிவிடுவதுண்டு. இது பொது இடங்களில் சங்கடங்களை ஏற்படுத்தலாம். ஆனால் இப்படி கூறுவது கூட தன்னுணர்வற்ற மனத்தின் செயல்தான். அது மனதில் அடக்கியுள்ள ஆசைகளின் வெளிப்பாட்டை கூறுகிறது என ஃப்ராய்ட் விளக்கினார். இந்த கொள்கையை ஃப்ரீ அசோசியேஷன் என்று அழைத்தார். இதை மேம்பாடு செய்தவர், உளவியலாளர் கார்ல் ஜங். 


ஒருவர் பிறருக்கு தெரியாமல் தனது மனதில் ஆசைகளை மறைத்து வைத்தால், அது கோபம், மனப்பதற்றம், மதுவுக்கு அடிமையாதல், போதைப்பொருட்களை பயன்படுத்துதல் என பல்வேறு விதமாக மாறும். முன்னர் கூறியதுபோல உடலிலுள்ள ஆற்றல் வேறு வடிவத்திற்கு மாறி வெளிப்படும். 

ஃப்ராய்ட் தனது கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இவர்கள் பின்னாளில் கற்ற கருத்துகளை சற்றே மாற்றி மூன்று குழுக்களாக பிரிந்தனர். முதல் குழு, ஃப்ராய்டியர்கள், இரண்டாவது கிளெய்னியன்கள், மூன்றாவது நியோ ஃப்ராய்டியர்கள். இன்று வரையிலும் ஃப்ராய்டிய உளவியல் கொள்கைகள் உளவியல் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 


istock

adobe stock















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்