உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப கலகத் தலைவன் லினஸ் டோர்வால்ட்ஸ்! - சாப்ட்வேர் ரெபல் நூல் விமர்சனம்
லினஸ் டோர்வால்ட்ஸ் - சாஃப்ட்வேர் ரெபல்
88 பக்கங்கள் கொண்ட சிறுநூல். இலவச மென்பொருள் இயக்கம், அதன் நோக்கம் பற்றி கூறுவதோடு பின்லாந்தில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக ஒருவரின் சுயசரிதை என்பது அவரின் பலங்களை விஸ்வரூபமாக காட்டி பலவீனங்களை கீழே அமுக்குவதுதான். இந்த நூலில் லினஸ் பற்றிய பெரிய ஆச்சரியங்கள் ஏதுமில்லை. அவர் லினக்ஸ் என்ற ஓஎஸ்ஸை உருவாக்கி இலவச இயக்கமுறையாக இணையத்தில் பதிவிடுகிறார். இதை கோடிக்கணக்கான நிரலாளர்கள் மேம்படுத்துகிறார்கள். அதன் வழியாக லினக்ஸ் குழுவினர் உருவாகிறார்கள். இவர்களே இலவச மென்பொருள் என்பதை பின்னாளில் வளர்த்தெடுக்கிறார்கள்.
இந்த நூலில் நாம் என்ன படித்து தெரிந்துகொள்ளலாம்? லினஸ் டோர்வால்ட்ஸ் தான் கோடிங் எழுதிய லினக்ஸை காசுக்கு விற்றால் அவர் தனி ஜெட் விமானம் வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. எதனால் அவர் வணிகநோக்கில் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று நூல் பேசுகிறது. நூலில் பில்கேட்ஸ் மீதான பகடி பக்கத்திற்கு பக்கம் இருக்கிறது. அதிலும் அவரைப் பற்றி லினஸ் சொல்வது தனிவகை.
இலவச மென்பொருட்கள் எதனால் உலகிற்கு தேவை, அதன் பயனாக கிடைப்பது என்ன என்பதை லினஸ் டோர்வால்ட்ஸ் எளிமையாக விளக்கியிருக்கிறார். அவரது நோக்கம் என்பது மென்பொருட்களை எழுதுவதுதான். அவர் இறுதிவரை மார்கெட்டிங் ஆளாக மாறவில்லை. அதனால்தான் இன்றுவரை மதிக்கப்படும் டெக் வல்லுநராக இருக்கிறார்.
கலகத்தலைவனான லினஸ் பற்றிய நூலை இன்டர்நெட் ஆர்ச்சீவில் தரவிறக்கி படிக்கலாம். இலவச மென்பொருட்கள், கட்டற்ற மென்பொருட்கள் என இரண்டுமே தனித்தனியான கருத்தியல்கள். இரண்டும் ஒன்றல்ல. அவற்றைப் பற்றி தொடக்கநிலையில் புரிந்துகொள்ள நூல் உதவுகிறது. நூலின் பின்புறத்தில் நிறைய நூல்கள் மேற்கோள்களாக உள்ளன. அவற்றை வாசகர்கள் படிக்கலாம்.
கணியம்.காம், ஃப்ரீதமிழ்இபுக்ஸ்.காம் ஆகிய வலைத்தளங்களும் அதன் பின்னாலுள்ளவர்களும் கூட லினஸ் டோர்வால்ட்ஸின் செல்வாக்கினால் இயங்கத் தொடங்கியவர்கள்தான்.
கோமாளிமேடை டீம்
getty images
கருத்துகள்
கருத்துரையிடுக