தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

 











பிரேமண்டா இதேரா 


வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா


மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை. 


வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது. 


கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள். 


ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்குதான் ஷைலுவுக்கு காதலே பிரச்னையாகிறது. அவளுக்கு தன் அப்பாவின் வீம்பு, தற்பெருமை, குடும்ப கௌரவம் எல்லாம் தெரியும். ஆனால் நாயகன் முரளிக்கு காதலியை கூட்டிக்கொண்டு போய் மணம் செய்வதில் விருப்பம் இல்லை. பின்னாளில் அது காதலிக்கு மன வருத்தமாக மாறும் என நினைக்கிறான். 


ஷைலுவின் அப்பாவிடம் பேச வரும் தினத்தன்றுதான், அவளுக்கும் முரளிதர் என்ற நண்பரது மகனுக்கும் திருமண நிச்சயம் நடக்கிறது. முரளி ஷைலுவின் வீட்டில் அறுவை சிகிச்சை செய்த தாத்தாவை பார்த்துக்கொள்ள என்று நாடகமாடி கல்யாணத்தில் தன்னை மாப்பிள்ளையாக இருத்திக்கொள்ள நினைக்கிறான். அந்த நடவடிக்கை சாத்தியமானதா இல்லையா என்பதே கதை. 


நாயகனுக்கு எதிரியாக மாறுவது ஷைலுவின் அப்பா மனதிலுள்ள தற்பெருமை, குடும்ப கௌரவம், நன்றிக்கடன் என்பதுதான். தன்னைக்காக்க நண்பன் உயிரைவிட்டான் என்பதற்காக அந்த குடும்பத்தை காப்பாற்றி நிதியுதவி செய்கிறார். கூடுதலாக மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார். இதைபற்றி மகளிடம் கூட கேட்பதில்லை என்பதுதான் வருத்தம். இதனால் படத்தில் ஒரு கட்டத்தில் ஷைலு மனதில் தைரியமடைந்து, அப்பா என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கமாட்டார். வா நாம ஓடிப்போயிருவோம் என்றே கூறுகிறாள். ஆனால் முரளி அதற்கு மறுத்துவிடுகிறான். 


முரளிதர் பாத்திரத்தில் ஶ்ரீஹரி நடித்திருக்கிறார். அதிகாரத்தை பெரிதாக நினைப்பவர். போகுமிடத்தில் எல்லாம் மரியாதையை எதிர்பார்க்கிறார். இன்ஸ்பெக்டராக இருந்தும் கூட பாதுகாப்பு கோரி வரும் ஆதரவற்ற பெண்ணை வல்லுறவு செய்கிறார். அதிகாரத்தை சுயநலனுக்கு பயன்படுத்துகிற ஆள். ஷைலுவை மணம் செய்துகொள்வதில் பெரிய ஆர்வம் ஒன்றும் அவருக்கு இருப்பதில்லை. தனக்கு கொடுக்கப்படுவது தடையின்றி மரியாதையுடன் வேண்டும் என நினைக்கிறார். அவ்வளவுதான். பெண்ணோ, அவளின் உடலோ அவருக்கு பெரிய ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. அதிகாரத்தை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார். 


ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தெலுங்கு தெரியாத காரணமா என்று தெரியவில்லை. முடிந்தவரை குறைந்தளவு வசனங்களை வைத்திருக்கிறார்கள். அவரைப் பார்க்கவே அழகாக இருக்கிறது. மற்றபடி வெங்கடேஷ் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காதல் காட்சிகளை குழந்தை தனமாக எடுத்திருக்கிறார்கள். முரளியின் அம்மாவுக்கும், ஷைலுவுக்கும் உள்ள மனவேறுபாட்டை இணக்கமாகும்படி வேறு காட்சிகளை யோசித்து எடுத்திருக்கலாம். கதவில் கை நசுங்க அதை பார்த்த ஷைலு பதறி, காதலனைப் போலவே தனது கையையும் நசுக்கிக் கொள்கிறார். சுயவதை என்பது மனநல குறைபாடு. அது எப்படி காதலாகும்? இந்தக் காட்சியை முரளியின் அம்மா பார்த்து அவர்களின் காதலைப் புரிந்துகொள்கிறாராம். முடியல சாமி...அன்றைய கால சினிமா இலக்கணப்படி பாடல்களை வெளிநாட்டில் எடுத்திருக்கிறார்கள். 


பிரேமண்டே இதேரா என இறுதிக்காட்சியில் கூறி தலைப்புக்கு கௌரவம் சேர்க்கிறார்கள். ப்ரீத்தி ஜிந்தா என்றால் கன்னக்குழி விழும் நல்ல அழகி என்று மட்டுமே பார்வையாளர்களின் மனதில் பதிகிறது. 



கோமாளிமேடை டீம் 


கருத்துகள்