ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா
என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.
வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங்கதேசத்தில் பிரதமருக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தியது. இதில் ஏராளமான அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறை, பாதுகாப்பு படை போராட்டத்தை அடித்து உதைத்து கலைத்தது. இதில் மக்கள் நிறையப் பேர் கொல்லப்பட்டனர். தேசியவாத கட்சி பிரபலங்கள் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. இந்த கட்சி, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் கூட ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது.
கடந்த இருமுறை நடந்த மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தேசியவாத கட்சி மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் புகார்களை கூறியுள்ளன. 82 சதவீத வாக்களிக்கப்பட்ட தேர்தலில் ஹசீனா 84 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றார். தேசியவாத கட்சியின் தலைவர், இருமுறை நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலேடா ஸியா உடல்நலிவுற்று வீட்டில் காவல்துறை கண்காணிப்பில் இருக்கிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கட்சி தொண்டர்கள் மீது நான்கு மில்லியன் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சுதந்திர பத்திரிகையாளர்கள், குடியுரிமை செயல்பாட்டாளர்களையும் அரசு சும்மாவிடவில்லை. பலரும் சிறையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
வங்கதேசத்தில் தொழில்துறை முதலீடு செய்த வெளிநாடுகளில் அமெரிக்காவே முதன்மையானது. தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்த பெரிய பொருளாதாரம் வங்கதேசத்துடையது. அமெரிக்கா, ஜனநாயகத்தன்மை பற்றி விமர்சனம் செய்ததோடு, இரண்டு மாநாடுகளுக்கும் ஹசீனாவை அழைக்கவில்லை. ஹசீனா, இதற்கு பதிலடியாக தனது நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் பேசினார். இத்தனைக்கும் நாட்டின் ஏற்றுமதி அமெரிக்காவையே பெரிதும் சார்ந்திருக்கிறது. மியான்மரில் ரோகிங்கியா முஸ்லீம்களை படுகொலை செய்தபோது ஒரு மில்லியன் மக்களை ஏற்றுக்கொண்ட நாடு, வங்கதேசம். ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவை கடுமையாக விமர்சனம் செய்த தைரியசாலி ஹசீனா.
2006ஆம் ஆண்டு 71 பில்லியனாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, 2022ஆம் ஆண்டு 460 பில்லியன் டாலர்களாக அதிகரித்ததில் பிரதமர் ஹசீனாவின் உழைப்பும் திட்டமிடலும் உண்டு. இன்று அங்குள்ள 98 சதவீத சிறுமிகள் தொடக்க கல்வியை கட்டாயம் கற்றுவிடுகிற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு நிகரான அளவில் டெக் துறை வளர்ந்து வருகிறது. சாம்சங் கூட தனது விநியோக நிறுவனங்களை சீனாவிலிருந்து வங்கதேசத்திற்கு மாற்றி இயங்கிவருகிறது. அதேசமயம் ஜனநாயகம், சுதந்திரமான பேச்சுரிமை, மனித உரிமைகள் என்பதில் எல்லாம் பெரிதும் முன்னேற வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியாக மட்டுமல்ல இயற்கையும் ஹசீனா அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. புயல் மழை வெள்ளத்தால் மட்டும் வங்கதேசத்திற்கு ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்படுகிறது. கடல்நீர்மட்டம் உயர்ந்துவருவது பற்றி ஹசீனா உலக நாடுகளிடம் பேசி நிதியுதவியை பெற்றுத்தர முயன்று வருகிறார். அதேநேரம் தனது ஆவாமி கட்சி சார்ந்து நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம், அவரது பேச்சுகளை விமான நிலையத்தில் ரிப்பீட் மோடில் ஒளிபரப்புவது என ஹசீனா செயல்பட்டு வருகிறார். வங்கதேச தேசியவாத கட்சியை தீவிரவாத கட்சி என்று எளிமையாக குறிப்பிடுகிறார். முஜிபுர் படுகொலையான பிறகு ராணுவத்தின் தலைவரான ஸியாவுர் ரஹ்மான் நாட்டின் தலைவரானார். இவரது கட்சிதான் வங்கதேச தேசியவாச கட்சி.
முஜிபுர், ராணுவ கலகத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பத்துக்கும் மேற்பட்ட உறவினர்களும் இறந்தனர். ஹசீனா அப்போது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் உயிர் பிழைத்தார். பிறகு, இந்தியாவிடம் அரசியல் அடைக்கலம் கேட்டுவந்துதான் தனது அரசியல்வாழ்க்கையை தொடங்கினார். நாட்டில் ஒரே கட்சி ஆட்சி என்பதுதான் முஜிபுர் ரஹ்மானின் ஆசையாக இருந்தது. அதைநோக்கி அவர் நகர்ந்து சென்றுகொண்டிருந்தார். தனது அப்பாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றவே ஆட்சியில் இருக்கிறேன் என்று சொல்லும் ஹசீனாவும் அந்த சர்வாதிகார பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்தா ராஜ்வன்சி
டைம் இதழ்
alzaseera
கருத்துகள்
கருத்துரையிடுக