நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

 








கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது. 


நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருபக்க சார்பு, சாதி இழிவு என காரணங்கள் இருக்கலாம். வேலையை இழந்த பணியாளர் அதை எதிர்மறையாக எடுத்துக்கொண்டால் வருத்தப்படுவார். குடியில் வீழ்வார். முன்னாள் அலுவலக மேலாளர், சகாக்கள் வரை வசைபாடலாம். தன்னை திறமையற்றவர் என நினைக்கலாம். இதில் இன்னொரு பார்வை, சதி செய்து வேலையை விட்டு நீக்கினாலும் மற்றொரு வேலைக்கு முயற்சி செய்து அதில் சாதிப்பவர்கள் உண்டு. அப்படி யோசித்தால் அவருக்கு பெரிய வருத்தங்கள் இருக்காது. புதிய வேலையைப் பெற தன்னை எப்படி வளர்த்திக்கொள்ளவேண்டும் என அந்த திசை நோக்கி நகர்வார். 


ஆனால் நம்பிக்கை துரோகிகள் நிறைந்த உலகில் வருத்தம், வலி, வேதனை என விழுந்து அஞ்சலை சோகப்பாட்டு பாடி எழுபவர்களே அதிகம். எழ முடியாமல் இறந்துபோனவர்களும் உண்டு. பைனாப்பிள் எக்ஸ்பிரஸின் அய்தலக்கடி பாடலை பாடியபடியே எழுந்து சாதித்தவர்களும் உண்டு. காரன் ஹார்னி என்ற உளவியலாளர், வலி வேதனை உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா, அது ஒன்றும் பிழையல்ல. வாழ்க்கையின் ஒருபகுதிதான் என்று கூறினார். அப்படியும் பார்க்கலாம். 


எழுபது எண்பது கால வங்காள கதைகள் போல துயரங்கள் முடிவில்லாமல் நீண்டாலும் அதை ஆராய்ந்து பார்க்கும் கோணத்தை மட்டும் மாற்றிக்கொண்டால் போதும் வலி வேதனை இருக்காது என எல்லிஸ் கூறினார். தனது நோயாளிகளுக்கு இந்த முறையில் அவர் சிகிச்சை அளித்தார். சிலர் வாழ்க்கையில்  நான் தனியாகவே இருக்கிறேன். அதுதான் என் விதி. எனக்கு எதுவுமே ஆசைப்பட்டபடி அமையவில்லை. நினைத்த விஷயங்கள் அத்தனையும் படுதோல்வி என்று சோகமாக புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இப்படி எதிர்மறையான கருத்துகளை தனது வாழ்வின் அனைத்து சம்பவங்களிலும் புகுத்துவதால் அதில் உள்ள நல்ல விஷயங்கள் எதுவுமே தெரியாமல் போகிறது. இதை அவர்கள் உணர மாட்டார்கள். தோல்விகளே நடந்துகொண்டிருந்தால் ஒருவர் திடீரென வெற்றி கிடைத்தால் கூட நம்ப மாட்டார் அல்லவா அதே மனநிலைதான். 


ஆல்பெர்ட் எல்லிசின் ரெப்ட் சிகிச்சை மனநிலையை மாற்றுவதற்கு உதவியது. அறுபது எழுபதுகளில் உளவியல் வட்டாரத்தில் புகழ்பெற்ற சிகிச்சை முறையாக இருந்தது.   ஆல்பெர்ட் எல்லிஸ் அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா வணிகர். அம்மாவிற்கு பைபோலார் மனநல குறைபாடு இருந்தது. எனவே, தனது மூன்று சகோதரர்களை எல்லிஸ்தான் கவனித்து வளர்த்தார். பாலினம் சார்ந்த நூலை எழுதப்போக, எழுத்து மீது ஆர்வம் பிறந்தது. பிறகுதான் கொலம்பியாவில் கிளினிக்கல் சைக்காலஜி பாடத்தை எடுத்து படித்தார். தொடக்கத்தில் அப்பா போலவே வணிகராக முயன்று பிறகு எழுத்தாளரானார். எழுபது நூல்களுக்கும் மேல் எழுதியுள்ள புகழ்பெற்ற உளவியலாளர். சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆல்பெர்ட் அட்லர், எரிக் ஃப்ரோம் ஆகிய உளவியலாளர்களின் பணி மீது ஈடுபாடு கொண்டவர். இவரது ரெப்ட் சிகிச்சை முறை மிக பிரபலமான ஒன்று. 


முக்கிய படைப்புகள்


1957 how to live with a neurotic


1961  a guide to rational living 


1962 reason and emotion in psychotherapy


1998 optimal aging


tenor.com





கருத்துகள்